வலையுலக நட்புகளின் வாழ்த்துகளையும், ஆசிகளையும் வேண்டி ..!


சொன்னவுடன் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மதுக்கூர் பெரிய ஊரில்லை. தஞ்சை மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்று. அங்கே நகைத் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாத மிகச் சாதாரண குடும்பம்.

+2 முடித்து கோவையில் 3 மாதம் மெஷின் கட்டிங் டிரைனிங் பிறகு அங்கேயே 1500 ரூபாய் சம்பளத்தில் வேலை . காந்தி பார்க் - பொன்னையராஜபுரம் அருகில் ராசி பில்டிங் என்ற ஒரு மேன்ஷன் மாதம் 250 ரூபாய் வாடகையில் ஜாகை. நாஸ் தியேட்டர் அருகில் ஒரு மாடியில் நல்ல மெஸ் மாதம் 450 ரூபாய்க்கு மூணு வேளை சாப்பாடு போட்டார்கள் கிட்ட தட்ட இரண்டரை வருடம் கோவை வாசம்தான்.

அதன் பிறகு சொந்த ஊர்... கடுமையாக போராடி நகைக்கான கட்டிங் மெஷின் வாங்கி சொந்த கடை. ம்கூம் விளங்கவில்லை வேலை வாய்ப்பு இல்லை இருக்க இருக்க கடன்தான் அதிகரித்தது. மெஷினை ஊரிலேயே வைத்து விட்டு. சென்னை பட்டணம் விஜயம்.

அண்ணன் சின்ன வயதிலேயே சென்னையில் செட்டில். அவருடன் நகைக்கு கல்பதிக்கும் தொழில் பழகினேன். அண்ணன் புதிதாய் ஒரு தொழில் தொடங்க பலத்த நஷ்ட்டம். மீண்டும் கடன் போராட்டம். கடும் சோதனை.

ஊரில் இருக்கும் மெஷினை கொண்டுவந்தால் விற்று எதாவது ஒரு சிறிய கடனையாவது அடைக்கலாம் என்ற எண்ணத்தில் சென்னைக்கு மெஷினை கொண்டுவந்தாயிற்று. அதும் முடியவில்லை.அடிமாட்டு விலைக்கு கேட்க விற்க மனமில்லை.

அப்போது மிஷினை வீட்டிலேயே செட் செய்து சின்ன சின்ன வேலைகள் செய்து எளிய ஒரு வருமானம். அதன் பின்னர் மாத வாடகை 250 க்கு சிறிய கடை பிடித்து ஒரு பழைய சைக்கிளுடன் துவங்குகிறேன் என் பயணத்தை..1998 ல்.! மெல்ல மெல்ல பிக்கப் ஆனது . அதன் பிறகு வேலை வேலை வேலைதான்..! எதிர்பார்க்காத அளவுக்கு வேலை. காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி வெறித்தனமாக இரவு பகல் என வேலை பார்த்தேன்.! துணைக்கு யாருமில்லை நானே தொழிலாளி ,நானே முதலாளி..!

என்னை பொறுத்தவரை அதிஷ்ட்டம் என்பது யாதெனில் முழுக்க முழுக்க உழைக்க வாய்ப்பு கிடைப்பதுதான்.! ஒரு மெஷின் இரண்டு மெஷின் ஆனது வேலைக்கு ஆள் வைத்து கொண்டேன். நிழல்களின் நாடகம் எல்லாம் நிஜங்களின் தரிசனம் ஆனது.! பெரிய கடை பிடித்தேன் மேலும் சில மிஷின்கள்
வாங்கினேன் .ஆட்களும் வைத்து கொண்டேன் ..!

அதன் பிறகு கல்யாணம் 2002ல். 2003 ல் முதல் பெண்குழந்தை நான்காண்டு இடைவெளியில் அடுத்த பெண் குழந்தை .லோ கிளாஸ் பொருளாதார நிலையில் இருந்து கடை வாடகை,வீட்டு வாடகை,ஆட்கள் சம்பளம்,வீட்டு செலவு என மிடில் கிளாஸ் சராசரியில் வந்து நிற்கிறேன்.பொருளாதார பாதையில் கடந்த 2,3 ஆண்டுகளாக பெரிய ஏற்றம் எதுமில்லாமல் சமவெளி பயணம்தான்.


தற்போது..!

எனக்கு ஆரம்ப காலம் முதலே ரத்தினக்கல் வியாபாரத்தில் அனுபவம் உண்டு. மேலும் துளியூண்டு ஜோதிட அறிவும் உண்டு. அந்த அனுபவ அடிப்படையில் என் கடையிலேயே என் சின்ன மகள் அட்ஷயநந்தினி பெயரில் அட்சயா ஜெம்ஸ்&ஜுவல்ஸ் என்று உயர்தர ரத்தினகற்கள்,முத்துமாலை,பவழமாலை முதற்கொண்ட அனைத்து வகை ரத்தின மாலைகள், மற்றும் உப ரத்தின கற்களின் விற்பனையை துவங்குகிறேன்.



மேலும் ஆர்டரின் பேரில் நகைகள் செய்து கொடுக்கவும் திட்டமிட்டுள்ளேன்.! எனது இந்த புதிய முயற்சி செழிக்கவும் வெற்றி அடையவும் தங்களின் மேலான வாழ்த்துகளையும் ,ஆசிகளையும் வழங்குங்கள் நண்பர்களே...!



....................................................

>

ஜாதகமும் .! கற்பு நெறியும்...!

ஒருவரின் ஜாதகத்தை அவர் குணம்,மற்றும் ஒழுக்கநெறிகளை துல்லியமாக கணித்துவிட முடியும் என சொல்ல படுகிறது .அதைவிட ஜாதகத்தை வைத்து ஒரு பெண் கற்புடையவளா அடுத்த ஆண்களை கவரும் எண்ணம் கொண்டவளா என்று கூட துல்லியமாய் சொல்லிவிட முடியுமாம் ..!

எனக்கும் கொஞ்சம் ஜோதிடம் தெரியும் என்பதால் கொஞ்சம் அலசலாம்.!

ஒருவரின் ஜாதகத்தை பார்த்து...

இவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர்
இவர் நல்ல பேச்சாளர்
இவர் கோபக்காரர்
இவர் மிகவும் உணர்சிவசபடுபவர்
இவருக்கு காதல் உணர்வு அதிகம்
இவருக்கு காம உணர்வு அதிகம்...!

இப்படியெல்லாம் சொல்லிவிட முடியும்தான் ..! அவை உண்மைதான் ..!
அவை சரியாகவே இருக்கும் ..!

ஆனால் ...!

நாம் ஜாதகம் கணித்து சொல்வது மிருகங்களுக்கு அல்ல ..! சிந்திக்கும் ஆற்றல் கொண்டு செயல்படும் மனிதர்களுக்கு ..! ஒரு நகைச்சுவை உணர்வு கொண்டவன் எப்போதும் ஜோக்கடித்துகொண்டோ சிரித்து கொண்டோ இருக்க மாட்டான் அவனுக்கு இடம் பொருள் ஏவல் தெரியும் .! அதோடு ஜாதகத்தில் ஒருவன் நகைச்சுவை உணர்வு மிக்கவனாக காணப்பட்டால் சராசரியைவிட சற்று கூடுதல் உணர்வுடன் இருப்பான் அவ்வளவுதான் ..!

அதே போல ஒரு பேச்சாளன் என்றால் அவனுக்குண்டான இடத்திலேயே அவன் தனது பேச்சாற்றலை காட்டுவான் .


அதிக காதல் உணர்வு கொண்டவனும் அப்படித்தான் ..!

அதிக காம உணர்வு ஒருவருக்கு ஜாதகப்படி இருந்தால் அவர் அதில் ஈடுபடும் போது அதிக ஆர்வம் காட்டுவார் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும்
அது அவர் தனிப்பட்ட ரகசியம் ..!

ஒரு பெண்ணின் ஜாதகத்தை வைத்து அவள் ஒழுக்க நெறியை துல்லியமாக சொல்லிவிடமுடியுமா இதுதான் இப்போதைய கேள்வி..!

ஒரு பெண்ணின் குடும்பம்,அவள்பெற்றோர் வளர்ப்பு,அவள்,கற்ற கல்வி அவளது நட்பு வட்டம்,இவற்றை வைத்துதான் அவள் நடத்தையை தீர்மானிக்க வேண்டும். ஜாதகரீதியில் பல உணர்வுகள் ஒருவருக்கு இருக்கலாம் ஆனால் நம் உணர்வுகளை நிர்வகிப்பது நம் புத்திதானே..? நமக்கு எவ்வளவோ முறையற்ற ஆசைகள் தோன்றும்...!நாம் ஆசைப்பட்ட அனைத்தையும் பெற நாம் முயற்சி செய்கிறோமா? இல்லையே..! அறிவுக்கு தெரிகிறதல்லவா? எது சரி எது தவறு என..! ஜாதக பலன் சொல்லும்போது தற்காலத்திற்க்கு ஏற்றவாறு அனுபவரீதியாக கொஞ்சம் விஷய ஞானத்தோடு சொல்ல வேண்டும். ஜோதிட புத்தகத்தில் படித்ததை அப்படியே வாந்தி எடுக்க கூடாது..! ஜோதிடம் தோன்றியது எந்த காலகட்டத்தில்..? அந்த கால கட்டத்தில் மக்கள் எப்படி இருந்து இருப்பார்கள் இப்போது எப்படி என்பதையெல்லாம் ஆய்ந்து பார்க்க வேண்டும்..!

இரவு நேரத்தில் பேருந்தில் செல்கிறோம் சிறுநீர் முட்டி கொண்டு வருகிறது பேருந்து இன்னும் சில மணிநேரத்திற்க்கு பிறகுதான் நிற்க்கும் நாம் என்ன செய்கிறோம் அங்கேயே சிறுநீர் கழித்துவிட நாம் என்ன மிருகமா..? பொறுத்து கொள்வதில்லை..? அதுபோலதான் நம் உணர்வுகளை புத்தியால் கட்டி நெறிபடுத்தப்பட்ட ஒரு நாகரீக உலகில் வாழ்ந்துகொண்டு இருகின்றோம்.

ஜோதிடம் பொய் என்றோ கிரகங்களின் வலிமை பொய் என்றோ சொல்லவில்லை அறிவுடன் சிந்திக்க தெரிந்த,முயற்சியுடன் உழைத்து போராட தெரிந்த மனித சக்தியை முழுவதும் கிரகங்கள்தான் வழிநடத்துகின்றன என்பதை ஏற்றுகொள்வதுதான் சிரமமாக உள்ளது.

ஒரு ஜோதிட விதி..!

ஒருவன் ஜாதகப்படி எல்லா கிரகங்களுமே சாதகமில்லாமல் கெடு பலனை கொடுக்கும் நிலையில் இருந்தாலும் அந்த நிலையை எதிர்த்து அந்த மனிதன் கடினமாக உழைத்தால் அந்த கிரகங்களே மனம் இரங்கி நன்மை செய்யுமாம்.! அதாவது ஜோதிடமே சொல்கிறது மனித சக்திதான் சிறந்தது என்று..!

மந்திரம் கால் மதி முக்கால்..!

>