''என் அப்பா வெளிநாட்டுல இருக்காரு''

என் அப்பா வெளி நாட்டில இருந்தது இல்ல !பாம்பே இருந்தார் ஆனா அது வெளி நாட்டில இருந்தது போல தான். ஒரு தகப்பன் வெளிநாட்டில
இருக்கும் போது அவங்க வீட்டில என்ன என்ன பிரச்சனைகள் வரும் அப்படிங்குறத என்னால ஓரளவு விளக்க முடியும்.

எங்க ஊரு பக்கம் வெளி நாட்டில வேலை செய்றவங்க அதிகம்.

சென்னை விமான நிலையம்

ஒரு நண்பர் வெளிநாட்டில இருந்து வர்றதால அழைக்க போய் இருந்தேன். விமானம் தாமதம், அதுனால சும்மா அப்படியே ஒரு ரவுண்டு சுத்தி
பார்க்கலாம்னு போனப்போ நான் கண்ட காட்சி!

ஒருத்தர் வெளிநாடு போறார் அவர வழி அனுப்ப அவங்க அம்மா,அப்பா,மனைவி, பத்து வயசு இருக்கும் ஒரு மகன், ஏழு வயசு இருக்கும்ஒரு மகள்.

அவர் மனைவி கண்ணெல்லாம் கலங்கி நிக்குறாங்க ஏக்கமான பார்வையோட அவங்க புள்ளைங்க அவங்க அம்மாதான்பேசுறாங்க! தம்பி! ஒடம்ப நல்லா கவனிச்சுக்கணும் நேரத்துக்கு சாப்பிடனும், இங்க வீட்டுலையே நேரத்துக்கு சாப்பிட மாட்ட அங்க என்ன பண்ண போறியோ? அப்படி சொன்னதும் அவங்க மனைவி லேசா தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாங்க! அம்மா அழுவுறதபார்த்த புள்ளைங்களும் அழ ஆரம்பிக்க அவர் அப்பா, சரி கிளம்புற நேரத்துல அழ கூடாது அப்படின்னு லேசா அதட்டுறார்.

வெளிநாடு போற அவர பார்க்குறேன் மனுஷன் அப்படியே நொந்துபோய் நிக்குறார் பாவமா இருக்கு அவர பார்க்க ! அவங்க அம்மா சொல்லுறதுக்கு தலைய ஆட்டுறார் புள்ளைங்கள பார்த்து நல்லா படிக்கணும் அம்மா பேச்ச
கேட்டு நடக்கணும் அப்படிங்குறார்.

பேசிகிட்டு இருக்கும் போதே அவர்கூட கிளம்புறவங்க வந்துட்டாங்க வாங்கண்ணே நேரமாச்சு உள்ள போக வேண்டியதுதான் அப்படின்னு
சொல்ல! மனசே இல்லாம கிளம்பி போறார். அவர் மனைவி அவர்கிட்ட போய் என்னமோ சொல்லுறாங்க அவரும் தலைய ஆட்டுறார் பிரியா விடை பெற்று கிளம்பி போறார்.

இத பாக்கும் போது எனக்கு என்ன தோணிச்சுன்னா ? கூழு,கஞ்சி, குடும்பத்த ஓட்டினாலும் இப்படி பிரிய கூடாது என்ன வாழ்க்கை இது ? குடும்பத்த பிரிஞ்சு வாழ்றது ஒரு வாழ்க்கையா ?அப்படிதான் தோணிச்சு!

நான் நெனைச்சது சரிதானா ?

எங்க ஊரு பக்கம் வெளிநாட்டில வேலை செய்றவங்க அதிகம்னு சொன்னேன்ல? அவங்க நிலைல இருந்து யோசிப்போம். இப்போ நான் என்னையே எடுத்துக்கிறேன் நான் குடும்பத்தோடதான் இருக்கணும் வெளிநாடு போக கூடாதுஅப்படிங்குற கொள்கையோட இருக்குறேன்.

இப்போ என் சொந்தகாரங்க,என் ஊர்காரங்க, இவங்கள்ல என்னைபோலவே இருக்குற இவங்க வெளிநாடு போய் நல்லாசம்பாதிச்சு நல்ல வீடு கட்டி நல்ல வசதியா ஆயிடுறாங்க.இப்போ எனக்கும் தோணுது வெளிநாடு போகனும்னுஆனா..! நான் சமாதான படுத்திகிறேன் குடும்பத்தோடவாழ்றதுதான் வாழ்க்கை அப்படின்னு என் மனைவியையும் சமாதான படுத்துறேன். கொஞ்ச நாள்ல குழந்தை பிறக்குதுஇப்போ எங்களுக்கு என்ன தோணும் மத்த புள்ளைங்க போலவேஎங்க புள்ளையையும் நல்ல வசதியா வளர்க்கணும் அப்படின்னு.

எங்க ஊர் மாதிரி ஒரு சின்ன நகரத்துல மாசம் ஒரு பத்தாயிரம்ரூபாய் சம்பாதிக்கிறதே பெரிய விஷயம்! எங்க பிள்ளை அடுத்தவங்கல பார்த்து ஏங்கி போய்ட்டா? இப்போ நான் தானாவே வெளிநாடு கிளம்பிடுவேன்.

இப்போ வெளிநாட்டில வேலை செய்கிற எல்லா ஆண்களுமே தன் மனைவிகுழந்தைகளுக்காக தனது எல்லா சந்தோசங்களையும் தியாகம்
செய்ஞ்சவங்கதான்அந்த ஆண்கள வீட்டுல இருக்குற மனைவி மக்கள் நல்லா புரிஞ்சுக்கணும் அவங்க மனைவி மக்களை நினைக்காத நாளே இருக்காது.

அதும் கல்யாணம் ஆனா புதுசுல பிரியுறாங்க பாருங்க அவங்க நிலைமை இன்னும் சோகம் . நான் என் நண்பர்கள் சிலரை பார்த்து இருக்கேன்
அவங்க தங்கள் குழந்தைகளிடம் ''மழலை இன்பத்தை'' அனுபவித்ததே கிடையாது!

குழந்தை பிறந்து இரண்டு வருஷம் கழித்து பார்க்கும் தந்தைகளும் உண்டு ஒரு வயசு, இரண்டு வயசுல பிள்ளைங்கள பிரிஞ்சு நாலு வருஷம் கழித்து
பார்க்கிற தந்தைகளும் உண்டு.

வெளிநாட்டில் இருந்து வரும்போது

வெளிநாடு போயிட்டு வரும் நபருக்கு வீட்டில் ராஜ மரியாதைதான் அவர் கேட்டதெல்லாம் கிடைக்கும் இயல்பு நிலை திரும்ப சில நாள் ஆகும்.

இப்போ வீட்டில் உள்ளவங்க இத கவனிங்க

அப்படி இயல்பு நிலை திரும்பும்போது கணவரின் கை இருப்பும் குறைய ஆரம்பிக்கும்.கை இருப்பு குறைவதால் மரியாதை குறைகிறது என்ற எண்ணம் அவருக்கு வராமல் மனைவி கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இப்படி மனைவி மக்களுக்காக எல்லா இன்பங்களையும் தொலைத்து வாழும் கணவனை தெய்வமாக போற்ற வேண்டும்.

கணவனை பிரிந்து (வாடும்) வாழும் மனைவி

வெளி நாடு செல்லும் கணவன் நிலை அப்படி இருக்க கணவனை பிரிந்து இங்கே இருக்கும் மனைவியும் பிள்ளைகளும் அனுபவிக்கும் சோகங்கள் ஒன்றும் குறைந்தது அல்ல ! தீபாவளி ,பொங்கல்,ரம்ஜான் எதுவாகட்டும்எல்லோரும் குடும்பதலைவருடன் கொண்டாடும் போதுதன் கணவர் இல்லாமல் தந்தை இல்லாமல் அவர்களும் ஒரு இருக்கமான நிலையிலேயே வாழ்கிறார்கள். அதோடு படிக்கும் பிள்ளைகளை ஒரு தாய் தனியாக கவனிப்பது பெரிய கஷ்ட்டமான காரியம். தாய்க்கு, தாயாகவும்,தந்தைக்கு தந்தையாகவும் வளர்க்க வேண்டும். மேலும் பல சொல்ல முடியாத துயரங்கள் இப்படி கணவனை பிரிந்து குடும்பத்தை கவனிக்கும் அவர்களைவணங்கியே ஆக வேண்டும்.

தகப்பனை பிரிந்து வாழும் பிள்ளை

நான் இந்த பதிவினை எழுதிய நோக்கம் இதுதான் நான் தகப்பனை பிரிந்து வாழ்ந்தவன். என் நிலையை பாருங்கள் எனக்கு சின்ன வயதில் ஒன்றும்
தோன்றவில்லை ஆனால் ஒரு பதி மூன்று வயதிற்கு பின்னர் என் அப்பா ஊரில் இருந்து வரும்போது மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.ஆனால்,
நாள் செல்ல செல்ல அவர் கண்டிப்பு எனக்கு பிடிக்கவில்லை. திடீரென்று வந்து கண்டிப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை அவர் எப்படா கிளம்புவார் என நினைக்க தொடங்குவேன்.

கொஞ்சம் நினைத்து பாருங்கள் ஒரு மனிதன் தன் பிள்ளைக்காகவும் குடும்பத்துகாகவும் தனியே கஷ்ட்ட படுகிறார் ஆனால் அவர் மகன் அவர்
எப்போடா கிளம்புவார் என நினைக்கிறான்? இங்கே நான் குற்றவாளிதான்.
என்னை போல ஒரு மகன் உருவாக கூடாது என்பதுதான் இந்த பதிவின் முக்கிய நோக்கம்.

தகப்பன் வெளி நாட்டில் இருக்கும் போது பத்து வயதிற்கு மேற்பட்ட மகனை
மிக கவனமாக வளர்க்க வேண்டும். தகப்பன் அருகில் இருப்பது போன்ற உணர்வோடு அவனை வழி நடத்த வேண்டும். முன்பு என் காலத்தில்
மாதம் இருமுறை கடிதம் மட்டுமே தொடர்பு ஆனால் இப்போது அப்படி அல்ல சிறிய விசயங்களை கூட கணவரிடம் கேட்டு கொள்ளலாம் கணவர்
பிள்ளையை எப்படி வளர்க்க விரும்புகிறாரோ அதன் படி தாய் செய்ய வேண்டும். கொஞ்சம் கவனம் தவறினால் தகப்பனுக்கும் பிள்ளைக்கும்
இடையில் பெரிய இடை வெளி வந்து விடும் பிறகு இருவருக்கும் நடுவில் தாயார் மாட்டிக்கொண்டு கஷ்ட்டப்பட நேரிடும்.


--------------------------------------


>

20 comments:

நிலாமதி said...

தற்கால் வாழ்கையில் தேவைகள் அதிகம். அதனால் வெளி நாடு போய் சம்பாதிக்க்வேண்டியதாய் போச்சு...அதனால் சில் இன்பங்க்களை இழக்கவும் வேண்டி இருக்கிறது. மனங் களை பக்குவ படுத்தினால் .....புரிந்து கொண்டால்...சாத்தியம். ஊரோடு ஒத்துஒடனும் போல தான் இருக்கு .

ibza said...

அருமையான பதிவு நண்பரே. வெளி நாட்டில் வாழும் எங்களைப் போன்றவர்களின் உணர்வுகளை கண்ணாடி பிம்பம் போல் இப்பதிவில் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நன்மனம் said...

தத்ரூபமான நிதர்சனம்.

Chitra said...

கொஞ்சம் நினைத்து பாருங்கள் ஒரு மனிதன் தன் பிள்ளைக்காகவும் குடும்பத்துகாகவும் தனியே கஷ்ட்ட படுகிறார் ஆனால் அவர் மகன் அவர்
எப்போடா கிளம்புவார் என நினைக்கிறான்?

....ரொம்ப அருமையாக எல்லா பக்கமும் யோசித்து - எல்லா உறவுகளின் மன நிலையையும் உணர்ந்து எழுதி இருக்கிறீங்க. உண்மைதான்...... வாழ்க்கைக்கு தேவையான பணமும் பாசமும் வேண்டிய நிலையில், ஒன்றை பிரிந்து - ஒன்றை தொடர்ந்து - ஒன்றை தியாகம் செய்து வாழ்வது மிகவும் கடினமான சூழ்நிலைதான்.

vasu balaji said...

மிக அருமையான தேவையான ஆலோசனைகள் ஜீவன்.

govindasamy said...

அருமையான பதிவு
unmaivrumbi,
Mumbai.

ஹேமா said...

உண்மை ஜீவன்.பணத்தேவைக்காக அன்றைய சூழ்நிலையை மட்டுமே நினைத்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்கிறார்கள்.அதனால் எதிர்காலப் பாதிப்புக்கள் நிறையவே.
பிள்ளைகள் அப்பா இருப்பதைப் போல அம்மாவுக்கும் பயப்படுவதில்லை.அம்மாவும் செல்லம் கொடுப்பது கூட.அதேபோல மனைவியானவளுக்கும் குடும்ப பாரமும் மன அழுத்தமும்.

நான் எங்களவர்களை நிறையவே கண்டிருக்கிறேன்.ஆனால் காலங்கள் கடந்ததால் உறவுகளை விட்டுப் பிரிந்திருந்தாலும் ஓரளவு தங்கள் தங்கள் குடும்பகளைத் தங்களோடு வைத்திருக்கிறார்கள்.

உங்கள் பதிவு நிறையப் பேரை யோசிக்க வைத்திருக்கும் !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இன்றைய காலத்துக்குத் தேவையான பதிவு. நன்றாக அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள்.
இந்தச் சுழலில் சிக்கி பல குடும்பங்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றன.

நட்புடன் ஜமால் said...

என் தந்தை என் அருகிலேயே இருந்தார்
அவர் சம்பாதிக்கையில்

நான் சம்பாதிக்க துவங்கியதிலிருந்து அவர் அருகில் என்னால் இருக்க இயலவில்லை :(

அன்புடன் நான் said...

உங்க புரிந்துணர்வுக்கு மிக்க நன்றிங்க

சொந்த நாட்டில் தன்னிறைவோடு... அல்லது குறைந்தபச்ச பொருளாதாரத்தோடு இருந்திருந்தா நாங்க இப்படி ஒரு (தற்காலிக) வாழ்க்கையை தேர்ந்தெடுக்க மாட்டோம்.

பிரிவு கொடுமைதான்...
என்ன ”நான் உனக்காகதான் பிரிகிறேன்” என்ற ஒரு புரிந்துணர்வுதான்.... எங்களை
வாழவைக்கிறது.

நீங்க சொன்ன எல்லா துயரமும் எனக்கு ஏற்பட்டது தான்....
இருந்தாலும் ... இது என் தனி ஒருவனுக்கா?

உங்களின் புரிந்துணர்வுக்கு மீண்டும் நன்றிங்க..... உங்க பார்வையை வியக்கிறேன்.
நன்றி.

ஜெயந்தி said...

குடும்பத்திற்காக அவர்கள் பிரிந்து வாழ்வது சிரமமான விஷயம்தான். நீங்கள் அனைத்துப் பக்கத்து சிரமங்களையும் கூறியுள்ளீர்கள்.

தமிழ்போராளி said...

அருமையான பதிவு தோழரே! படித்து முடித்ததும் கண்கள் குளமாகிவிட்டன. தொடர்ந்து இது போன்ற கட்டுரைகள் எழுதவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்...
என்று நன்புடன்..வீரா

அமிர்தவர்ஷினி அம்மா said...

விரிவான பார்வை

ப்ரியமுடன் வசந்த் said...

:((

:((

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல
வாசிக்க முடியலண்ணா கண்ணுல தண்ணி முட்டுது...

நன்றி..

Rithu`s Dad said...

அருமையான பதிவு..

//என் தந்தை என் அருகிலேயே இருந்தார்
அவர் சம்பாதிக்கையில்

நான் சம்பாதிக்க துவங்கியதிலிருந்து அவர் அருகில் என்னால் இருக்க இயலவில்லை :(//

இதை நானும் வழிமொழிகிறேன்.. :(

SUFFIX said...

உண்மை தான் நண்பரே :(

Geetha6 said...

absolutely true!
good post.

டவுசர் பாண்டி... said...

கொஞ்சம் கொஞ்சமா பதிவர் என்ற நிலையில் இருந்து எழுத்தாளர் நிலைக்கு உயர்ந்துட்டு இருக்கிங்க...

எதிர்காலத்தில் நிறைய ஆக்கங்கள் எழுதிட வாழ்த்துகள்.

Raji said...

அருமையான பதிவு அண்ணா!!!
கணவனை பிரிந்து மனைவியும்,
மனைவியை பிரிந்து கணவனும்,
படும் துயரங்களை மிக நன்றாக
கூறியுள்ளீர்கள்....ம்ம்ம்...
என்ன செய்வது...குழந்தைகளின்
சிறப்பான எதிர்காலத்துக்காக
சில தியாகங்களை
செய்யத்தான் வேண்டி இருக்கிறது.
என்றும் அன்புடன்,
Raji

Thamira said...

எல்லோரும் எளிதில் உணரக்கூடிய விஷயம்தான் எனினும் முடிவில் ஒரு அழகான செய்தியுடன் முடித்திருக்கிறீர்கள்.