''வீட்ட விட்டு ஓடிபோய்''

நான் எட்டாவது,ஒன்பதாவது படிக்கும் போது ஒழுங்கா
பள்ளிக்கூடம் போக மாட்டேன்.நம்ம குடும்பம் வந்து
பரம்பரையா நகை தொழில் செய்யிற குடும்பம் அதுல
வந்து பசங்கள அதிகமா படிக்க வைக்க மாட்டங்க.(அப்போ)
ஒரு எட்டாவது,ஒன்பதாவது முடிச்சோன எதாவது
ஒரு நகை பட்டறைல சேர்த்து விட்டுடுவாங்க
அதேபோல அந்த வயசு பசங்களுக்கும் வேலைல
ஒரு ஆர்வம் வந்துடும் பள்ளிக்கூடம் போக மனசு
வராது. எனக்கும் அப்படித்தான் வேலை கத்துக்க
ரொம்ப ஆர்வம். என் வயசு நண்பர்கள் எல்லாம்
மாயவரத்துல ஒருத்தன்,கும்பகோணத்துல ஒருத்தன்
ஒரத்த நாட்டுல ஒருத்தன்னு வேல கத்துக்க
போய்ட்டானுங்க தீபாவளி,பொங்கல்னா வருவாங்க
அவனுங்களே செம்பு , வெள்ளி இதுல எல்லாம் ஏதாவது
மோதிரம் போல நகை செய்ஞ்சு காட்டுவாங்க எனக்கு
வேலை கத்துக்க போய் ஆகனும்னு வீட்டுல ஒரே
பிரச்சனை பண்ணுறேன்.


அப்போ என் அப்பா பம்பாய் ல இருந்தார் அவரும்
நகை வேலைதான். அவர் கண்டிப்பா சொல்லிட்டார்
நகை தொழில் எல்லாம் வேணாம் படிச்சுதான்
ஆகணும் அப்படின்னு.எனக்கு படிக்க புடிக்கல!


அப்பாவும் ஊர்ல இல்ல அம்மா பேச்ச கேக்காம
பள்ளிக்கூடம் போகாம ஊர் சுத்திகிட்டு இருந்தேன்.
அப்போ எங்க வாத்தியார் சீனிவாசன் இருந்தார்.
அவர் வந்து நான் சும்மா சுத்திகிட்டு இருக்குறத
கேள்விப்பட்டு ரெண்டு மூணு பசங்கள அனுப்பி
கூட்டிகிட்டு வர சொல்லி அனுப்பினார்.நான்
போகல.வந்த பசங்க சொல்லுறாங்க டேய்!இப்போ
நீ வராட்டி சாரே இங்க வருவார் அப்படின்னு
பெரிய இவனுங்க மாதிரி சொல்லுறாங்க!

என் அம்மா வந்து தம்பிங்களா!அவன புடிச்சு
துக்கிக்கிட்டு போங்க அப்போதான் வருவான்
அப்படின்னு சொல்ல எனக்கு என் அம்மா மேல
செம கோவம் ! அந்த தடிமாட்டு கம்னாட்டிங்களும்!
என்னைய வலுகட்டாயமா கூட்டிகிட்டு போய்ட்டாங்க.


சீனிவாசன் சார்! சொல்லுறார் ஏன்டா!உன்னைய
கேக்க ஆளு இல்லன்னு ஊர் சுத்துரியா?
மரியாதயா ஸ்கூல் வராட்டி தொலைசுருவேன்
ராஸ்கல்! முதுகுல நாலு சாத்து சாத்தினார் !
நான் சொல்லுரவரைக்கும் கீழ எறங்க கூடாது
அப்படின்னு பெஞ்ச் மேல நிக்க சொல்லிட்டார் !
அவர் வெளில போகும் போது நான் கீழ எறங்காம
இருக்க ரெண்டு பசங்க காவல் வேற!


பெரிய அவமானம் எனக்கு சில பசங்க சிரிக்கிறாங்க!
என் அம்மா மேலயும் கோவம்!முடிவு பண்ணிட்டேன்
இனிமே வீட்டுக்கு போக கூடாது.எங்கயாவது
ஓடி போய்டனும்னு.

அந்த பெஞ்ச் மேல நின்னுகிட்டே கற்பனை பண்ணுறேன்
எங்கயாவது ஓடி போய்டனும். பெரிய ஆளான பிறகு
நெறைய சம்பாதிச்சு கிட்டு கோட் சூட், கூலிங் கிளாஸ்
எல்லாம்போட்டுக்கிட்டு நெறைய பணத்தோட கார் ல
வந்து எறங்கனும் அப்படின்னு .


ஸ்கூல் முடியிற நேரம் சார் வந்து நெறைய
அறிவுரை சொல்லுறார் நாளைக்கு காலைல
என்ன வந்து பார்க்கனும்னுபாசமா சொல்லுறார் .
அந்த ஒரு நிமிஷம் எனக்கு அவர ரொம்பபுடிச்சது .

ஆனாலும் ஓடிபோற முடிவுல எந்த மாற்றமும் இல்ல
அன்னிகின்னு பார்த்து என்கிட்டே மூணு ரூவாயோ?
நாலு ரூவாயோ? இருந்துச்சி ஒரு போஸ்ட் கார்ட்
வாங்கினேன்.''நான் வீட்ட விட்டு போறேன் என்ன
தேட வேண்டாம் '' அப்படின்னு எழுதி போஸ்ட்
பண்ணிட்டேன்.

பஸ் டாண்ட் போய் மன்னார் குடி போற பஸ் ல ஏறினேன்
காச எடுத்து எண்ணி பார்க்குறேன்,ஒருவேள திரும்பி
வர்ற மாதிரி இருந்தா ? பார்த்தா காசு பத்தல என்ன
செய்கிறது? பஸ் ஸ்டார்ட் ஆச்சு பயம் வந்துடுச்சி
டக்குன்னு எறங்கி வீட்டுக்கே போயிட்டேன்!


மறுநாள் காலைல அந்த பசங்க மறுபடியும் வந்துட்டாங்க
ஸ்கூல் போயிட்டேன்.இப்போ எனக்கு என்ன பயம்னா
நான் போட்ட அந்த லெட்டர்! அது வீட்டுக்கு போறதுக்கு
முன்னாடி எப்படியாவது போஸ்ட் மேன் கிட்ட வாங்கிடனும் !

மத்தியானம் பெல் அடிச்சதும் வேக, வேகமா போய்
வீட்டுகிட்டநின்னுகிட்டேன் .பார்த்தா போஸ்ட் மேன்
வரவே இல்ல .

சாயங்காலம் வீட்டுக்கு போறேன் பயந்துகிட்டே!
எதிர் வீடு,பக்கத்து வீடு யாரும் பாக்கி இல்ல
எல்லார்கிட்டயும் லெட்டர காட்டி சிரிச்சுகிட்டு
எங்கம்மா! எனக்கு எப்படி இருக்கும்?எப்படி
இருந்துசின்னு சொல்லவே வரல!

வீட்ட விட்டு ஓடிபோர மூஞ்சிய பாருங்கன்னு
எல்லாரும் ஒரே கிண்டல் ஐயோ! ஐயோ!
>