காந்திஜி செய்தது சரிதானா ?ரொம்ப வருசமா மனசுக்குள்ள ஒரு கேள்வி
கெடந்து அரிச்சுகிட்டே இருக்குது .

நாம வெளியில போகும்போது,அதாவது
ஒரு விசேசத்துக்கோ,வெளி ஊருக்கோ
போகும் போது எப்படி போவோம்?
என்னதான் நம்மகிட்ட போட்டுக்க
நல்ல துணிமணி இல்லாட்டியும் இருக்குறதுலேயே
நல்ல துணியா பார்த்து நல்லா துவைச்சு,
முடிஞ்சா அயன்பண்ணிதான் போட்டுக்கிட்டு
போவோம் .அதுல ஒரு தன் மானமும்,
சுய கவுரவமும் இருக்கு இல்லையா?

ஆனா!
நம்ம தேச பிதா!மஹாத்மா காந்தி!
நம்ம நாட்டில போட்டுக்க கூட துணி இல்லாம
மக்கள் சில இடங்கள்ல இருந்ததால,இனிமேல
நானும் சட்டை போட்டுக்க மாட்டேன், எல்லா
மக்களுக்கும் போட்டுக்கொள்ள உடை கிடைக்கிர
வரையில் இப்படித்தான் இருப்பேன்னு மேல் சட்டையே
போட்டுக்கல.அதுல நம்ம நாட்டு மக்கள் மேல அவர்
வைச்சு இருக்குற அன்பும்,மனிதாபிமானமும்
தெரிஞ்சது.

சரி!
அதேபோல சட்டையே போட்டுக்காம
உலகம் முழுவதும் சுத்தியும் வந்தார்.
அப்போ அதை பார்த்த வெளிநாட்டுகாரங்க
நம்ம இந்திய மக்களை பத்தி என்ன நினைச்சு
இருப்பாங்க? இந்திய மக்கள் எல்லோரும்
போட்டுக்க கூட துணி இல்லாத பஞ்ச,பரதேசிங்க
அப்படின்னு நினைச்சு இருக்க மாட்டாங்களா ?

அதுனால! இந்திய மக்களோட தன்மானமும்
சுய கவுரவமும் பாதிக்க பட்டு இருக்காதா ?


நான் கேக்குறது, சரியா? தப்பா?
>

இட்லியும்,கறிகுழம்பும்


காலைல அஞ்சுமணிக்கு எந்திரிச்சு,
வெது வெதுன்னு சுடுதண்ணி போட்டு,
நல்லா எண்ணை தேய்ச்சு குளிச்சுட்டு,
காலைலேயே சுடச்சுட இட்லி அதுக்கு
தொட்டுக்க கறி குழம்போட சாப்டுட்டு,
சந்தோசமா கொண்டாடுங்க தீபாவளிய!!!
>

சீமான், அமீர் கைது!


இரண்டு இயக்குனர்கள் இன்று ''நாயகர்'' களாக ஆனார்கள்
>

என் டெக்ஸ்டாப்ல

இப்போ இருக்குறது இவங்கதான் என் ரெண்டாவது பொண்ணு
அட்சய நந்தினி


முன்னாடி இருந்தது இந்தம்மாதான் முதல் பொண்ணு
அமிர்த வர்ஷிணி
ரெண்டுபேரும் சேர்ந்த மாதிரி ஒரு போட்டோ புடிச்சு வைக்கணும்

என்னை அழைத்த அமுதா அவங்களுக்கு நன்றி!!


நான் அழைக்கிறது!


சிம்பா
குடுகுடுப்பை
>

ஈழத் தமிழருக்கான ஆதரவு தமிழ்நாட்டில் மேலும் பலமடைய ....

இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது?
அங்கே நடைபெறும் போராட்டத்தில், தமிழ்
போராளிகளின் நோக்கம் என்ன? தமிழ் போராளிகள்
உருவானது ஏன்? இதையெல்லாம் மறுபடியும்
தமிழ் மக்களுக்கு (தமிழ் நாட்டில் உள்ள)
உணர்த்த வேண்டிய அவசியம்
ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன்.

இங்கே தமிழகத்தில் ஒரு தலைமுறை இடைவெளி
ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உதாரணமாக
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்
அவருக்கு ஒரு முப்பத்து இரண்டு வயது இருக்கும்.
அப்போது இலங்கை போராளிகள்,இலங்கை தமிழர்கள்
பற்றி பேச முற்படும் போது அவர் இலங்கை போராளிகளை
வெறுப்பதாக கூறினார்! அதற்கு அவர் கூறிய காரணங்கள்
மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது .

அப்போது நான் அவரிடம் கேட்டேன் இலங்கை போராளிகள்
உருவாவதற்கு முன்னர் சிங்கள ராணுவத்தினர் தமிழ்
மக்கள் மீது நடத்திய வன்முறை பற்றி உங்களுக்கு தெரியுமா?
என்று ? என்ன கொடுமை! அவருக்கு எதுவுமே தெரியவில்லை!
ஒரு இருபத்தி இரண்டு வயது இளைஞனை கட்டி போட்டு
அவன் கண்முன்னால் அவனது தாயை , சிங்கள நாய்கள்
கற்பழித்த கதை உங்களுக்கு தெரியுமா என கேட்டேன்?
...........தெரியவில்லை!

ஒரு கர்ப்பிணி தமிழ் தாயின் வயிற்றை கிழித்து!
வயிற்றில் உள்ள குழந்தையை எடுத்து வெட்டி கொன்ற
கதை தெரியுமா? என கேட்டேன்?அதுவும் அவருக்கு
..............தெரியவில்லை! ஆனால்! இதையெல்லாம் கேட்டு
அவர் கொதித்து போய்விட்டார்!
அப்போது நான் சொன்னேன்,சிங்கள ராணுவத்தினர்
செய்த அட்டூழியங்களை நான் உங்களுக்கு முழுவதும்
சொல்லவில்லை நான் முழுவதும் சொன்னால் நீங்கள்
நிம்மதி இழந்து விடுவீர்கள் என்று!


தற்போது முப்பது வயதிற்கு உள்பட்ட தமிழர்களுக்கு
இலங்கை தமிழ் போராளிகள் உருவான கதையை
சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .

இப்போது தமிழகத்தில் உள்ள மக்கள் நினைத்து
கொண்டிருப்பது என்ன?'' இலங்கை தமிழர்கள்
தனி நாடு கேட்டு போராடுகிறார்கள்'' அவ்வளவுதான்

ஆனால் !!

ஏன்? எதற்கு?இலங்கை தமிழர்களுக்கு என்ன
பாதிப்பு ஏற்பட்டது ? என்ற எந்த விவரமும் தெரியாத
மக்களும் இங்கே நெறைய பேர் இருப்பதாக
தோன்றுகிறது.

தற்போது தமிழ் நாட்டில் திமுக,மதிமுக,பாமக,விடுதலை
சிறுத்தைகள்,மற்றும் பல அமைப்புகள் எல்லாம் தீவிர
இலங்கை தமிழர்கள் ஆதரவாளர்கள் தான்.
அந்த அமைப்புகள் எல்லாம் தமிழீழ போராளிகள்
உருவான காரணங்களை மேடைதோறும் முழங்க வேண்டும்!

குறைந்த பட்சம் இலங்கை தமிழ் போராளிகள் உருவான
காரணங்களை,முழுவதும் தெரிந்தவர்கள் வலையேற்றுங்கள் .
>

''இந்த குதிரைக்குத்தான் எவ்ளோ பலம்''


''ஒரு சிங்கத்தையே தூக்கிகிட்டு போகுது பாருங்க இந்த குதிரை''
(சிங்க மணி (தங்கமணி) வந்து ஆறு வருஷம் ஆச்சு
21/10/2008 இன்னியோட )
>

தூண்டில் மீன்

தூண்டில் போட்டு மீன் புடிக்கிறது ரொம்ப சுவாரஸ்யமான
விஷயம்.அப்போ நானும், கன்னையனும் தூண்டி போட
போவோம். கண்ணையன் வந்து என் சித்தப்பா வீட்டுக்கு
எதிர் வீடு. நான் எங்க சித்தப்பா வீட்டோட சண்டைனால,
அங்க போக மாட்டேன் நானும்,கன்னையனும் வெளில
மீட் பண்ணிக்குவோம் .


ஆடி மாசம் ஆத்துல புதுத்தண்ணி வரும்.அந்த தண்ணில
ஏரி,குளம் எல்லாம் நிரப்பிக்குவாங்க அப்போ மீனெல்லாம்
ஒன்னும் இருக்காது.அந்த புது தண்ணி வந்தோன!
விவசாய வேலைய ஆரம்பிப்பாங்க தண்ணி வந்து
ரெண்டு,மூணு மாசத்துல எங்க ஊரு நாத்து பறிக்கிறது;
நாத்து நடுறது
அப்படின்னு ஊரே பச்சை பசேல்னு
ஆயிடும்.அப்போதான் கொக்குக எல்லாம் வந்து மேய
ஆரம்பிக்கும்.தூரத்துல இருந்து பார்த்தா வயல்ல கொக்கு
மேயிறது வந்து,பச்சை துணில வெள்ளை புள்ளி வைச்ச
மாதிரி இருக்கும்.கொக்குக மேயிறது கொள்ளை அழகு.


பட்டு பாவாடை தாவணிபோட்டு,தலைல மல்லிகை
பூவும்,கனகாம்பரமும் கலந்து வச்சு,நெத்தில
சந்தன போட்டு,அதுக்குகீழ கொஞ்சமா துன்னுரு
பூசி,காதுல குடை ஜிமிக்கி போட்டு,கைநெறைய
கண்ணாடி வளையல் போட்டு,கால்ல முழுக்க
சலங்கை வைச்ச கொலுசு போட்டு இந்த
லிப்ஸ்டிக் ஏதும் போடாம இயற்கையான அழகோட
இருக்குற ஒரு பொண்ண சைட் அடிச்சா எப்படி
மனசுல ஜில்லுன்னு இருக்கும் ?


அதுபோல தான் இருக்கும் இந்த, கொக்குக மேயிரத
வேடிக்கை பாக்குறதும்.


சரி சரி மேட்டருக்கு வாரேன்! நெல்லு அறுவடை எல்லாம்
முடிஞ்சு வயல்ல கடல,எள் இதெல்லாம் போடுவாங்க
குளம்,ஏரில எல்லாம் தண்ணி குறைய ஆரம்பிக்கும்.
அப்போதான் தூண்டிபோட போவோம்.எங்க வீட்டு
ஏரியாவ தாண்டி போனா, சின்னதா ஒரு ஆறு வரும்.
அந்த ஆத்தோட பேரு கல்யாண ஓடை கால்வாய்
அந்த ஆத்த தாண்டிபோனா, ஒரு செம்மண் ரோடு வரும்
ரோட்டுக்கு ரெண்டுபக்கமும் வயல்தான்.வயல்ல
கடலை ,எள் இதெல்லாம் போட்டு இருப்பாங்க அங்கங்க
மாடு மேய்ச்சுகிட்டு இருப்பாங்க.செம்மண் ரோடு வழியா
ஒரு கிலோமீட்டர் போனா ஏரி வந்துடும்.

எங்க ஊரு ஏரிய இப்போ நெனைச்சாலும் மனசு ரெக்கை கட்டி
பறக்குது.ஏரி பேரு விக்கிரமம் ஏரி ஏரி கரை ஓரத்துல வரிசையா
இலுப்ப மரங்களா இருக்கும்.மரங்க எல்லாம் கரைல சாய்ச்சி
வச்சது போல இருக்கும்.மர கிளைகள் எல்லாம் தண்ணில
நனைஞ்சபடி இருக்கும்.சின்ன பயலுவ எல்லாம் மரத்துல
ஏறி தண்ணில குதிப்பாணுவ நாங்களும்தான்!

சலவை கடை வைச்சு இருக்குறவங்க வழக்கமா அங்கதான்
துணி தொவைப்பாங்க!

சரி விசயத்துக்கு வர்றேன்....

தூண்டி முள்ளுல கோர்த்து விட மண்புழு வேணும்!
அழுக்கானசேத்துல தான் மண்புழு அதிகமா இருக்கும்.
மண்புழு எடுத்தாச்சு ஏரிக்கரை படிக்கட்டுல
உக்காந்துதான் தூண்டி போடுவோம்.

முள்ளுல மண்புழு வை கோர்த்து தண்ணில போட்டுட்டு
அந்த மெதக்குற தக்கைய வைச்ச கண்ணு வாங்காம
பார்த்துகிட்டே இருப்போம்.அந்த தக்கை லேசா அசைரத
பார்க்கவே செம திர்லிங்கா இருக்கும்.

லேசா அசையும் போது அவசர படக்கூடாது தக்கை
வந்து தண்ணிக்குள்ள முழுசா போகணும்.
இடது பக்கமா தக்கை போகும் போது, இடது பக்கமே
தூண்டி கம்ப ஒரு வெட்டு வெட்டி,வலது பக்கமா வெடுக்குன்னு
தூக்கணும் அப்போதான் மீன் மாட்டும்.


இப்போ பங்கு சந்தையில 100 ரூபாய்க்கு வாங்கின
பங்கு 101,102,1O3,104,105, அப்படி போனா மனசு
எப்படி இருக்கும்?

அப்படிதான் இருக்கும், தூண்டில மீன் மாட்டி அந்த
தக்கை தண்ணிக்குள்ள போகும்போதும்.

ஒருதடவ நாங்க தூண்டி போட்டப்போ மண்புழு
கலியாயிடுச்சி, தூண்டில தண்ணில போட்டுட்டு
கம்புமேல ஒரு செங்கல்ல எடுத்து வைச்சுட்டு
ரெண்டு பேரும் மண்புழு தோண்ட போய்ட்டோம்
திரும்பி வந்து பார்த்தா என் தூண்டிய காணும்!
தேடி பார்த்தா நடு தண்ணில என் தூண்டி கம்பு
மெதந்து போயிட்டு இருக்கு எதோ ஒரு பெரிய மீன்
மாட்டி இழுத்துகிட்டு போகுது,என்ன பண்ணுறதுன்னு
யோசிக்கிறதுக்குள்ள கண்ணையன் சட்டைய
கழட்டிட்டு தண்ணிக்குள்ள குதிச்சுட்டான்.

வேகமா நீச்சல் அடிச்சு போய் தூண்டி கம்ப
புடிச்சுட்டான் புடிச்சு இழுத்துகிட்டு வர தினறுரான்.
வேணாம் கண்ணையா!!விட்டுட்டு வந்துடுன்னு
கத்துறேன்! கேக்காம புடிச்சு இழுத்துகிட்டு வர்றான்
எனக்கும் ஆர்வம் அதுல என்ன மீன் மாட்டி இருக்குன்னு
பார்க்க கண்டிப்பா பெரிய விரா மீன் தான் மாட்டி
இருக்கணும்னு நினைச்சேன்.கரைகிட்ட வந்துட்டான்
படிக்கட்டுல எறங்கி அவன் கைய புடிசுகிட்டேன் .
இன்னொரு கையால தூண்டிகம்ப புடிச்சுட்டேன் .
ரெண்டுபேரும் சேர்ந்து தூண்டி கம்ப மேல தூக்குறோம்
அவ்ளோதான் ''டப்'' ன்னு நரம்போட அறுத்துகிட்டு
போச்சு! ச்சே எவ்ளோ கஷ்ட்டப்பட்டு கண்ணையன்
இழுத்துகிட்டு வந்தான் அத என்னன்னு கூட
பாக்க முடியலயேன்னு ரொம்ப வருத்தமா போச்சு!

(இதுநடந்து ஒரு 22,23 வருஷம் இருக்கும் இப்போகூட அந்த தூண்டில மாட்டுனத பார்க்கலையேன்னு சின்ன பீல் இருக்கு )
>

என் சினிமா பார்வை

அழைத்த குடுகுடுப்பையாருக்கு நன்றி


1.
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நான் பிறந்தது, மூணாவது வரை படிச்சது எல்லாம் அந்தமான்ல! அங்க எனக்கு நினைவு தெரிஞ்சு பார்த்த படம் வருவான் வடிவேலன் அந்த படம் பார்க்க நாங்க ஒரு ''போட்ல'' போனோம் ஒரு நாப்பது பேர் போகலாம் அந்த போட்ல. சின்ன கப்பல் போல இருக்கும்.நாங்க போன தியேட்டர் இருக்குற இடம் பேரு பம்பு பிளாட் படம் பார்த்து நினைவு இருக்கு, என்ன உணர்ந்தேன்னு தெரியல
ஏன் அப்படின்னா வரும்போது தூங்கிட்டேன்.

அப்புறம் நம்ம ஊருக்கு வந்து, எங்க ஊரு ஐயப்பா தியேட்டர்ல பார்த்த முதல் படம் கரை கடந்த ஒருத்தி '' ஓடத்துல தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு''
அப்படின்னு ஒரு பாட்டு வரும் அந்த படத்துல.

உணர்ந்தது அந்தமான்ல இருந்து வந்த புதுசு! அப்பா அம்மா கூட இல்லாம சொந்தகாரங்க யாரோ கூட்டிகிட்டு போனாங்க. பொம்பளைங்க கூட்டத்துகுள்ள
உக்காந்து பார்த்து. கூடவே சின்ன புள்ளைங்க அழுகை, சின்ன புள்ளைங்க சத்தம் அதிகமானா? திட்டு விழும் பாருங்க!!''ங்கொப்புறான ங்கொப்பன்தன்னான'' அழுவுற புள்ளைய கூட்டிகிட்டு எதுக்குடி படம்பாக்க வர்றீய! ஊட்டுலயே கெடக்க வேண்டியது தானே ? அதுக்கு புள்ளைய வைச்சு இருக்குறவங்க
திருப்பி சொல்லுறத இங்க சொல்ல முடியாது ! இதல்லாம் எனக்கு அப்போ
புதுசு!2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம் சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டர்ல ரொம்ப ஆர்வமா போனேன்.''சிங்கமணி''வந்து..

( எல்லோரும் ''தங்கமணின்னே'' சொல்லுறாங்க கொஞ்சம் வித்யாசமா சிங்கமணி!'' தங்கம்'' போல மனைவி இருக்குறவங்க தங்க மணின்னு சொல்லிகோங்க ''எம்பொண்டாட்டி சிங்கம் மாதிரி'' அதான் சிங்கமணி)


சிங்கமணி வந்து ஆறு வருசத்துல அஞ்சு படம்தான் ஒன்னா பார்த்து இருக்கோம்
படம் பார்க்க அதிகம் போறதுல்ல!நான் மட்டும் எப்போவாவது சிங்கமணிகிட்டசொல்லாம போவேன்.
அந்த மாதிரித்தான் தசாவதாரம் போனேன் கமல் ஏமாத்திட்டாரு!


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


கன்னத்தில் முத்தமிட்டால் KTV ல போட்டாங்க ரொம்ப நாளைக்கு பிறகு மனசு கனத்து பார்த்த படம் .

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

சேரனின் பொற்காலம் பட்டுக்கோட்டை நீலா தியேட்டர்ல ஊருக்கு போனப்போ பாத்தது.

5.. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

'' கேப்டன் விஜயகாந்த் விருதாசலத்தில நின்னு ஜெயிச்ச அந்த தில்லு''


'' நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் மக்கள் தன் மீது வைச்சு இருக்குற
அந்த
பிரியத்த, பணமாக்கி கொள்ளுற வேதனை.''


5-. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஒன்னும் சொல்ல தோனல

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

உண்டு ,வாரமலர், வெள்ளிக்கிழமை சினிமா மலர் அவ்ளோதான்

7.தமிழ்ச்சினிமா இசை?

இளையராஜாதான்


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

உண்டு, சின்ன வயசுல அந்தமான்ல இருந்ததால ஹிந்தி நல்லா தெரியும் (அப்போ) அங்க நெறைய ஹிந்தி படம் பார்த்தது உண்டு .
நூரி அப்படின்னு ஒரு படம் பார்த்த நினைவு இருக்கு.


அப்புறம் இப்போ பிளஸ் டு முடிச்சுட்டு கோயமுத்தூர்ல நகை தொழில் கத்துக்க போய் இருந்தப்போ அங்க அர்ச்சனா வில சாஜன்,தீவானா எல்லாம் பார்த்து இருக்கேன் .


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மருத நாயகம் படத்த, நான்தான் தயாரிக்க போறேன்னு சொன்னா

நம்பவாபோறீங்க

ஒரு தொடர்பும் கிடையாதுங்க!


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் நிறைய அரசியல்வாதிகளை உருவாக்கும்


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நான் ஒன்னும் பெருசா கவலை படமாட்டேன். ஆனா, எல்லா தொலை காட்சியும் மக்கள் தொலைக்காட்சியுடன் போட்டிபோடும்

நீங்களும் சொல்லுங்க

யட்சன்
புழுதிக்காடு
ரம்யா>

கதை ஒன்னு கேளுங்க!!

இந்த கதை வந்து சாமர் செட் மாம் அப்படிங்கற ஆங்கில எழுத்தாளர் எழுதினது.
அத தமிழாக்கம் செய்து ஒரு புத்தகத்துல எழுதிஇருந்தாங்க,அத நம்ம ஸ்டைல்ல
சொல்லுறேன் கேளுங்க!!!

சுப்புரமணிக்கு வேலை வெட்டி ஏதும் இல்ல. சும்மா ஊர சுத்திகிட்டு இருந்தான்.
அவன்கிட்ட ஒருத்தர் வந்து, பக்கத்து ஊரு கோயில்ல மணி அடிக்கிற வேலை ஒன்னு இருக்கு போறியான்னு கேட்டார்? சுப்புரமணி சரி போறேன்னு சொன்னான்.அவரும் அட்ரஸ் கொடுத்து அனுப்பிவைச்சார்.


சுப்புரமணிய வந்து கவுண்டமணி
போல நெனச்சுகங்க. அவனும் கோயில்ல வேலை கிடைக்க போகுதுன்னு , சந்தோசமா கிளம்பி பக்கத்து ஊரு கோயில்ல வேலை கேக்குறான்.
கோயில்ல டெல்லி கணேஷ் போல ஒரு பூசாரி இருக்கார்.

சுப்புரமணி:-வணக்கம் சாமி, இங்க எதோ மணி அடிக்கிற வேலை காலியா
இருக்குன்னு சொன்னாங்க,அந்த வேலைய பாக்கலாம்னு
வந்தேங்கோ.


கோயில் பூசாரி :- ஆமாம்பா வேலை காலியாதான் இருக்கு,மணி அடிக்கிரதோட
கோயில் வரவு,செலவு கணக்கும் பார்க்கணும் சரியா ?
ஆமா?நீ என்ன படிச்சு இருக்கே ?


சுப்புரமணி:- சாமி நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் போனதுஇல்லிங்கோ எனக்கு சுத்தமா எழுத படிக்க வராதுங்கோ.கோயில் பூசாரி :- எழுத படிக்க தெரிஞ்சவங்களுக்குதான் இந்த வேலைய,
கொடுக்க முடியும். நீ நல்ல பையனா இருக்கே இப்போ
என்ன பண்ணுறது?..........சரி, உனக்கு ஆறுமாசம் டைம்
தரேன் அதுக்குள்ள நல்லா எழுத படிக்க கத்துகிட்டு வா!
உனக்காக இந்த வேலைய வேற யாருக்கும் கொடுக்காம
வைச்சு இருக்கேன்.போய்ட்டுவா!
சுப்புரமணி :- ரொம்ப நன்றி!சாமி நான்போய் எப்படியாச்சும் எழுத,படிக்க
கத்துகிட்டு வரேங்க!


ஊருக்கு வந்த சுப்புரமணி படிப்பு கத்துக்க முயற்சி பண்ணுறான் எவ்ளவோ
முயற்சி பண்ணியும் அவனுக்கு படிப்பு ஏறல.ஆறுமாசம் கழிச்சு மறுபடியும்
அந்த கோயில் பூசாரிய பார்த்து படிப்பு ஏறல எப்படியாச்சும் வேலைய போட்டுகொடுங்கன்னு கேக்குறான்.அதுக்கு அந்த பூசாரி வேலை கொடுக்க முடியாதுன்னு திட்டி அனுப்பிடுறார்.


சோகமா திரும்புற சுப்புரமணி, ஒரு பீடிய எடுத்து பத்த வைச்கிட்டு மெதுவா
நடந்து வர்றான் .பீடி முடிஞ்சு போகவே இன்னும் ஒரு பீடி பத்த வைக்கலான்னு
பீடி கடைய தேடுறான் அந்த ஏரியாவில எங்கயும் பீடி கிடைக்கல.

ஒடனே அவனுக்கு ஒரு யோசனை! இங்க ஒரு பீடி கடை வைச்சா என்ன ?
சரின்னு அக்கம்பக்கம் கொஞ்சம் கடன் வாங்கி, சின்னதா ஒரு பீடி கடை வைக்கிறான் .கடை நல்லா பிக் அப் ஆயிடுது.

கொஞ்ச நாள் கழிச்சு பெரிய பணக்காரனா ஆயிடுறான்.சொந்தமா வீடு கட்டி
கோவை சரளா மாதிரி ஒரு பொண்ண பார்த்து கல்யாணமும் பண்ணிக்கிறான்.

நெறைய பணம் இருக்கவே,அவன் பொண்டாட்டி சொல்லுது! ஏனுங்க மாமா!
இவ்ளோ பணத்தையும் வீட்டுல வைச்சு இருக்கீங்க பேங்க்ல போட்டா
வட்டி வரும்ல அப்படின்னு சொல்ல, அவனும் சரி அம்மிணி ன்னு பெரிய
தொகை எடுத்துகிட்டு பேங்க்கு போறான்.

பேங்குல நெறைய பணம் கொண்டு போனதால, இவனுக்கு நல்லா மரியாதை!
அங்கவினு சக்ரவர்த்தி போல ஒரு மேனேஜர் இருக்கார் .அக்கவுண்ட்ஆரம்பிக்க கையெழுத்து போட சொல்லுறார். ஒடனே சுப்புரமணி சொல்லுறான்
எனக்கு கையெழுத்து போட வராது மேனேஜர் கைநாட்டு தான் அப்படின்னு .

மேனேஜருக்கு
ஆச்சர்யம்! ஏன்பா!எழுத படிக்க தெரியாமயே இவ்ளோ பணம்
சம்பாதிச்சு இருக்கே! நீமட்டும் படிச்சு இருந்தா இன்னும் பெரிய ஆளா ஆகி
இருப்பே போல இருக்கே ? அப்படின்னு சொல்ல அதுக்கு சுப்புரமணி சொல்லுறான்,


''எனக்கு மட்டும் எழுத, படிக்க தெரிஞ்சு இருந்தா இந்நேரம் ஒரு கோயில்ல மணி அடிச்சுகிட்டு இருந்திருப்பேன்''

------------------------------------------------------------------------------------------------>

மிளகாய்ச் செடி

அப்போ எனக்கு பத்து,பதினோரு வயசு இருக்கும்.எங்க வீடும் எங்க சித்தப்பா வீடும் பக்கத்து பக்கத்து வீடு. ரெண்டு வீட்டுக்குமா சேர்த்து வேலி போட்டு இருந்தாங்க.
கிலுவை முள்ளு வேலி.(கிலுவை.எங்க ஊருபக்கம் வேலி அமைப்பதற்காகவே
இறைவனால் படைக்கப்பட்ட ஒரு தாவர இனம் ).

எங்க வீடு முதல்ல இருக்கும், எங்க சித்தப்பா வீடு அடுத்து இருக்கும். நாலு பக்கமும் வேலி. ஆனா வெளில போறதுக்கு கேட் வந்து எங்க சித்தப்பா வீட்டு வாசல் கிட்ட இருக்கும்.எங்க வீட்டு வாசல் வேலிய பார்த்த மாதிரி இருக்கும்.

ஒருவாட்டி நான் ஒரு மிளகாய்செடிய பாத்தேன்.அத அப்படியே புடிங்கி கொண்டாந்து, வீட்டு வாசல்ல வேலி ஓரமா ஒரு அருவாள எடுத்து குழி பறிச்சு நட்டு வச்சுட்டேன்.

காலைல எந்திரிச்சதும் முதல் வேல, மிளகாய் செடிக்கு தண்ணி ஊத்துரதுதான்.
ரெண்டுநாள்ல செடி நல்லா துளிர்த்துக்குச்சி.அதே போல ஸ்கூல் விட்டு வந்தா உடனே செடிக்கு தண்ணிதான்.நெறைய தண்ணி ஊத்தினா செடி அழுகிடும்னு எங்கம்மா திட்டும்.நான் கேக்காம நெறைய தண்ணி ஊத்துவேன்.
செடிக்கு உரம் எல்லாம் போட்டு வளர்த்தேன்.மாட்டு சாணிதான் உரம் அப்புறம் கொஞ்சம் காப்பித்தூள்.

ஒருநாள் காலைல வாசல் கூட்ட போன எங்கம்மா,டேய், உன் மிளகாய் செடில மொட்டு விட்டுருக்குடா!ன்னாங்க, அடிச்சு,புடிச்சுகிட்டு எந்திரிச்சு ஓடிபோய் பார்க்குறேன் கடுகு சைஸ்ல மொட்டு விட்டுருந்தது.எனக்கு சந்தோசம் தாங்கல!

மொட்டு விட்டத பார்க்க கூடவே என் தம்பியும்,தங்கச்சியும் வந்துட்டாங்க!

நான் உடனே ரெண்டுபேர் கிட்டயும் சொல்லுறேன் யாராவது செடிய தொட்டிங்க?அவ்ளோதான் யாரும் செடிய தொடக்கூடாது சரியா ? ரெண்டும் சரின்னு தலைய ஆட்டுதுங்க.

மொட்டு விட்டதுல அதுங்களுக்கும் சந்தோசம். அவங்கள தொட கூடாதுன்னு சொல்லிட்டு ஆர்வ கோளாறுல மொட்ட தொட்டு தொட்டு பார்க்குறேன்.
அன்னிக்கு ஸ்கூல் போகவே மனசுஇல்ல.ஸ்கூல் ல அதே நெனைப்புதான்.
ஸ்கூல் விட்டதும் நேரா செடி கிட்டதான். மொட்டு கொஞ்சம் பெருசானது போல இருக்கு இப்போதும் மெதுவா தொட்டு பார்க்குறேன்.எங்கம்மா திட்டுறாங்க,
மொட்ட தொட்டின்னா கருகி கீழ விழுந்துடும் ஆமா சொல்லிட்டேன் . மறுநாள் காலைல சீக்கிரமே எந்திரிச்சுட்டேன்,மொட்டு இன்னும் கொஞ்சம் பெருசனதுபோல இருக்கு தண்ணி ஊத்திட்டு ஆசைல மொட்ட தொட்டு பார்க்குறேன்.


சாயங்காலம் ஸ்கூல் ல இருந்து வந்து பார்க்குறேன் செடில மொட்ட காணூம்
எனக்கு அழுகாத குறைதான் எங்கம்மா கிட்ட கேட்டா மொட்ட தொடாதேன்னு
சொன்னேனே கேட்டியா ? கீழ விழுந்துடிச்சு அப்படின்னாங்க.
என்'' மூஞ்சிய பார்த்து'' வேற மொட்டு வரும் அத தொடாதன்னு சொன்னாங்க!


அப்போதான் என் அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் பெரிய சண்டை. சண்டைக்கு
சொத்து பிரச்சினையாம் காரணம்.
சண்டை பெருசாகி பஞ்சாயத்து வரை போய்டுச்சி. அப்புறம் எங்கப்பா இனிமே நாம இங்க இருக்க வேணாம்னு சொல்லிட்டு வேற வீடு வாங்கிட்டாரு நானும் என் மிளகாய் செடிய விட்டுட்டு வந்துட்டேன்.
சித்தப்பா வீட்டோட சுத்தமா பேச்சு வார்த்தை கூட இல்ல.வேற வீட்டுக்கு வந்தோன நானும் எல்லாம் மறந்துட்டேன் .
கொஞ்ச நாள் கழிச்சு எங்க சித்தப்பா வீட்டுக்கு எதிர் வீட்டு பாட்டி செத்து போய்ட்டாங்க!
சாவுக்கு எல்லாரும் போகணும், எங்கப்பா யாரும் அவன்வீட்டுக்கு (சித்தப்பா) போக்குடாது அப்படின்னு கண்டிசன் போட்டு கூட்டிகிட்டு போறாரு!

சாவுக்கு போயிட்டு திரும்பும்போது! பார்க்குறேன் !

அந்த கிலுவை வேலி ஓரமா! நான் வச்ச! நான் வச்ச! என் மிளகாய் செடில!

அழகா நாலைஞ்சு மிளகாய் காய்ச்சு இருக்கு!

அத வேலிக்கு வெளிய நின்னு பார்க்குறேன்! அங்க ஏன்டா நிக்குற வாடா எங்கப்பா அதட்டவே ஓடிட்டேன் !

(அந்த பதினோரு வயசு சிறுவனின் மன வேதனையை உங்களால உணர முடியுதா? )

>

சுகமாய் ஒரு பிரசவம்

இரவு எட்டு மணி இருக்கும் வலி லேசா ஆரம்பிச்சது . என் அம்மாவும், மாமியாரும் இருக்காங்க, அக்கம்பக்கத்துல இருக்குற சிலரும் இருக்காங்க .

வலி அதிகமில்ல காலைல ஆஸ்பத்திரில சேத்துக்கலாம்னு ரெண்டுபேரும் சொல்லுறாங்க .
நான் வந்து என்ன சொன்னேன்னா, நடுராத்திரில வலி அதிகமானா என்ன பண்ணுறது அப்போ போய் ஆட்டோ புடிக்க முடியாது இப்போவே போய் ஆட்டோ புடிச்சுட்டு வர்றேன்னு சொன்னேன் . (ஆமாங்க வலி என் மனைவிக்கு)
இல்ல பார்த்துக்கலாம் இருடான்னு எங்கம்மா சொல்ல !

இப்போ போனா ஆஸ்பத்திரில சும்மா தான் உக்கார்ந்து இருக்கணும்னு என் மாமியார் சுவத்து பக்கம் பார்த்து சொல்ல (அவங்க என்ன நேரா பார்த்து பேச மாட்டங்க எதிர்ல நிக்கக்கூட மாட்டாங்க )

நான் கேக்காம புடிவாதமா ஆட்டோ புடிச்சுகிட்டு வந்துட்டேன் !

எங்கம்மா வந்து, ஏன்டா எங்களுக்கு தெரியாது ? என்னமோ ஏழு புள்ள பெத்தவனபோல அவசரமா ஆட்டோ புடிச்சுட்டு வர்றே ?

அப்படின்னு சொல்லிட்டு, நாங்க சொன்னா கேக்கவாபோறே ? ன்னு சொல்லி
துணி மணியெல்லாம் எடுத்துகிட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டாங்க .

ஆஸ்பத்திரில சேத்தாச்சு !வலி கொஞ்ச கொஞ்சமா அதிகமாகுது !

மணி பதினொன்னு ஆக போகுது வலி பொறுக்காம மனைவி போடுற சத்தத்த கேட்டு எனக்கு பயம் வந்துடுச்சி
என் அம்மாவும்,மாமியாரும் என் மனைவி சத்தத்த பத்தி பெருசா எடுத்துக்காம
சாதாரணமா இருக்கவே,சரி இந்த சத்தமெல்லாம் சகஜம் போல ன்னு நான்
கொஞ்சம் தைரியமா இருந்துட்டேன் .

ஆஸ்பிட்டல்ல சிஸ்டர் வந்து, நைட் இங்க யாராவது ரெண்டுபேர்தான் தங்கலாம் அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க .

என் மனைவி அவங்கம்மா கைய புடிச்சுகிட்டு,நீ போய்டாதம்மா இரும்மா ன்னு
சொல்ல, எங்கம்மா வேற வழி இல்லாம கிளம்பிட்டாங்க !
மணி பன்னண்டுக்கு மேல ஆகுது .

ஆஸ்பத்திரில நாலஞ்சு சிஸ்டர் அப்புறம்,ரெண்டு பேர் மட்டும் இருக்காங்க !

நான் ஒரு சோபால உக்கார்ந்து இருக்கேன் !

மனைவி சத்தம் போட போட பதட்டம் தாங்கல,
என்னான்னு போய் பாருங்க ன்னு மாமியார்கிட்ட சொல்ல, அப்போகூட அவங்க
வெக்கபட்டுகிட்டு அந்தாண்ட போறாங்க என்னைய உள்ள விட மாட்டுறாங்க
அப்படின்னு கீழ குனிஞ்சுகிட்டு சொல்லுறாங்க !

அங்க இருக்குற சிஸ்டர் எல்லாம் சகஜமா அரட்டை அடிச்சுகிட்டு இருக்கவே,
என்னங்க சிஸ்டர் சத்தம் போடுறாங்க போய் பாருங்க ன்னு நான் சொன்னதும்

இதோ பாருங்க சார்!

இப்போ டாக்டர் வருவாங்க ! ரெண்டு,மூணு மணிபோல தான் டெலிவரி ஆகும் . டென்சன் ஆகாம போய் உக்காருங்க . அப்படின்னு சொல்லுறாங்க .
ஒரு மணி இருக்கும், என் மனைவி போடுற சத்தம் அவ குரல் போலவே இல்ல !
என்னால உக்கார முடியல !
ஒன்ற மணி போல என் மாமியார் கொஞ்சம் தள்ளி ஓரமா நின்னுகிட்டு இருந்தாங்க !
என்னான்னு பார்த்தா ! தேம்பி !தேம்பி அழுதுகிட்டு இருக்காங்க !
அய்யய்யோ என்னமோ ஆச்சு போலன்னு நான் அலறி அடிச்சுகிட்டு என்ன ஆச்சு
சொல்லுங்கன்னு கத்துறேன், அப்போ ஒரு சிஸ்டர் வந்து என்னங்க அழுதுகிட்டு இருக்கீங்க ?டாக்டர் வந்துட்டாங்க சீக்கிரம் போய் துணியெல்லாம் ரெடி பண்ணுங்கன்னு சொல்ல ,
ஒடனே போய் ஒரு வேட்டி துணிய எடுத்துகிட்டு வர்றாங்க !

மணி ரெண்டர ஆகுது சிஸ்டர் துணியெல்லாம் வாங்கிகிட்டு உள்ள போய்ட்டாங்க !
ஒரு சத்தமும் கேக்கல கதவ சாத்திக்கிட்டங்க அன்னிக்குத்தான் தெரிஞ்சது எனக்கு நான் எவ்வளவு பலவீனம் ஆனவன்னு !

திக் திக்ன்னு இருக்கு !

கதவு பக்கத்துல மாமியார் நிக்குறாங்க, நான் கொஞ்சம் தள்ளி நிக்குறேன் !

ஒரு சிஸ்டர் வெளில வர ! என்னாச்சுன்னு கேட்டா ?

கொஞ்சநேரம் ஆகும் வழில நிக்காதிங்க ஓரமா நில்லுங்கன்னு வெரட்டுது

இது நடந்தது அஞ்சு வருஷம் முன்னாடி அப்போ என்கிட்டே செல்போனும் இல்ல

ஒரு துணையும் இல்லாம ! என்ன செய்றதுன்னு தெரியாம !நான் நின்ன நெலமை எனக்குத்தான் தெரியும் .

கொஞ்ச நேரத்துல ஒரு சிஸ்டர் வந்து என் மனைவி பேர சொல்லி அவங்க ஹஸ்பெண்ட் யாருங்க ?

நாந்தான்னு சொல்ல, டாக்டர் உங்கள இங்கேயே இருக்க சொன்னாங்க எங்கயும் போயிடாதிங்க ன்னு சொல்லிட்டு உள்ள போய்ட்டாங்க !

அவ்வளவுதான், எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் போய்டுச்சு !

லேசா நடுக்கம் வந்துடுச்சு எனக்கு ! கைய கட்டிக்கிட்டு அப்படியே சுவத்துல சாஞ்சி நின்னுகிட்டேன் !

மனசுக்குள்ள முதன் முதலா சாமிய வேண்டுனது அப்போதான் !

நாலர மணி வரை அப்படியே நிக்குறேன், அஞ்சு மணிக்கு என் அம்மா வந்துட்டாங்க !

சும்மா சும்மா என் அம்மாவ பார்த்து எரிஞ்சு விழுற எனக்கு,அப்போ என் அம்மாவ பார்த்து எனக்கு வந்த ஒரு தைரியம் சொல்லி விளக்க முடியாது !

என்ன ஆச்சு ன்னு அம்மா கேக்க !

நான் வாயத்திறந்து ஏதும் சொல்லும் போது என் குரல் உடைந்து விடும்னு

பயத்துல ஒன்னும் இல்ல ன்னு தலைய மட்டும் அசைக்கிறேன் .

என் அம்மா வந்து மாமியார்கிட்ட போய் என்ன ஆச்சுன்னு கேட்டு அவங்க கிட்ட
போய் பேசிகிட்டு இருக்காங்க !


சரியா மணி அஞ்சு நாப்பத்தி ஒன்னு !

எல்லோரும் சந்தோசமா கேளுங்க !

'' ஒரு சிஸ்டர் வெளிய வந்து பெண் குழந்தை பிறந்துருக்கு ''

அம்மாவும் பொண்ணும் நல்லா இருக்காங்க ''


அப்பாடா !!

ரெண்டுஅப்போ எனக்கு வந்த சந்தோசம்,நிம்மதி, இதைஎல்லாம் என்னால சொல்லவே முடியாது .

கொஞ்ச நேரத்துல என் பொண்ணை ஒரு சிஸ்டர் வெளில கொண்டுவந்து காட்டுறாங்க .


''என் குழந்தைய பார்த்து ரெக்கைகட்டி பறக்காத குறைதான் ''


இப்போ எனக்கு என் மனைவிய உடனே பார்த்தாகனும் !


உள்ள போகலாமா ன்னு கேட்டா வெயிட் பண்ண சொல்லுறாங்க !

கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள போய் மனைவிய பார்க்குறேன் !

''சினிமால வர்றதுபோல நெகிழ்ச்சியோட கண் கலங்கல ''

'' குழந்தைய பார்த்திங்களான்னு அவ கேக்கல ''

லேசா சின்ன வெக்கத்தோட ஒரு சிரிப்பு சிரிச்சா அவ்ளோதான்


அது போதும் எனக்கு !!!
>