இறைவனின் குழந்தைகள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது.நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு வேளைக்கான மதிய உணவு செய்து கொண்டு சென்றோம். சென்னை ஆவடியை அடுத்த வீரா புரம் என்ற இடத்திற்கு அருகில் இருந்தது அந்த இல்லம்.அங்கு எட்டு மாத குழந்தை முதல் பத்து,பன்னிரண்டு வயதுடைய குழந்தைகள் சுமார் நாற்பது க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.


அங்கு சென்ற போது எனக்கு தோன்றிய உணர்வு இதுதான்! அந்த அந்த குழந்தைகள் மிக சகஜமாக சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர்.அவர்கள் பாவ பட்டவர்களாகவோ? பரிதாபத்திற்கு உரியவர்களாகவோ? எனக்கு இம்மியளவும் தோன்றவில்லை! ஏன் என்றால்? நான் என்னை பல சமயங்களில் ஒரு அனாதையாக உணர்ந்து இருக்கின்றேன். எந்த ஒரு மனிதனும் எதாவது ஒரு சமயத்தில் நிச்சயமாக தன்னை ஒரு அனாதையாக விடப்பட்டு விட்டதாக கருதுவான் என்பது என் நம்பிக்கை. எவ்வளவுதான் சொந்த பந்தங்கள் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு வறுமை காரணமாகவோ,கடன் தொல்லை காரணமாகவோ,தொழில்
அமையாமல் இருப்பதாலோ ஏதேனும் ஒரு சமயம் அவன் தன்னை எல்லோரும் நட்டாற்றில் தவிக்க விட்டதுபோல ஒரு அனாதையாக கண்டிப்பாய் உணர்வான்.

சும்மாவா பாடினார் கவியரசர்!

அண்ணன் என்னடா! தம்பி என்னடா!
அவசரமான உலகத்திலே!! என்று ?

இந்த இல்லத்தில் இருப்பவர்களை பார்த்து தோன்றியது இதுதான்!

நம்மைபோல்தான் இவர்களும்!
இவர்களைபோல்தான் நாமும்!


மேலும், இதுபோன்ற இல்லங்களில் இருப்பவர்களுக்கு நல்ல கல்வியினை வழங்குகிறார்கள்.அதோடு நம் மக்கள் இந்த ல்லங்களுக்கு நன்கொடை வழங்குவதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.மக்களின் இந்த செயலும் நம்பிக்கை அளிக்கிறது.ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அடிக்கடி சென்று உதவும் நண்பர்கள் தாங்கள் செல்லும் போது புதிதாக ஒருவரை கூட அழைத்து செல்வதே அந்த இல்லங்களுக்கு அவர்கள் செய்யும் உதவியாக அமையும்.
இந்த இல்லங்களுக்கு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் வழங்குவது பற்றி ராம லட்சுமி அம்மா அவர்கள் பதிவு எழுதி உள்ளார்கள்.அதில் அவர் சொல்லி இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை.

நாங்கள் சென்ற இல்லத்தில் கொண்டு சென்ற உணவை அவர்களிடமே கொடுத்துவிட்டோம் எந்த குழந்தை எவ்வளவு சாப்பிடும் என்று தெரிந்து மிக சரியாக பரிமாறினார்கள் குழந்தைகளும் வெகு நேர்த்தியாக ஒரு பருக்கை கூட வீணடிக்காமல் சாப்பிட்டார்கள். னால்? உணவு பொருட்களை கொண்டுவரும் சிலர் குழந்தைகளுக்கு தாங்களே பரிமாறுவதாக சொல்லி மிக அதிக அளவு உணவை கொடுத்து விடுவதாகவும் அதனால் குழந்தைகள் சிலர் வாந்தி எடுப்பதும்,மறுநாட்களில் பேதி ஆவது போன்ற இன்னல்களுக்கு ஆளாவதாகவும் மேலும் சிலர் இனிப்பு பொருட்கள் ஐஸ் க்ரீம் பொருட்களையும் வழங்குவதாக அந்த இல்லத்தின் நிர்வாகிகள் கூறினார்கள்.

இதுபோன்ற நன்கொடையாளர்களை நம்பித்தான் நாங்கள் இந்த இல்லம் நடத்துகிறோம் அதனால் வருகின்றவர்களிடம் கடுமையாக எதையும் சொல்ல முடியவில்லை என்று வருத்தத்துடன் சொன்னார்கள்.


இதுபோன்ற இல்லங்களுக்கு பொருட்களையோ உணவு வகைகளையோ வழங்கும் நன்கொடையாளர்கள் அவர்களுக்கு என்ன தேவை என கேட்டு வழங்குவது நல்லது.அதோடு கொண்டு செல்லும் உணவு பொருட்களை அவர்களிடமே கொடுத்து பரிமாற சொல்வது நல்லது.

அந்த நிர்வாகத்தினர் சில விசயங்களை சொன்னார்கள் சிலர் தங்கள் திருமண நாள்,பிறந்த நாள் போன்ற தினங்களில் இங்கு தங்கள் குடும்பத்துடன் வந்து உணவு வழங்கி ஒருநாள் பகல் இருந்து செல்வர்கள் என சொன்னார்கள்.

இந்த விசயத்தில் தான் எனக்கு ஒரு நெருடல் ஏற்பட்டது!!

இங்கே குழந்தைகள் எட்டு மாதம் முதல் பத்து வயது வரை உள்ளவர்கள் உள்ளார்கள்.ஐந்து வயதுக்குட்பட்ட பெரும்பாலும் தாய்க்கு ஏங்கும் பிள்ளைகளாக இருப்பார்கள்.சிலர் தங்கள் பிள்ளைகளையும் இது போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லும்போது, அங்கு இருக்கும் பிள்ளைகள் அந்த பெற்றோருடன் வரும் பிள்ளைகளை பார்த்து தனக்கு பெற்றோர் இல்லையே என்ற ஒரு ஏக்கத்தில் தவித்து போய் விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது .
அதோடு அங்கு செல்லும் பெண்கள் அவர்களுக்கே உரித்தான தாய்மை உணர்வில் அங்கு இருக்கும் பிள்ளைகளிடம் மிகுந்த பரிவோடும்,கனிவோடும் நடந்து கொள்ளுவார்கள் அந்த பரிவிலும்,கனிவிலும் அந்த குழந்தைகள் அந்த தாயின் தாய்மை மிகுந்த அன்பில் வசப்பட்டு தாய்காகவும் தாய் பாசத்திற்காகவும் ஏங்க ஆரம்பித்து விடுமோ என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது.

குடும்பத்துடன் அங்கு செல்ல வேண்டும் என்று ஆரம்பத்தில் எனக்கு இருந்த எண்ணத்தை அந்த குழந்தைகளை பார்த்து மாற்றி கொண்டேன்.

..............................................................................................................................

>