கெஞ்சலும்..! மிஞ்சலும்..!

அழுகையை அடக்க முடியவில்லை அவளுக்கு ..! ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது கணவன்மேல்..! வருடம் முழுவதும் வீடு குழந்தைகள் என சற்றும் ஓய்வில்லா உழைப்பு .. ..! பள்ளி விடுமுறையில் தாய் வீட்டில் சென்று தங்க புருசனிடம் போராட்டம் ..! அதான் முழு ஆண்டு லீவுக்கு வருஷ வருஷம் போயி தங்குறில்ல அரையாண்டுலீவுக்குபோகாட்டிஎன்ன ..! இப்போ போக வேண்டாம் எனக்கு கஷ்டமாயிடும் அப்புறம் போகலாம் என கறாராய் சொல்லிவிட்டான்.

முழு ஆண்டு லீவுக்கு போனாலும் ஒரு பதினைந்து நாட்களுக்கு மேல் தங்க விடுவதில்லை இப்போது என்னை அழைத்து செல்ல ஊரிலிருந்து அம்மாவை வரச்சொல்லி,அம்மாவும் வந்துவிட்டாள் .ஆனால் இவன் அனுப்ப மறுக்கின்றான் அதான் அம்மாவை பார்த்தாச்சுல்ல அப்புறம் என்ன ஊருக்கும் வேணாம் ஒன்னும் வேணாம்னு சொல்லி வேகமாய் வெளியே போய்விட்டான் ..!

ஒன்றும் பேச முடியாத அம்மா..!அவர்கிட்ட கேட்டுகிட்டு என்னை வரச்சொல்லி இருக்கலாம்ல அப்படின்னு சொல்லி கோபமாய் கிளம்பி போய்விட இன்னும் ஆத்திரம் ..!

இரவு ....
இருந்ததை சாப்பிட கொடுத்து குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு ...
''ஒன்னும் சமைக்கல வெளில சாப்பிடவும் எனக்கு ஏதும் சாப்பிட வேணாம்''
இப்படி ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு காத்திருந்தாள் ..! இன்னிக்கு உண்டு இல்லையென பண்ணிடனும் நான் என்ன அடிமையா..? வருஷம் முழுக்க கஷ்டப்படனும் ஆனா அம்மா வீட்டுக்கு போக எவ்ளோ போராட்டம் ..! கண்டிப்பா இன்னிக்கு எதாச்சும் சாப்பிட வாங்கிகொண்டு வந்து கெஞ்சுவான் வரட்டும் பத்ரகாளியாய் ஆவேசத்துடன் காத்திருந்தாள்...!

மணி 10.30

வரும் நேரம்தான் வரட்டும் ..!

10.45 ...!

11.00 ... !

இன்னும் வரவில்லை போன் பண்ணலாமா ..?
வேண்டாம் ..வேண்டாம் வரட்டும் ...!
இன்னும் கோபம் தணியவில்லை ..!

11.20 ..!

லேசான பயம்.... என்ன இன்னும் காணும் ..!

11.40..!

இன்னும் வரவில்லை பயம் அதிகரித்தது ..!

சரி போன் பண்ணிடலாம் போன் பண்ணினால் ரிங் போனது ஆனால் எடுக்கவில்லை ..!

12.05 ..!

பட பட வென கதவு தட்டும் சத்தம் ..! வேகமாய் ஓடிப்போய் கதவை திறக்கின்றாள் அவன்தான்....! அப்பாடா...! வந்துவிட்டான்.

ஏன் போன் எடுக்கல ...?

எதோ டென்சன் எடுக்கல ..!
சுள்ளென எரிந்து விழுந்துவிட்டு போய் படுத்து கொண்டான் ..!

ஏதும் பிரச்சனையாய் இருக்குமோ ..!

என்னங்க ஏதும் பிரச்சனையா என்ன ஆச்சு ..?

அதெல்லாம் ஒன்னுமில விடு ..!

அலுவலகத்தில் ஏதும் பிரச்சனையாய் இருக்குமோ ..?

சாப்டீங்களா..?
இல்ல .!

மாவு தான் இருக்கு தோசை ஊத்தி தரவா ..!
வேணாம் ..!
உடம்பு ஏதும் சரியில்லையா ..?
இல்ல நல்லாத்தான் இருக்கேன் ..!
பின்ன ஏன் டல்லா இருக்கீங்க ..!
ஒண்ணுமில்ல பேக்ல சாப்பாடு வாங்கி வந்துருக்கேன் நீ சாப்டுக்கோ ..!
பேக்கில் இரண்டு பொட்டலம் பிரியாணி இருந்தது

உங்களுக்கு ..?

எனக்கு பசிக்கல நீ மட்டும் சாப்பிடு ..!

இல்ல நீங்களும் வாங்க ..!

மல்லு கட்டி சாப்பிட வைத்து அவளும் சாப்பிட்டாள்..!


அவன் மனதுக்குள் நினைத்து கொண்டான் ..! இதே நான் எப்பவும் போல வந்து இந்த பிரியாணியை கொடுத்து இருந்தால் என்ன ருத்ரதாண்டவம் ஆடி இருப்ப ..!
எப்படியும் ஒரு நாலைந்து நாட்கள் பேச்சு வார்த்தை இல்லாமல் போயிருக்கும்
ஒரு பெரும் சண்டையை வராமல் செய்துவிட்ட நிம்மதியோடு தூங்கி போனான்..!

அவளோ ..! தான் தொலைத்துவிட்ட கோபத்தை சுத்தமாக மறந்து போயிருந்தாள்.!









>