அனுபவிக்க இனி ஒன்றுமில்லை கடமைதான் பாக்கி (35+)

பத்து பதினைந்து வயதில் வாழ்க்கை குறித்த பயம் இல்லை ஆனால் ஆசைகள் மிக அதிகமாகவே இருந்தது. . அதன் பிறகு வாலிப வயதிலும் அப்படியே ..! திருமண வயதில் எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்தது.

திருமணம் முடிந்தும் குழந்தை, சம்பாத்தியம், குடும்பத்தின் அடிப்படை தேவைகள் என இலக்குகள் இருந்தன...! சம்பாத்தியம் ,திருமணம் ,இல்லறம் ,குழந்தைகள் எல்லாவற்றையும் அனுபவித்தாயிற்று.

குழந்தைகளின் மழலைத்தனம் மாறி வளர துவங்க... கடந்த காலங்களில் வாழ்க்கையில் நாம் அனுபவிக்காமல் எதையும் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் இருந்தது . ஆனால் முப்பத்தைந்து வயதில் அநேகமாக எல்லா முக்கியமான விசயங்களையும் அனுபவித்து விட்டதாகவே தோன்றுகிறது ..!

சரி, இனி அடுத்த பதினைந்து வருடங்கள் எப்படி இருக்கும் ..? இந்த காலத்தில் நாம் அனுபவிக்க வேண்டியவை,செய்யவேண்டிய கடமைகள் என்ன ..? அனுபவிக்க வேண்டிய விசயங்களை தேடினால் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை..!

ஆனால் ..! கடமைகள் நிறையவே காத்திருக்கிறது..! குழந்தைகளின் கல்வி , அவர்கள் ஆரோக்கியம், நகரத்தில் நாகரிகம் என்ற பெயரில் நிரம்பியிருக்கும் கலாசார குப்பைகளில் இருந்து அவர்களை காக்க வேண்டும் . கிராமங்களைவிட புவியீர்ப்பு விசை குறைவான நகரத்தில் இருந்துகொண்டு கிராமங்களின் ஈர்ப்பினை புரியவைக்க வேண்டும். நல்ல தமிழை கொடுக்க வேண்டும் .இப்படி பட்டியல் நீளுகிறது...!

ஒன்று மட்டும் புரிகிறது அடுத்த சில வருடங்களுக்கு என்னை சற்றும் ஓய்வெடுக்க விடாமல் கடமை துரத்தி கொண்டே இருக்க போகிறது அது மட்டும் நிச்சயம்.

சில சமயம் தோன்றும் அயர்ச்சியில் இப்படி கூட நினைப்பதுண்டு சட்டென ஒரு பத்து வருடம் போய்விடாதா என்று ...! எனக்காக வேண்டுமானால் பதவி ,புகழ் என எதாவது இலக்கை வைத்துகொண்டு செயல் படலாம், ஆனால்..! அடிப்படை கடமைகளை நிறைவேற்றாமல் எந்த வெற்றியும் ருசிக்கபோவதில்லை.

சரி இனிமேல் அவ்ளோதானா..! என்றால் அதைத் தாண்டி குழந்தைகள் திருமணம், பேர குழந்தைகள் என உறவின் பாற்பட்ட அம்சங்கள் எல்லாம் கடமைகளாய் காத்திருக்கிறது.

குழந்தைகள் திருமணம் என வரும்போது அதை அனுபவிக்க வேண்டிய விஷயம் என்பதை காட்டிலும், நல்லபடியா நடத்தி ஆகணுமே என்ற ஒரு கேப்டன் புத்திதான் அப்போதும் தோன்றுகிறது. பேர குழந்தைகள்....? அதற்க்கு வெகு தூரம் இருக்கிறது நாம் அதுவரை இருப்போமா என்ற கேள்வியும் வருகிறது.

காலை நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க வாக்கிங் போகும் நாற்பதுகளை கடந்த தொப்பை ஆசாமிகளை பார்த்து சிரித்திருக்கிறேன்....இப்போது புரிகிறது அந்த தொப்பைகளின் பின்னால் இருப்பது குடும்ப பாரங்கள்....ம்ம்ம்ம்ம்


>