மிளகாய்ச் செடி


அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும்.எங்க வீடும் எங்க சித்தப்பா வீடும் பக்கத்து பக்கத்து வீடு. ரெண்டு வீட்டுக்குமா சேர்த்து வேலி போட்டு இருந்தாங்க. கிலுவை முள்ளு வேலி.(கிலுவை.எங்க ஊருபக்கம் வேலி அமைப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு தாவர இனம் ).

எங்க வீடு முதல்ல இருக்கும், எங்க சித்தப்பா வீடு அடுத்து இருக்கும். நாலு பக்கமும் வேலி. ஆனா வெளில போறதுக்கு கேட் வந்து எங்க சித்தப்பா வீட்டு வாசல் கிட்ட இருக்கும்.எங்க வீட்டு வாசல் வேலிய பார்த்த மாதிரி இருக்கும்.

ஒருவாட்டி நான் ஒரு மிளகாய்செடிய பாத்தேன்.அத அப்படியே புடிங்கி கொண்டாந்து, வீட்டு வாசல்ல வேலி ஓரமா ஒரு அருவாள எடுத்து குழி பறிச்சு நட்டு வச்சுட்டேன்.

காலைல எந்திரிச்சதும் முதல் வேல, மிளகாய் செடிக்கு தண்ணி ஊத்துரதுதான்.ரெண்டுநாள்ல செடி நல்லா துளிர்த்துக்குச்சி.அதே போல ஸ்கூல் விட்டு வந்தா உடனே செடிக்கு தண்ணிதான்.நெறைய தண்ணி ஊத்தினா செடி அழுகிடும்னு எங்கம்மா திட்டும்.நான் கேக்காம நெறைய தண்ணி ஊத்துவேன். செடிக்கு உரம் எல்லாம் போட்டு வளர்த்தேன்.மாட்டு சாணிதான் உரம் அப்புறம் கொஞ்சம் காப்பித்தூள்.

ஒருநாள் காலைல வாசல் கூட்ட போன எங்கம்மா,டேய், உன் மிளகாய் செடில மொட்டு விட்டுருக்குடா!ன்னாங்க, அடிச்சு,புடிச்சுகிட்டு எந்திரிச்சு ஓடிபோய் பார்க்குறேன் கடுகு சைஸ்ல மொட்டு விட்டுருந்தது.எனக்கு சந்தோசம் தாங்கல!

மொட்டு விட்டத பார்க்க கூடவே என் தம்பியும்,தங்கச்சியும் வந்துட்டாங்க!

நான் உடனே ரெண்டுபேர் கிட்டயும் சொல்லுறேன் யாராவது செடிய தொட்டிங்க?அவ்ளோதான் யாரும் செடிய தொடக்கூடாது சரியா ? ரெண்டும் சரின்னு தலைய ஆட்டுதுங்க.

மொட்டு விட்டதுல அதுங்களுக்கும் சந்தோசம். அவங்கள தொட கூடாதுன்னு சொல்லிட்டு ஆர்வ கோளாறுல மொட்ட தொட்டு தொட்டு பார்க்குறேன்.அன்னிக்கு ஸ்கூல் போகவே மனசுஇல்ல.ஸ்கூல் அதே நெனைப்புதான்.ஸ்கூல் விட்டதும் நேரா செடி கிட்டதான். மொட்டு கொஞ்சம் பெருசானது போல இருக்கு இப்போதும் மெதுவா தொட்டு பார்க்குறேன்.எங்கம்மா திட்டுறாங்க,மொட்ட தொட்டின்னா கருகி கீழ விழுந்துடும் ஆமா சொல்லிட்டேன் . மறுநாள் காலைல சீக்கிரமே எந்திரிச்சுட்டேன்,மொட்டு இன்னும் கொஞ்சம் பெருசனதுபோல இருக்கு தண்ணி ஊத்திட்டு ஆசைல மொட்ட தொட்டு பார்க்குறேன்.


சாயங்காலம் ஸ்கூல் இருந்து வந்து பார்க்குறேன் செடில மொட்ட காணூம் எனக்கு அழுகாத குறைதான் எங்கம்மா கிட்ட கேட்டா மொட்ட தொடாதேன்னு சொன்னேனே கேட்டியா ? கீழ விழுந்துடிச்சு அப்படின்னாங்க.
என்'' மூஞ்சிய பார்த்து'' வேற மொட்டு வரும் அத தொடாதன்னு சொன்னாங்க!


அப்போதான் என் அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் பெரிய சண்டை. சண்டைக்கு சொத்து பிரச்சினையாம் காரணம்.சண்டை பெருசாகி பஞ்சாயத்து வரை போய்டுச்சி. அப்புறம் எங்கப்பா இனிமே நாம இங்க இருக்க வேணாம்னு சொல்லிட்டு வேற வீடு வாங்கிட்டாரு நானும் என் மிளகாய் செடிய விட்டுட்டு வந்துட்டேன்.சித்தப்பா வீட்டோட சுத்தமா பேச்சு வார்த்தை கூட இல்ல.வேற வீட்டுக்கு வந்தோன நானும் எல்லாம் மறந்துட்டேன் .கொஞ்ச நாள் கழிச்சு எங்க சித்தப்பா வீட்டுக்கு எதிர் வீட்டு பாட்டி செத்து போய்ட்டாங்க! சாவுக்கு எல்லாரும் போகணும், எங்கப்பா யாரும் அவன்வீட்டுக்கு (சித்தப்பா) போக்குடாது அப்படின்னு கண்டிசன் போட்டு கூட்டிகிட்டு போறாரு!

சாவுக்கு போயிட்டு திரும்பும்போது! பார்க்குறேன் !

அந்த கிலுவை வேலி ஓரமா! ஆசையா ,நான் வச்ச! என் மிளகாய் செடில!

அழகா நாலைஞ்சு மிளகாய் காய்ச்சு இருக்கு!

அத வேலிக்கு வெளிய நின்னு பார்க்குறேன்! அங்க ஏன்டா நிக்குற வாடா எங்கப்பா அதட்டவே ஓடிட்டேன் !

(அந்த பதினோரு வயசு சிறுவனின் மன வேதனையை உங்களால உணர முடியுதா? )

-மீள் பதிவு-



>