எங்க ஊரு ரம்ஜான்....!

மதுக்கூரை  விட்டு சென்னை வந்த புதிது.ரம்ஜான் பண்டிகை...!தொலைக்காட்சியில் மட்டுமே ரம்ஜான்..  இதே நேரம் எங்கள் ஊரில் இருந்திருந்தால் இஸ்லாமிய நண்பர்களின்  அன்பில் திக்குமுக்காடிகொண்டிருப்போம்...! ஊரில் இஸ்லாமியர்களுடன் கலந்து வாழ்ந்த  எங்களுக்கு  சென்னை வந்த பிறகு ரம்ஜான் பண்டிகை பெரும் வெறுமையை ஏற்படுத்தியது  உண்மை...! காலப்போக்கில் பழகிவிட்டது..! ஊரில் இல்லாத குறைக்கு இங்கே அப்துல்லா இருப்பது ஒரு  ஆறுதல்..!

அதிகாலையிலேயே இடியாப்பம்,பரோட்டா,முட்டை ஆப்பம்,கடல்பாசி,பாயசம் என அக்கம் பக்கத்து வீட்டு பட்சணங்கள் வந்து குவிந்து இருக்கும்...! மதியத்துக்கு நெய்சாதம் போட்டி போட்டுகொண்டு அழைப்புகள் என அன்பை பொழிந்து ஒரு வழி செய்து விடுவார்கள்...!
மேலும் இந்து, இஸ்லாமிய பெண்மணிகளுக்குள் இருக்கும் சிறு சிறு பிணக்குகளும் இன்று அகலும்..! சின்ன விஷயங்களுக்காக நின்று போன பேச்சு  வார்த்தை பலகாரம் கொண்டு வந்து கொடுத்தல் மூலம் மீண்டும்
தொடரும்...  நட்பு புதுப்பிக்கப்படும்....! இதே அணுகுமுறையை நமது பக்கம் தீபாவளி,பொங்கலுக்கு  கையாள்வர்!

இந்த நேரத்தில் என் குழந்தைகள் ஊரில் இருந்தால் இஸ்லாமிய மக்களால் கொண்டாட படுவர் ...எனக்கு சிறுவயதில் கிடைத்த அந்த அழகான நாட்கள்  என் குழந்தைகளுக்கு  கிடைக்காதது  எனக்கு ஒரு குறைதான்...! ஆனால் இது அவர்களுக்கு தெரியாது என்பதால் ஒரு நிம்மதி....!

இன்றைய தினத்தில் இஸ்லாமிய மக்கள் அனைவர் முகத்திலும் ஒரு தெளிவு ஒரு அதிகப்படியான  மகிழ்வினை காண முடியும் இதே மன மகிழ்வு அவர்களுக்கு வாழ்நாள்  முழுவதும் நிலைத்திருக்க என் வாழ்த்துக்கள்...!
>