ஆங்கில வழிக்கல்வியிலும் தமிழில் இரண்டு பாடங்கள் வேண்டும்..!

ஆங்கில வழிக்கல்வியில்  பட்டம் பெற்றவர்கள் கூட  தமிழில் எழுத மிகவும் சிரமப்படுகின்றனர். சாரிங்க எனக்கு  தமிழ் சரியா எழுத வராது  என சற்றே பெருமையுடன் சொல்லி விடுகின்றனர். ஆனால் ...! ஆங்கிலம் எனக்கு  சரியா வராது என சொல்ல ஆங்கிலம் அறியாதவர்கள் வெட்கம் தான் அடைந்தோம்.!
அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி மிகுந்துவிட்டது. ஆங்கிலம் தெரியாமல் எதிர்காலத்தை கடத்துவது  மிகுந்த சிரமம் என்பது உண்மைதான்.
அதே  சமயம் தாய்மொழி  தமிழ்  நம் கண்முன்னே தினமும் சிறிது சிறிதாக சுருங்கிகொண்டுஇருப்பதை மறுக்க முடியாது..! 

ஆங்கில வழியில் படித்தாலும்  குழந்தைகளுக்கு நாம்  தமிழ்  சொல்லி கொடுத்துவிடலாம் என்றால்..உண்மையில்  குழந்தைகளுக்கு  தமிழ்  சொல்லிக்கொடுப்பது  மிகுந்த சிரமமாக உள்ளது..! கோபம் வந்தால் கூட குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில்  தான் கோபம்  வருகின்றது..! எதாவது  எண் சொன்னால் இங்லீஸ்ல சொல்லுங்க ..! என சொல்கின்றார்கள் ..! தமிழில் எண் தெரிவதை விட ஆங்கிலமே  அவர்களுக்கு எளிதாய் தெரிகின்றது..!

பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து தமிழ் அழிய நாமும் ஒரு காரணமாக இருக்கின்றோமோ என்ற ஒரு குற்ற உணர்ச்சியும் உண்டாகின்றது. ஆனாலும் எதிர் காலத்தில் ஆங்கிலம் தெரியாமல் மிகுந்த சிரமம் என்பதும் புரிகின்றது..! 

இந்த சூழலில் தமிழ்  அழியாமல்  ஓரளவேனும்  காக்க ஒரு  யோசனை தோன்றியது ..!  அதாவது  ஆங்கில வழி கல்வி முறையிலும்  தமிழில்  இரண்டு பாடங்கள் இருக்க வேண்டும்..! ஆங்கிலம்,அறிவியல்,கணிதம் ஆகியவை ஆங்கிலத்தில் இருக்கட்டும். தமிழ்  பாடத்தோடு வரலாற்று பாடங்களையும் தமிழில்   கற்பிக்க பட வேண்டும்..இதனால் தமிழை கூடுதலாக படிக்கும் நிலை மாணவர்களுக்கு ஏற்படும்... இது குறித்து  உங்கள் கருத்துகளை   சொல்லுங்கள்...!!!


>

மரமாய் ஒரு முறை பிறக்க வேண்டும்..!மரமாய் ஒரு பிறவி எடுக்க வேண்டும்..! சாலை ஓரத்தில் நதிக்கரையில் தழைத்து,கிளைத்து ஓங்கி வளர்ந்து நிற்க வேண்டும்..! நதியிடம் நட்பு கொள்ள வேண்டும்.  ஒன்றிரண்டு கிளைகளை நதிநீரில் நனைத்த படி நட்பு வளர்க்க வேண்டும். நதிநீரில் பூக்களை உதிர்த்து அந்த பூக்கள் நதி நீரில் மிதந்து செல்வதை பார்த்து ரசிக்க வேண்டும்..

சிறுவர்,சிறுமியர் என் கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்து என்னையும் மகிழ்விக்க வேண்டும். விடலை பயல்கள் என் கிளைகளில் ஏறி நதியில் குதித்து குளித்து நீந்திகரை சேர்ந்து மீண்டும் மீண்டும் ஏறி குதிக்க வேண்டும்.

கிளைகள் முழுவதிலும் பறவைகள் கூடுகட்டி வசிக்க வேண்டும். பறவைகளின் கீச்சு கீச்சு சத்தம்  சங்கீதமாய் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும். 


சாலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் மீது பூக்களை உதிர்த்து அவர்களை குஷி படுத்த வேண்டும்.
நெடுந்தொலைவில் இருந்து களைத்து வரும் வழிப்போக்கர்கள் நதியில்  தாகம்  தணித்து கனிகளை உண்டு பசியாறி  என் நிழலில் உறங்கி களைப்பாற வேண்டும்.
சிறுவர்,சிறுமியராய் நான் கண்டவர்கள் வளர்ந்து வாலிபமெய்தி மணம் முடித்து செல்லும்போது அவர்களை காணும்  சுகம் சொல்லி மாளாது..! இதோ  இந்த மரத்தில்தான்  ஊஞ்சல் கட்டி ஆடினேன்...  இதோ   இந்த கிளையில் இருந்து தான் குதித்து குளிப்பேன்  என அவர்கள்  தங்கள்  இணையிடம் விவரிக்கும் போது   என் மனம்  எல்லையில்லா குதூகலம்  அடையும்..!

இப்படியாக பல தலைமுறை கண்டு.. வாரிசு மரங்கள் பல வளர்ந்த பிறகு...!  கொஞ்சம் கொஞ்சமாக  வைரம் பாய்ந்து மரிக்க வேண்டும் ..!  முழுவதும் மரித்த பிறகு சிறு கிளைகள் விறகாக...பெரும் கிளைகள் உத்திரங்களாகவும்,தூண்களாகவும்,வீட்டு பாதுகாப்புக்கு கதவுகளாகவும் உலகம் இருக்கும்  வரை யாருக்கேனும் உதவும் பொருளாகவே இறுதிவரை இருக்க வேண்டும்..!

>