''என் அப்பா வெளிநாட்டுல இருக்காரு''

என் அப்பா வெளி நாட்டில இருந்தது இல்ல !பாம்பே இருந்தார் ஆனா அது வெளி நாட்டில இருந்தது போல தான். ஒரு தகப்பன் வெளிநாட்டில
இருக்கும் போது அவங்க வீட்டில என்ன என்ன பிரச்சனைகள் வரும் அப்படிங்குறத என்னால ஓரளவு விளக்க முடியும்.

எங்க ஊரு பக்கம் வெளி நாட்டில வேலை செய்றவங்க அதிகம்.

சென்னை விமான நிலையம்

ஒரு நண்பர் வெளிநாட்டில இருந்து வர்றதால அழைக்க போய் இருந்தேன். விமானம் தாமதம், அதுனால சும்மா அப்படியே ஒரு ரவுண்டு சுத்தி
பார்க்கலாம்னு போனப்போ நான் கண்ட காட்சி!

ஒருத்தர் வெளிநாடு போறார் அவர வழி அனுப்ப அவங்க அம்மா,அப்பா,மனைவி, பத்து வயசு இருக்கும் ஒரு மகன், ஏழு வயசு இருக்கும்ஒரு மகள்.

அவர் மனைவி கண்ணெல்லாம் கலங்கி நிக்குறாங்க ஏக்கமான பார்வையோட அவங்க புள்ளைங்க அவங்க அம்மாதான்பேசுறாங்க! தம்பி! ஒடம்ப நல்லா கவனிச்சுக்கணும் நேரத்துக்கு சாப்பிடனும், இங்க வீட்டுலையே நேரத்துக்கு சாப்பிட மாட்ட அங்க என்ன பண்ண போறியோ? அப்படி சொன்னதும் அவங்க மனைவி லேசா தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாங்க! அம்மா அழுவுறதபார்த்த புள்ளைங்களும் அழ ஆரம்பிக்க அவர் அப்பா, சரி கிளம்புற நேரத்துல அழ கூடாது அப்படின்னு லேசா அதட்டுறார்.

வெளிநாடு போற அவர பார்க்குறேன் மனுஷன் அப்படியே நொந்துபோய் நிக்குறார் பாவமா இருக்கு அவர பார்க்க ! அவங்க அம்மா சொல்லுறதுக்கு தலைய ஆட்டுறார் புள்ளைங்கள பார்த்து நல்லா படிக்கணும் அம்மா பேச்ச
கேட்டு நடக்கணும் அப்படிங்குறார்.

பேசிகிட்டு இருக்கும் போதே அவர்கூட கிளம்புறவங்க வந்துட்டாங்க வாங்கண்ணே நேரமாச்சு உள்ள போக வேண்டியதுதான் அப்படின்னு
சொல்ல! மனசே இல்லாம கிளம்பி போறார். அவர் மனைவி அவர்கிட்ட போய் என்னமோ சொல்லுறாங்க அவரும் தலைய ஆட்டுறார் பிரியா விடை பெற்று கிளம்பி போறார்.

இத பாக்கும் போது எனக்கு என்ன தோணிச்சுன்னா ? கூழு,கஞ்சி, குடும்பத்த ஓட்டினாலும் இப்படி பிரிய கூடாது என்ன வாழ்க்கை இது ? குடும்பத்த பிரிஞ்சு வாழ்றது ஒரு வாழ்க்கையா ?அப்படிதான் தோணிச்சு!

நான் நெனைச்சது சரிதானா ?

எங்க ஊரு பக்கம் வெளிநாட்டில வேலை செய்றவங்க அதிகம்னு சொன்னேன்ல? அவங்க நிலைல இருந்து யோசிப்போம். இப்போ நான் என்னையே எடுத்துக்கிறேன் நான் குடும்பத்தோடதான் இருக்கணும் வெளிநாடு போக கூடாதுஅப்படிங்குற கொள்கையோட இருக்குறேன்.

இப்போ என் சொந்தகாரங்க,என் ஊர்காரங்க, இவங்கள்ல என்னைபோலவே இருக்குற இவங்க வெளிநாடு போய் நல்லாசம்பாதிச்சு நல்ல வீடு கட்டி நல்ல வசதியா ஆயிடுறாங்க.இப்போ எனக்கும் தோணுது வெளிநாடு போகனும்னுஆனா..! நான் சமாதான படுத்திகிறேன் குடும்பத்தோடவாழ்றதுதான் வாழ்க்கை அப்படின்னு என் மனைவியையும் சமாதான படுத்துறேன். கொஞ்ச நாள்ல குழந்தை பிறக்குதுஇப்போ எங்களுக்கு என்ன தோணும் மத்த புள்ளைங்க போலவேஎங்க புள்ளையையும் நல்ல வசதியா வளர்க்கணும் அப்படின்னு.

எங்க ஊர் மாதிரி ஒரு சின்ன நகரத்துல மாசம் ஒரு பத்தாயிரம்ரூபாய் சம்பாதிக்கிறதே பெரிய விஷயம்! எங்க பிள்ளை அடுத்தவங்கல பார்த்து ஏங்கி போய்ட்டா? இப்போ நான் தானாவே வெளிநாடு கிளம்பிடுவேன்.

இப்போ வெளிநாட்டில வேலை செய்கிற எல்லா ஆண்களுமே தன் மனைவிகுழந்தைகளுக்காக தனது எல்லா சந்தோசங்களையும் தியாகம்
செய்ஞ்சவங்கதான்அந்த ஆண்கள வீட்டுல இருக்குற மனைவி மக்கள் நல்லா புரிஞ்சுக்கணும் அவங்க மனைவி மக்களை நினைக்காத நாளே இருக்காது.

அதும் கல்யாணம் ஆனா புதுசுல பிரியுறாங்க பாருங்க அவங்க நிலைமை இன்னும் சோகம் . நான் என் நண்பர்கள் சிலரை பார்த்து இருக்கேன்
அவங்க தங்கள் குழந்தைகளிடம் ''மழலை இன்பத்தை'' அனுபவித்ததே கிடையாது!

குழந்தை பிறந்து இரண்டு வருஷம் கழித்து பார்க்கும் தந்தைகளும் உண்டு ஒரு வயசு, இரண்டு வயசுல பிள்ளைங்கள பிரிஞ்சு நாலு வருஷம் கழித்து
பார்க்கிற தந்தைகளும் உண்டு.

வெளிநாட்டில் இருந்து வரும்போது

வெளிநாடு போயிட்டு வரும் நபருக்கு வீட்டில் ராஜ மரியாதைதான் அவர் கேட்டதெல்லாம் கிடைக்கும் இயல்பு நிலை திரும்ப சில நாள் ஆகும்.

இப்போ வீட்டில் உள்ளவங்க இத கவனிங்க

அப்படி இயல்பு நிலை திரும்பும்போது கணவரின் கை இருப்பும் குறைய ஆரம்பிக்கும்.கை இருப்பு குறைவதால் மரியாதை குறைகிறது என்ற எண்ணம் அவருக்கு வராமல் மனைவி கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இப்படி மனைவி மக்களுக்காக எல்லா இன்பங்களையும் தொலைத்து வாழும் கணவனை தெய்வமாக போற்ற வேண்டும்.

கணவனை பிரிந்து (வாடும்) வாழும் மனைவி

வெளி நாடு செல்லும் கணவன் நிலை அப்படி இருக்க கணவனை பிரிந்து இங்கே இருக்கும் மனைவியும் பிள்ளைகளும் அனுபவிக்கும் சோகங்கள் ஒன்றும் குறைந்தது அல்ல ! தீபாவளி ,பொங்கல்,ரம்ஜான் எதுவாகட்டும்எல்லோரும் குடும்பதலைவருடன் கொண்டாடும் போதுதன் கணவர் இல்லாமல் தந்தை இல்லாமல் அவர்களும் ஒரு இருக்கமான நிலையிலேயே வாழ்கிறார்கள். அதோடு படிக்கும் பிள்ளைகளை ஒரு தாய் தனியாக கவனிப்பது பெரிய கஷ்ட்டமான காரியம். தாய்க்கு, தாயாகவும்,தந்தைக்கு தந்தையாகவும் வளர்க்க வேண்டும். மேலும் பல சொல்ல முடியாத துயரங்கள் இப்படி கணவனை பிரிந்து குடும்பத்தை கவனிக்கும் அவர்களைவணங்கியே ஆக வேண்டும்.

தகப்பனை பிரிந்து வாழும் பிள்ளை

நான் இந்த பதிவினை எழுதிய நோக்கம் இதுதான் நான் தகப்பனை பிரிந்து வாழ்ந்தவன். என் நிலையை பாருங்கள் எனக்கு சின்ன வயதில் ஒன்றும்
தோன்றவில்லை ஆனால் ஒரு பதி மூன்று வயதிற்கு பின்னர் என் அப்பா ஊரில் இருந்து வரும்போது மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.ஆனால்,
நாள் செல்ல செல்ல அவர் கண்டிப்பு எனக்கு பிடிக்கவில்லை. திடீரென்று வந்து கண்டிப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை அவர் எப்படா கிளம்புவார் என நினைக்க தொடங்குவேன்.

கொஞ்சம் நினைத்து பாருங்கள் ஒரு மனிதன் தன் பிள்ளைக்காகவும் குடும்பத்துகாகவும் தனியே கஷ்ட்ட படுகிறார் ஆனால் அவர் மகன் அவர்
எப்போடா கிளம்புவார் என நினைக்கிறான்? இங்கே நான் குற்றவாளிதான்.
என்னை போல ஒரு மகன் உருவாக கூடாது என்பதுதான் இந்த பதிவின் முக்கிய நோக்கம்.

தகப்பன் வெளி நாட்டில் இருக்கும் போது பத்து வயதிற்கு மேற்பட்ட மகனை
மிக கவனமாக வளர்க்க வேண்டும். தகப்பன் அருகில் இருப்பது போன்ற உணர்வோடு அவனை வழி நடத்த வேண்டும். முன்பு என் காலத்தில்
மாதம் இருமுறை கடிதம் மட்டுமே தொடர்பு ஆனால் இப்போது அப்படி அல்ல சிறிய விசயங்களை கூட கணவரிடம் கேட்டு கொள்ளலாம் கணவர்
பிள்ளையை எப்படி வளர்க்க விரும்புகிறாரோ அதன் படி தாய் செய்ய வேண்டும். கொஞ்சம் கவனம் தவறினால் தகப்பனுக்கும் பிள்ளைக்கும்
இடையில் பெரிய இடை வெளி வந்து விடும் பிறகு இருவருக்கும் நடுவில் தாயார் மாட்டிக்கொண்டு கஷ்ட்டப்பட நேரிடும்.


--------------------------------------


>

எப்படி நேசிப்பேன் என் இந்தியாவை...!

இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன்.

காரணங்கள்..!

நதிநீர் பிரச்சனைகள்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தும் தமிழகத்துக்கு வழங்கபடாத நியாயங்கள். நதிநீர் பிரச்னை பற்றி தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு என்ற ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் அதில் கூடுதல் விவரங்கள் உள்ளன.

கச்சதீவு

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சதீவு. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் பிடித்து சென்று செய்யும் சித்ரவதைகள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாத டெல்லி அரசு. இந்தியா என்னவோ துக்கடா நாடு போலவும் இலங்கை ஒரு பெரிய சர்வாதிகார நாடு போலவும் தமிழக மீனவர் பிரச்னையில் தோன்றுகிறது. தமிழன் என்ற ஒரு காரணத்தாலேயே தமிழக மீனவர்கள் புறக்கணிக்க படுவதாகவும் நினைக்க தோன்றுகிறது .

இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா


இந்திய அமைதி படையினர் இலங்கையில் தமிழ் மக்களின் மீது நடத்திய அத்து மீறல்கள்தான் நான் இந்தியனா..? தமிழனா..? என்ற குழப்ப விதையை என்னுள் விதைத்திருக்க கூடும் .

என்
தாய் நாட்டு ராணுவத்தினர் என் இன பெண்களை மானபங்க படுத்தினர் .
--------
இப்படி சொன்னால் அது அருவெறுப்பு.

என் தாய் நாட்டு ராணுவம் இலங்கையில் உள்ள பெண்களை மான பங்க படுத்தினர்.

-----
இப்படி சொன்னால் ..? என் மொழி பேசும் மக்களை மூன்றாம் மனிதர்கள் போல சொல்ல முடியாது.

வேறு எப்படி சொல்லுவது..?

இந்திய ராணுவத்தினர் என் தமிழ் பெண்களை மானபங்க படுத்தினர்.

---
இப்படித்தான் சொல்ல முடிகிறது

இப்படி சொல்லும்போதே நான் இந்தியாவில் இருந்து விலகுகிறேன்.ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற புத்தகத்தில் இருந்து கீழ்க்கண்ட வரிகள்

ஷாப்பிங் போன சமயம் தி நகரில் சுபாவின் கண்ணில் ஒரு சர்தார்ஜி பட்டார் .அதுவரை சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று முகம் மாறினார் .அவரது உடம்பு உதற தொடங்கியது . நளினியின் கையை பிடித்து கொண்டிருந்தவர் , மேலும் அழுத்தமாக பற்றிகொண்டார் . வியர்த்துவிட்டது.

நளினிக்கு ஒன்றும் புரியவில்லை .என்ன.. என்ன . என்று பதற எனக்குஅவனை ஓங்கி அறைய வேண்டும் போலிருக்கிறது சர்தார்ஜியைபார்த்தாலே வயிறு எரிகிறது .என்று சுபா சொன்னார்.

இலங்கை சென்ற இந்திய அமைதி படையில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள் என்பதை தணு விளக்கினார்.

இந்திய ராணுவத்தினரால் இலங்கையில் தமிழ் பெண்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட வரிகள் விளக்கும். இப்படி அயோக்கியத்தனம் செய்த ஒரு சீக்கிய நாயை எப்படி என் இந்தியன் என சொல்ல முடியும்...?தாய் மொழியா...? தாய் நாடா ..?

இந்த கேள்விக்கே இடமில்லை தாய்மொழியே முதலிடம் வகிக்கிறது. நான் இந்தியன் என சொல்லிக்கொண்டு ஒரு மலையாளியையோ, ஒரு கன்னடனையோ, ஒரு மராட்டியனையோ , நேசிப்பதை விட உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் அவன் தமிழை தாய்மொழியாக கொண்டவனெனில் அவனைத்தான் முதலில் நேசிப்பேன் .இதுதான் இயற்கை.

நம்பிக்கை இழக்க வைத்த சில தமிழக அரசியல் வாதிகள்


ராமதாஸ் -திருமா ஒரு கால கட்டத்தில் இவர்களில் யாரேனும் கைது செய்யபட்டுவிட்டாலே போதும் விழுப்புரத்தை தாண்டி பஸ் ,ரயில் ஏதும் ஓடாது..! மரம் வெட்டப்படும் பஸ் கொளுத்தப்படும். ஆனால் இலங்கை தமிழர் பிரச்னையில் இவர்கள் சில விளம்பர போராட்டங்கள் மட்டுமே நடத்தினர்.மரம்வெட்டும் இவர்கள் இந்த விசயத்தில் ஒரு செடியை கூட புடுங்கவில்லை.

கலைஞர் உண்ணாவிரதம் இருக்கிறார். உடனே போர்நிறுத்த அறிவிப்பு வந்ததாக அவர்கள் தொலைகாட்சியில் செய்தி ..! உண்ணாவிரதம் முடிகிறது.அதன் பின்னர் . பூவும் பிஞ்சுமாக ஆயிர கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்ய படுகிறார்கள் .

நம்பி நொந்து ஏமாந்ததுதான் மிச்சம் .இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய நிலைப்பாடும்,அதன் நடவடிக்கைகளுமே என்னை மிகவும் காயப்படுத்தி இந்திய உணர்வை நீர்த்துபோக செய்தது.


இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறிய பலர் பல நாடுகளில் அந்த நாட்டு குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர் ஆனால் தொப்புள் கொடி உறவு என சொல்ல படும் இந்திய நாட்டில் மட்டும் இலங்கை தமிழ் மக்கள் இன்னும் அகதி முகாமில் வசிக்கின்றனர் இதை கேட்க நாதியில்லை..!

நடந்து முடிந்த போரில் இந்திய ராணுவ ஆயுதங்கள் இலங்கை தமிழ் மக்களை மட்டும் கொல்ல வில்லை இந்தியாவில் இருக்கும் தமிழர்களில் இந்திய உணர்வையும் கொலை செய்து விட்டது.


இப்போது சொல்லுங்கள் எப்படி நேசிப்பேன் நான் இந்தியாவை..?

>

பதிவுகள் ஆயிரம்...! நன்றிகள் கோடி.....!தமிழில் பங்கு வணிகம் வலைத்தளம் இன்று ஆயிரமாவது பதிவை தொட்டு இருக்கின்றது ...! அதுமட்டுமல்ல... ஏழு லட்சம் ஹிட்ஸ் களையும் அடைந்து உள்ளது.தமிழில் பங்குவணிக வாசகர்களாகிய நங்கள் வாழ்த்துகளை சொல்லி , மகிழ்ச்சியினை பகிர்ந்து, ஆசிரியர் திரு .எம் .சரவணக்குமார் அவர்களுக்கு உள்ளபூர்வமான கோடானு கோடி நன்றியினைதெரிவித்து கொள்கின்றோம் ..!

தற்போது உள்ள ஒரு துறை சார்ந்த தமிழ் வலைதளங்களில் ஆயிரம் பதிவைத்தொட்டு ஏழு லட்சம் பார்வையாளர்களை கொண்ட ஒரே வலைத்தளம் இதுவாகத்தான் இருக்கும் . மேலும் , தினசரி வழங்கப்படும் வணிக குறிப்புகள் மூலம் தினம் தோறும் நூற்று கணக்கானோர் பயனடைந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனந்த விகடனில் தமிழில் பங்குவணிகம் பற்றிய செய்தி வந்தபோது பலர் இந்த தளத்தின் வாசகர்கள் ஆனார்கள். ஆனால்..! எனக்கு எதேச்சை யாக கண்ணில் பட்டது அதுவே எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கி விட்டது..!எனக்கு மட்டுமா ..? என்னைப்போல எத்தனையோபேர் பலன் அடைந்து உள்ளனர் ..!

திரு .எம் .சரவணக்குமார்

இவர்தான் எங்கள் நாயகர்...! தமிழில் பங்கு வணிகம் மூலம் தினசரி குறிப்புகள் வழங்குவதோடு மட்டும் அல்லாமல் பைசா பவர் என்னும் தளம் மூலம் சாட் ரூம் அமைத்து தொழில் நுட்பத்தினை விளக்கமாய் விளக்கியவர். எத்தனை எத்தனை ஆன் லைன் வகுப்புகள் ...? பங்கு சந்தை வரை படங்கள்.. அவற்றை கையாளும் முறை..இவரே கண்டுபிடித்த பிரத்யோக அமைப்புகள்..! எவ்வளவு பலன் அடைந்து இருக்கின்றோம்.சிறுபிள்ளைதனமாக கேட்கும்கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் அளித்து இருக்கின்றார். பங்கு சந்தை என்னும் கடலில் ஆழம் தெரியாமல் இறங்கி தத்தளித்து கொண்டு இருந்தவர்களை கரை சேர்த்தவர் என்பதைவிட ..தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தவர்களை தண்ணீரிலேயே வைத்து நீச்சல் கற்று கொடுத்து கரைசேர வழி வகுத்தவர் . மீன் பிடித்து விற்பனை செய்து கொண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் மீன் பிடிக்க கற்று கொடுத்தவர் . அத்தனையும் இலவசமாக...! பொதுவாக எங்கள் வணிகத்தை தமிழில் பங்கு வணிகம் தளத்தை பார்ப்பதற்கு முன் பார்பதற்கு பின் என்று கூட பிரிக்கலாம்...!

எங்கோ பிறந்து எதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு முன் பின் அறிமுகம் இல்லாத என்னை போன்ற எத்தனை யோ பேருக்கு பேருதவியாக இருந்துவரும் எங்கள் குரு,எங்கள் நாயகர், திரு .எம். சரவணக்குமார் அவர்கள் வாழ்வில் எல்லா வகையான இன்பங்களையும், சிறப்புகளையும் பெற்று நோய் நொடி ஏதுமின்றி பல்லாண்டு வாழவேண்டும், மேலும் பல ஆயிரக்கணக்கான பதிவுகள் எழுதவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.தமிழில் பங்கு வணிகம் --வாசகர் சந்திப்பு

நாம் பதிவர் சந்திப்பு நடத்துவதுபோல தமிழில் பங்கு வணிக தளத்தின் வாசகர்கள் ஒரு சந்திப்பு நடத்தி இருக்கிறோம். கோவையில் இருந்து நண்பர் பாலா துணைவியாருடன் சென்னை வருகையை ஒட்டி இந்த சந்திப்பு ஏற்பாடானது. நண்பர் முருகன்,சகோதரி ராஜி சகோதரி வீணா மற்றும் நான் .சென்னை மெரீனா பீச்சில் கண்ணகி சிலை அருகே கடற்கரை மணலில் எலியட்ஸ் வேவ் போக்கினையும் டோஜி க்கும் ஹேமருக்கும் உள்ள வித்தியாசத்தை வரைந்து காட்டி பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய சந்திப்பு அது.
தமிழில் பங்கு வணிகம் --விழுதுகள்

இந்த தளத்தின் வாசகர்களாக இருந்து தாங்கள் கற்று கொண்டதை தங்கள் பாணியில் பதிவிடுகிறார்கள் இவர்கள்.

விஜய்
சேலத்தை சேர்ந்த நண்பர் இவர் வலைத்தளம் இங்கே

பாலா

கோவை நண்பர் சந்தை நிலைகளை தினசரி பதிவிடுகிறார் இப்போது பங்குவணிக முகவராகவும் வளர்ச்சி அடைந்து உள்ளார் அவர் தளம் இங்கே

அருண்

திருப்பூர் நண்பர், புழுதிக்காடு சிம்பா என்றும் அழைக்க படுபவர். . பங்குச்சந்தை பற்றிய இவர் தளம் இங்கே


>