இறைவன் இருக்கின்றானா...?

-->
ஆறு வருடம் தொடர்ச்சியாக சபரிமலை பயணம். திருப்பதி மற்றும் அய்யப்பன் கோயில் போல நம்ம ஊரில் ஒன்றும் இல்லையே என நினைத்த போது அந்த குறையை கொஞ்சம் தீர்த்துவைத்த பழனி மலை முருகன். அதனாலேயே பழனி முருகன் நம்ம பேவரைட். மற்றபடி இறைவனுக்கும் எனக்கும் பெரிய தொடர்பு இல்லை. சபரி மலைக்கு போய் வந்தவர்கள் அந்த இடத்தை பற்றி சொன்ன பிரம்மாண்டதினாலேயே சபரிமலை சென்றேன். அந்த அய்யப்ப விரதம்,கட்டுப்பாடு,மலைப்பயணம் எல்லாம் பிடித்து போக அதை தொடர்ந்தேன்.மற்றபடி பெரிய வேண்டுதல் எதும் இல்லை.


இத்தனை வருட வாழ்க்கையில் உண்மையில் இறைவன் என்ற ஒன்று இருப்பதை உணர்ந்து இருக்கிறோமா.?என்று ஒரு. நேர்மையுடன் யோசித்து பார்த்தால்......இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கின்றது.


அதே சமயம் இறைவன் இல்லவே இல்லை என நினைத்த தருணங்கள் உண்டா..? இப்படி யோசிக்கும் போது இறைவன் இல்லை என நிறைய தடவை முடிவு செய்தது உண்டு.


கும்பகோணம் தீ விபத்து




அப்போது தோன்றியது இதுதான், தீயில் சிக்கிய அந்த குழந்தைகள் எல்லாம் எப்படி அலறி துடித்து இருப்பார்கள்..?

கும்பகோணம் கோயில் நகரமாம் அந்த கோயிலில் இருப்பவை எல்லாம் செவிட்டு சாமிகளா..? இல்லை சாமிகளே இல்லையா..! இல்லை அங்கே இருப்பவை சாமிகளா..?இல்லை சைத்தான்களா..? இப்படித்தான் தோன்றியது..!


பிரார்த்தனைகள் பலிக்குமா..?


பிரார்த்தனைகளும் ஒரு வகை இறை நம்பிக்கைதான் ஒன்று சேர்ந்த பிரார்த்தனைக்கு ஒரு சக்தி இருப்பதாகவும் கண்டிப்பாய் பலன் தரும் எனவும் சொல்லுகிறார்கள். உண்மைதானா..?


ஒன்று சேர்ந்த ஒரு வலிமையான பிரார்த்தனை பற்றி பார்ப்போம்
ஆழ்குழாய் கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை பற்றிய செய்தியை தொலைக்காட்சியில் பார்க்கும் போது நமது நிலை என்ன? அந்த குழந்தையின் பெற்றோர்களை போலவே நாமும் துடித்து போகின்றோம். அந்த குழந்தையின் மீட்பு நடவடிக்கைகளை பரிதவிப்புடன் கவனிக்கின்றோம் அதற்க்கு மேலாக பார்க்கும் அனைவருமே பிரார்த்தனை செய்கிறோமா
இல்லையா? அந்த குழந்தைக்காக வீடுகளில் விளக்கேற்றுவது ஆலயம் சென்று அர்ச்சனை செய்வது என யாரோ..எவரோ பெற்ற பிள்ளைக்காக அந்த செய்தி அறிந்த அனைவருமே பிரார்த்தனை செய்கிறோம் ஆனால்..? நடப்பது என்ன..?


ஒரு சிதிலமடைந்த நிலையில் சடலமாகதானே பெரும்பாலும் மீட்கிறார்கள் ..! அப்படியானால் பிரார்த்தனைக்கு என்ன பலம்.?


அந்த குழந்தை எப்படி உயிர் துறக்கிறது இருள்,பயம்,பசி,அம்மா..அம்மா என்ற தேடலுடன் துளி..துளி யாக தன் ஜீவனை பிரிகின்றது..!இப்படி ஒரு கொடுமையை அனுபவித்து மரணிக்கும் அந்த குழந்தையை காக்க முடியவில்லை...!

மிக ..மிக தெளிவாய் உணரலாம் இப்போது இறைவன் என்ற ஒன்று இல்லை என்று..!

ஒரு வேளை இறைவன் இருந்து இதுபோல குழந்தை மரணித்தால் அது இறைவன் அல்ல சாத்தான்...!

கிருஷ்ண பரமாத்மா சொல்லுகிறாராம் நான் எல்லோரையும் ஒரே போலதான் படைத்தேன் அவரவர் செய்யும் வினைக்கு ஏற்ப பலாபலன்களை அனுபவிக்கிறார்கள் என்று. பிறக்கும் போதே மன நலம் குன்றிய நிலையில் பிறந்த இவர்களை படைத்தது யார்..?


பகுத்தறிவு வளர்ப்பதாய் சொல்லும் நாத்திக அமைப்புகளின் தோல்வி..
எல்லா மனிதர்க்குள்ளும் கண்டிப்பாய் ஒரு நாத்திக சிந்தனை இருக்கும். அதை பக்குவமாக வெளிப்படுத்தவைக்கமுடியும்.

ஆனால்..! கடவுளை மறுக்கிறோம்,பகுத்தறிவை வளர்க்கிறோம் என சொல்லிகொண்டு பிரச்சாரம் செய்யும் நாத்திக அமைப்புகள் செய்வது என்ன..? ஒரு காலகட்டத்தில் இவர்கள் செய்த பிரச்சார முறையினாலேயே இந்த அமைப்புகள் சிறுத்து போய் விட்டன.

குடியிருப்பு பகுதிகள்,கோயில் பகுதிகள்,வழிபாட்டு தளங்கள் ஆகிய இடங்களில் நின்று கொண்டு மிகவும் கீழ்தரமான,கொச்சையான,நாலாந்தர மொழியில் இறைவனை விமர்சனம் செய்வார்கள். இவர்கள் பேசும் அந்த ஆபாச மொழியினை கேட்கவே சில விசிலடிச்சான் குஞ்சுகள் இருப்பர்கள். அந்த சிலரை குசி படுத்தி மட்டும் இவர்கள் பிரச்சாரம் செய்வார்கள்.
பார்பனீய எதிர்ப்பு என சொல்லிகொண்டு பிராமண வீட்டு பெண்களை பற்றி இவர்கள் செய்யும் விமர்சனம் ஆபாச,அயோக்கியதனத்தின் உச்சம். கேட்டால் பகுத்தறிவை வளர்த்து,பார்பனீயத்தை எதிர்க்கிறார்களாம்.
இவர்களின் இந்த அனுகுமுறை காரணத்தாலேயே இந்த இயக்கம் கட்டெரும்பாய் தேய்ந்து போய்விட்டது.



என்னதான் நாத்திக சிந்தனை இருந்தாலும் சிலருக்கு இறை நம்பிக்கை இருந்து கொண்டேதான் இருக்கிறது.



ஒரு மனிதனின் வெற்றிக்கு காரணம் தன்னம்பிக்கையும்,தைரியமும்தான் அந்த தன்னம்பிக்கையும் தைரியமும் இறைவன் நம்பிக்கை என்ற ஒரு மாயை மூலம் கிடைத்தால் கிடைத்து விட்டு போகட்டுமே என்றும் நினைக்க தோன்றுகிறது.

...

>