''இது எழ வேண்டிய தருணம்''

மாவீரர் நிச்சயம் மீண்டும் தோன்றுவார்! இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் நம்பிக்கை! இந்த நம்பிக்கையில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை அவர் நிச்சயம் நம்மிடையே தோன்றத்தான் போகின்றார்!

உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே ஒரு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதைபோல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.இது தளர்ந்து போகும் தருணம் அல்ல! உறுதியுடன் நம்மை நிலைப்படுத்தி கொண்டு எழ வேண்டிய தருணம்!

சரி!

விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட இயக்கம் அதனால் தமிழகத்தில் சாமானிய மக்கள் புலிகள் இயக்கத்தை பற்றி பேச தயங்கினார்கள்.இலங்கை தமிழர்களை பற்றி பேசுவதுகூட புலிகள் ஆதரவு பேச்சாக அமைந்துவிடுமோ என நினைத்தார்கள்.

இப்போது?

விடுதலை புலிகளை ஒழித்து விட்டதாக இலங்கை -இந்திய அரசுகள் அறிவிக்கின்றன! இப்போது பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் யாருக்கும் எந்த சங்கடமும் இல்லை!


எத்தனை நாளைக்குத்தான் வெறும் குரல் மட்டும் கொடுத்து கொண்டிருப்பது?

இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக, வலைப்பதிவுகளில் அனல் பறக்க எழுதி ஆகிவிட்டது! மனித சங்கிலிகள் அமைத்தாகிவிட்டது! பேரணிகள் நடத்தி ஆகிவிட்டது!தீக்குளிப்புகளையும் பார்த்தாகிவிட்டது! உண்ணா விரதங்களும் இருந்தாகி விட்டது!என்ன பலன் ? ஒன்றுமே இல்லை! தமிழகமே ஒன்று திரண்டு ருத்ர தாண்டவம் ஆடி இருந்தாலும் அங்கே செத்து கொண்டிருந்த ஒரு உயிரையும் காப்பாற்றி இருக்க முடியாது! இதுதான் உண்மை!


போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு இடம் அளித்து, சம உரிமை வழங்க போவதாக இலங்கை அறிவித்துள்ளது! உலக நாடுகளின் உதவியுடன் அவர்களுக்கு சமஉரிமை வழங்க பட்டாலும் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப எத்தனை காலம் ஆகும்? மேலும் அங்கு உள்ள குழந்தைகளின் நிலையை நினைத்து பார்த்தால் ??? குண்டு மழையையும் , ரத்த காயங்களையும், பிண குவியல்களையும் பார்த்து பார்த்து அந்த குழந்தைகளின் மனம் எந்த நிலையில் இருக்கும் ? அங்குள்ள குழந்தைகள் திடமான மனதுடன் நல்ல கல்வியினை பெற வேண்டும். அங்கு வளரும் குழந்தைகள் சிறந்த எதிர் காலத்தை பெற வேண்டும் அதற்கு தமிழக தமிழர்கள் உதவி புரிய வேண்டும்! இது தமிழக தமிழர்களின் கடமை. வெறுமனே குரல் கொடுத்தல்,போராடுதல் என்று இல்லாமல் அவர்களுக்கு நாம் நேரடியாக உதவ வேண்டும்.சில கேள்விகள்;-


பாதிக்க பட்ட மக்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து கொண்டு நேரடியாக உதவ முடியுமா?


அங்குள்ள மக்களை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு உதவ முடியுமா ?

அங்கு சகஜ நிலையில் வாழும் தமிழர்களின் உதவியுடன் அவர்களை தொடர்பு கொண்டு உதவ முடியுமா?

இந்த கேள்விகளுக்கு என்ன என்ன சாத்திய கூறுகள் உள்ளன என்பதை விபரம் அறிந்தவர்கள் சொல்லுங்கள்!

உதாரணமாக பாதிக்க பட்ட ஒரு குடும்பத்துக்கு அந்த குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவ நினைக்கிறேன்,அல்லது குறைந்த பட்சம் ஒரு குழந்தையை படிக்க வைக்க நினைக்கிறேன் .நான் என்ன செய்ய வேண்டும் ? ஆறரை கோடிக்கு மேல் இருக்கும் தமிழக தமிழர்கள் மனது வைத்தால் பாதிக்க பட்ட இலங்கை தமிழ் மக்களை வெகு விரைவில் மீட்டு பொருளாதார ரீதியிலும் மனோ ரீதியிலும் அவர்களை வெற்றி அடைய செய்ய முடியும்.
தமிழக தமிழர்களை குற்றம் சொல்லும் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள்!

புலிகளை குற்றம் சொல்லும் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள்!

புலிகளை குற்றம் சொல்லும் தமிழக தமிழர்களும் இருக்கிறார்கள்!

ஆனால்! அனைவரும் இலங்கையில் தமிழர்கள் அமைதியுடன் வாழவேண்டும் என்று விரும்புகின்றவர்கள்தான்! இப்போது நமக்குள் எந்த சர்ச்சையும் வேண்டாம் தலையில் கையை வைத்து கொண்டு முடங்கும் தருணம் அல்ல இது!

இது எழ வேண்டிய தருணம்

..................

>