''குடித்ததில் பிடித்தது''

குடி குடியை கெடுக்கும்! குடி பழக்கம் எல்லாவற்றிற்கும் தீங்கானது!!

எனக்கு ஒரு சின்ன ஆசை அதாவது மெரீனா பீச் ல நல்லா மழை அடிச்சுகிட்டு ஊத்தணும் யாருமே அங்க இருக்க கூடாது மணல் வெளி ஓரமா கார நிப்பாட்டி காருக்குள்ள உக்காந்து தண்ணி அடிக்கணும்.ஒருநாள் அப்படி கிளம்பியாச்சு அப்போ மழைக்காலம் தான் ! இங்க பெரம்பூர்ல நச நச ன்னு தூறல் போட்டுக்கிட்டு இருக்கு கிழக்கு பக்கமா வானத்த பார்த்தா நல்லா மழை அடிச்சிகிட்டு பெய்யும் போல இருந்தது! மதிய நேரம் அது!! சரக்கு மற்றும் சைடு டிஷ், பிரியாணி எல்லாம் வாங்கிகிட்டு கார எடுத்துகிட்டு கிளம்பியாச்சு சீரணி அரங்கம் இருந்ததே அதுக்கு பின்னாடி கார் கொஞ்சதூரம் கடல் வரை போகும் அங்க போய் கார நிறுத்துறதா திட்டம்.

ஆனா ? யாரு கண்ணு வைச்சாங்களோ தெரியல பீச் நெருங்க ,நெருங்க மழை குறைந்து லேசா வெயில் அடிக்க ஆரம்பிச்சது! பீச் போனதும் பார்த்தா நல்லா சுள்ளுன்னு வெய்யில்! என்ன இது வீணாப்போன வானிலை?

வெறுப்பா போச்சு அப்புறம் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் வண்டிய நிப்பாட்டி தண்ணி அடிச்சுட்டு வந்தோம்! அப்புறம் அதுபோல தண்ணி அடிக்க முயற்சி பண்ணல.


போன வருஷம் கொடைக்கானல் போனோம் அப்போ தண்ணி அடிச்ச சம்பவத்த
மறக்கவே முடியாது! வேன் எடுத்துகிட்டு போய் இருந்தோம் முணு ,நாலு குடும்பங்களா போய் இருந்தோம். ஒரு நாள் காலைல கிளம்பி வெளில சுத்தி பார்த்துட்டு மதிய சாப்பாட்டுக்கு தங்கி இருந்த எடத்துக்கு வந்துட்டோம் அங்க சமையல் பண்ண ஏற்பாடு பண்ணி இருந்தோம்.எல்லாரையும் எறக்கி விட்டுட்டு தண்ணி அடிக்கிற பழக்கம் உள்ள நல்ல புள்ளைங்க ஒரு அஞ்சு பேரு வேன்ல கிளம்பிட்டோம்!

சரக்கு வாங்கிகிட்டு வேன ஒரு ஓரமா நிறுத்தினோம்!அப்போ
அடிச்சுது பாருங்க மழை!!! மழைனா ..மழை அப்படி ஒரு அடை மழை! சுத்தி உயர உயரமா மரங்கள்! மழைல தொப்பலா நனைஞ்சு நிக்குது ! ஒரு வேனுக்குள்ள இருந்துகிட்டு பெய்யென பெய்ஞ்சுகிட்டு இருக்குற அடை மழையை ரசிக்கிறதே
ஒரு போதைதான் கூடவே சரக்கும் இருந்தா அடடா சொல்லவே வேணாம்!

அப்போ எனக்கு பள்ளி கூடத்துல படிச்ச நெடுநல் வாடையில் நக்கீரர் கூறும் மழைக்கால வர்ணனையை எழுது அப்படிங்குற கொஸ்டீன் தான் நெனைப்பு
வந்தது! சமீபத்துல ஒரு பதிவர் இதை பத்தி எழுதி இருந்தாங்க!

அதுல!
மழையில் நனைந்த கமுக மரங்கள் காற்றின் வேகத்தில் அசைந்து உருண்டு ,திரண்டு அழகாக காட்சி அளித்தன, நீரின் வேகத்தை எதிர்த்து மீன்கள் நீந்திவர அதெற்கென காத்திருந்த கொக்குகள் அந்த மீன்களை பிடித்து உன்னலாயின, சிறு மழைக்கு அஞ்சாத கள்ளுண்ட மாந்தர்கள் சத்தமாக இரைந்த படி சென்றனர் இப்படியாக போகும் அந்த வர்ணனை !

மழை நிக்கவே இல்ல வேணும்கிற அளவுக்கு பெய்ஞ்சது! நல்ல நிதானமாபொறுமையா மழைய ரசிச்சுகிட்டே போதை தரும் திரவம்
வயிற்றில்
இறங்க அருமையாய் கழித்தோம் அந்த மாமழை தினத்தை.


.......................................................................................................
>

ஒம்பேச்சு ''க்கா''

வெள்ளி கிழமை இரவு வீட்டை நெருங்குகிறேன் வண்டி சத்தம் கேட்டு அப்பா வந்தாச்சு! அப்பா வந்தாச்சுன்னு! கேட்டு மேல ஏறி நின்னு சத்தம் போடும் பெரிய பொண்ண காணும்!! சின்னவங்க மட்டும் அப்பா! ன்னு ஓடிவந்து காலை ட்டி புடிச்சுகிடாங்க! அம்மு எங்க? அதுக்குள்ளே துங்கிடுச்சா ன்னு தங்கமணிகிட்ட கேட்டா? பக்கத்து வீட்டு ஜனனி அம்முகூட ''காய்'' விட்டுடுச்சாம் அழுதுகிட்டு படுத்து இருக்கு சொல்ல! அவ்ளோதானா! ன்னு சொல்லி அம்முவ பார்த்தா அழுது முகமெல்லாம் வீங்கி போய் சோகமா படுத்து இருக்கு! கிட்ட போய் சமாதான படுத்தி தூங்கவைக்கிறதுக்குள்ள பெரிய பாடா போச்சு!!


சனி கிழமை கடைக்கு கிளம்புறேன்! கேட்டுக்கு வெளிய பக்கத்து வீட்டு ஜனனி இன்னும் ரெண்டு பிள்ளைங்க கூட எதோ விளையாடிகிட்டு இருக்கு! அம்மு கேட்டுக்குள்ள நின்னுகிட்டு எனக்கு டாட்டா காட்டுது முகத்த சோகமா உம்முன்னு வைச்சுக்கிட்டு! வண்டில போகும்போது யோசிச்சுகிட்டே போறேன் குழந்தைகள் சண்டை வந்து ரொம்ப.... ரொம்ப.....சாதாரண விஷயம்தான் அடிச்சுகிறதும் சேர்ந்துகிறதும்,சகஜமான விஷயம்! ஆனா? குழந்தைகளை பொறுத்தவரை அவங்களுக்கு அது பெரிய விஷயம் தானே? கடைக்கு வந்தபின்னரும் அம்முவின் டல்லான முகம் மீண்டும் மீண்டும் வந்து மனசில் சின்ன உறுத்தல்! ஒருவரை மற்றவர்கள் நிராகரித்தால் ஒரு சங்கடம் உருவாகுமே?அதுபோல தானே அம்முவுக்கும் இருக்கும்! இந்த நிலைமையை சமாளிக்கும் அல்லது தாங்கும் ஒரு திறன் அம்முவுக்கு இருக்குமா ? அம்முவின் முகம் என்னை இயல்பாக இருக்க விடவில்லை!
எப்போதும் ஒன்றாக விளையாடும் பிள்ளைகள் ஒரு பிள்ளை மட்டும் தனித்து விடப்பட்டால் ஒரு மன கஷ்டம் தோன்றதானே செய்யும்?

மதியம் சாப்பிட வீட்டிற்கு செல்ல! எப்போதும் மதியம் சாப்பாடு கொடுத்து அனுப்பும் தங்கமணி வீட்டிற்கு சாப்பிட வந்ததை சற்று அதிசயமாய் பார்க்க? அம்மு அச்சுவோடு விளையாடி கொண்டு இருக்க !! அம்மு ஜனனி கூட சேர்ந்துடுச்சா ன்னு தங்க மணிக்கிட்ட கேக்கவே கொஞ்சம் வெக்கமா இருக்கு சும்மாவே நம்மள வைச்சு காமடி பண்ணும் தங்கமணிக்கு சொல்லவே வேணாம்!


இருந்தாலும் கேக்குறேன் அம்முவும்,ஜனனியும் சேர்ந்துட்டாங்கலான்னு!
தங்கமணி என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு .....ம்ம்ம்ம் .....ரொம்ப.... முக்கியம்.... ன்னு சொல்ல! நானும் விடாம போய் ஜனனிய கூட்டிகிட்டு வாயேன் அம்முவ பாரு காலைல இருந்து டல்லா இருக்குன்னு சொல்ல!

உங்களுக்கு என்ன பைத்தியமா குழந்தைங்க அடிச்சுக்கும் சேர்ந்துக்கும் இதுங்களுக்கு என்ன நீங்க பஞ்சாயத்தா? அதுங்க கூட சேர்ந்தா கேட்டுக்கு வெளிய போய் வெளையாடும் நான் தேடி தேடி புடிக்கணும் இப்போதான்
வீட்டுக்குள்ளயே இருக்கு போய் வேலைய பாருங்க அம்மு என்ன டல்லவா? இருக்கு? நல்லாத்தான் இருக்கு பாருங்க ன்னு சொல்ல! அம்மு நல்லா சகஜமா இருக்குறது போல இருந்தாலும் என் கண்ணுக்கு என்னமோ டல்லாதான் தெரியுது!


அன்னிக்கு சாயங்காலம் வரை வீட்டுலையே இருந்து குழந்தைகள் கூட விளையாடிட்டு கடைக்கு வந்துட்டு நைட் வீட்டுக்கு போறேன்! அப்போவும் அம்மு முகத்துல சின்ன கவலை தெரியுது! ''சனி கிழமை நைட்'' நானும் தூங்கிடுறேன்!

ஞாயிறு காலை குழந்தைகள் சேர்ந்துட்டாங்கலானு ரகசியமா கவனிக்கிறேன் அப்படி ஒன்னும் தெரியல! அம்மு கவலை படக்கூடாதுன்னு! வண்டில வைச்சு வெளில கூட்டி போய் அதுக்கு புடிச்ச சில பொருள்கள வாங்கி கொடுத்து கூட்டி வரேன்.

மதியம் ஆச்சு நல்ல தூக்கம்!

தூங்கி எழுகிறேன் வீட்டு திண்ணைல குழந்தைகள் சத்தம்! அம்மு,ஜனனி எல்லாம் ஒன்னா விளையாடுறாங்க!;;))

என்ன? எல்லாம் ஒன்னு சேர்ந்தாச்சா ன்னு கேக்குறேன்?

ஆமாம்பா! நீ தூங்கிகிட்டு இருந்தில்ல அப்போவே நாங்க பழம் விட்டுடோம்னு அம்மு உற்சாகமாய் சொல்ல!

மனதில் இருந்த ஒரு சின்ன பாரம் நீங்கி உற்சாகம் பிறந்தது!

அதோடு ஞாயிறு இரவை உற்சாகமாய் கழிக்க ஆயத்தமானேன்!!
>

பிறந்த குழந்தை துள்ளி குதித்து ஓடினால் ?

இந்த மான் குட்டி,முயல் குட்டி ,சிங்க குட்டியெல்லாம் பிறந்த உடனே துள்ளி குதிச்சு ஓடுதுல்ல ? அதேபோல நம்ம மனுஷ புள்ளங்க பிறந்த உடனே துள்ளி குதிச்சு ஓடினா எப்படி இருக்கும்? இது சும்மா வெளையாட்டுக்கு ஒரு கற்பனை தான் ! யாரும் தப்பா நினைக்க கூடாது!!

பிரசவம் ஆகி குழந்தை பிறந்தாச்சு அம்மா கேக்குறாங்க எங்க என் குழந்தை
காட்டுங்கன்னு!

டாக்டர்; சிஸ்டர் எங்கம்மா குழந்தை ?நர்ஸ்; இங்கதான் டாக்டர் எறக்கி விட்டேன் வெளில ஓடிபோச்சு போல!


டாக்டர் ; உன்கிட்ட எத்தினிவாட்டி சொல்லுறது பிரசவ நேரத்துல கதவ தொறந்து வைக்காதன்னு ! குழந்தை பிறந்து அவங்க அம்மா பேர குழந்தை முதுகுல எழுதி ஒட்டுற வரைக்குமாவது ஜாக்கிரதயா இருக்க கூடாதா? வெளில போயி பாரு கேட்டுகிட்ட போய்ட போகுது


நர்ஸ் வெளில போயி பாக்குறாங்க அப்போ குழந்தை மொசைக் தரைல படுத்து உருண்டு வெளையாடிக்கிட்டு இருக்கு!உள்ள துக்கிக்கிட்டு போய்டுறாங்க!


அப்போ வார்டு பாய் ரெண்டு குழந்தைகள துக்கிக்கிட்டு வராரு..


ஏங்க யாரு குழந்தைங்க இவங்க??


முதுகுல பேர பாக்குறாரு தங்கம்மா யாருங்க ??


அப்போ அங்க ஒரு பாட்டி வராங்க! தங்கம்மா குழந்தை என்னுதுதாங்க
குடுங்க!


ஏம்மா ? உங்க குழந்தையா இது ? உங்கள பார்த்தா வயசான மாதிரி
இருக்கு?இல்லங்க தங்கம்மா என் பொண்ணு ! பொண்ணுக்கு ஆபரேசன்
பண்ணி இருக்கு! குழந்தை அங்கதான் இருந்துச்சி பாத்ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள வெளிய ஓடி வந்துடுச்சி!


சரி இந்தாங்க பத்திரமா பார்த்துக்கங்க இந்த ரெண்டு குழந்தைகளும் கேட்டுகிட்ட வந்துட்டாங்க!

இன்னொரு குழந்தை முதுகுல பேர பாக்குறாரு

சின்ன பொண்ணு யாரும்மா ?


அப்போ ஏய் புள்ளைய புடி... புள்ளைய புடின்னு... ரெண்டு பேர் ஒரு குழந்தைய தொரத்திகிட்டு ஓடுறாங்க!

வார்டு பாய் அந்த குழந்தைய புடிக்க போறாரு அந்த குழந்தை அவருக்கு டிமிக்கி கொடுத்துட்டு ஓடிடுது.... கேட்டு தொறந்து இருக்கு சீக்கிரமா போயி
புடிங்கன்னு சொல்லிட்டு வார்டு பாய் சின்ன பொண்ண தேடி போறாரு!

யாரும்மா சின்ன பொண்ணு?

அந்த லாஸ்ட் பெட்ல இருக்காங்க அவங்கதான் சின்ன பொண்ணுன்னு யாரோ சொல்ல! கிட்ட போயி பார்த்தா அந்த அம்மா நல்லா துங்குறாங்க!

ஏம்மா எந்திரிம்மா! வார்டுபாய் போட்ட சத்தத்துல அந்தம்மா அலறி எந்திருச்சி ஐயோ என் குழந்தை!ன்னு சொல்ல!

குழந்தை எந்திரிச்சு கேட்டுகிட்ட வந்துடுச்சி நீ என்னமோ மகா ராணியாட்டம் துங்குற? உன் கூட யாரும் இல்லையா?

இல்லங்க நாங்க லவ் மேரேஜ் யாரும் இல்லன்னு சொல்லுறாங்க

புள்ளைய பத்திரமா பார்த்துக்கமா தூங்குற புள்ளயயே திருடுற காலம் இது! இப்படி அலட்சியமா இருக்கியே ?

போனவாரம் இப்படித்தான் ஒரு புள்ள கேட்டுக்கு வெளிலையே போய்டுச்சி
அப்புறம் ரொம்ப நேரம் தேடி புடிச்சாங்க!

அப்போ அங்க ஒரு மொரட்டு ஆயா வருது! அதுபாட்டுக்கும் கத்திகிட்டே போகுது! புள்ளைய பெத்தவங்க எல்லாம் அளச்சியமா இருக்காங்க புள்ளைங்க எல்லாம் அது இஷ்டத்துக்கு கண்ட எடத்துல ஆய் போய் வைக்குதுங்க!யாரு சுத்தம் பண்ணுறது? பெரிய டாக்டர் வந்தா? என்னையதான் திட்டுறாரு!..>

''என்னைப்பற்றி நான்'' என் கேள்வி -என் பதில்

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஜீவன் இந்த பெயர் நானே ''எனக்கு'' வைச்சுக்கிட்டது ! இந்த பெயர் எனக்கு புடிக்கும். எனக்கு என் அப்பா வைச்ச பேரு தமிழ் அமுதன் இந்த பேரும் எனக்கு ரொம்ப புடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சில வருடங்கள் முன்னாடி! காரணம் சொன்னா உங்களுக்கும் அழுகை வர கூடும்! அதனால காரணம் வேணாம்!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இல்லை சுத்தமா புடிக்காது ! மத்தவங்களுக்கும் எளிதில் புரியாது! ஆனா பதிவெழுத எந்த பிரச்னையும் இல்ல டைப் பண்ணினா எழுத்தெல்லாம் அழகழகா வருது!

4).பிடித்த மதிய உணவு என்ன?

இத மதிய உணவுன்னு சொல்ல முடியாது! ஆனா? நல்ல வெயில் நேரத்துல
மதிய உணவா சாப்பிட புடிக்கும். நல்லா ஜில்லுன்னு தயிர் ஊத்தின பழைய சாதம்! அதுக்கு தொட்டுக்க,'' உப்பு மிளகாய் பொடி போட்ட பச்சை மாங்காய்'' ''நார்த்தங்காய் ஊறுகாய் '' ''அடை மாங்காய் ''கிடாரங்காய் ஊறுகாய் ''''நெல்லிக்காய் ஊறுகாய்'' ''சுண்டைக்காய் வத்தல்'' ''முதல் நாள் வைச்ச மீன் கொழம்பு '' ''சுட்ட கருவாடு'' ''கொத்தவரங்காய் வத்தல்'' ''முக்கியமா றுத்த மோர் மிளகாய் வத்தல்'' சின்ன வெங்காயத்த உரிச்சு சாதத்துல போட்டுக்கணும்! பெரிய வெங்காயத்த வெட்டி தனியா வைச்சுக்கணும்! ம்ம்ம் அப்புறம் .. வெங்காயம் ,தக்காளி ,புளி எல்லாம் சேர்த்து அம்மில அரைச்ச ஒரு தொவையல்!

இவ்ளோ!! ஐட்டங்களையும் சுத்தி வைச்சுகிட்டு நடுவுல நல்லா வண்ணமா உக்காந்து சும்மா ஒருமணிநேரம் சாப்பிடனும்! இப்படி சாப்பிட்டுட்டு தூங்கினா அடடா! சும்மா ராஜ தூக்கம்தான்!5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை! உடனே பழகிடலாம் ஆனா? நட்பு என்பது ? உடனே பழகி வேகமாய் வளர்ந்து முடிவதில் விருப்பம் இல்லை. நட்பானது விதை விதைத்து , சிறிய செடியாகி , வளர்ந்து பெரிதாகி மரமாக வேண்டும் என்பது
என் எண்ணம். அதோடு நட்பு நிரந்தரமாக நீடித்து இருக்க சரியான கால
அவகாசத்தில் வளர வேண்டும். என்பது என் தாழ்மையான கருத்து!


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கண்டிப்பாக அருவிதான் அருவிக்குளியலுக்கு அடிமை நான்! குற்றாலத்தில் நள்ளிரவில் மெயின் அருவியில் வேணுங்கிற அளவிற்கு குளிச்சு இருக்கேன்! இப்போ சென்னைக்கு அருகில் இருக்கிற ''கோனே பால்ஸ்'' க்கு போய் குளிப்பதும் உண்டு !

கடல் குளியலும் புடிக்கும் ஆனா உடம்பெல்லாம் பிசு பிசு ன்னு ஆயிடும் !

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்,பேச்சு

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
வேகம்,சுறுசுறுப்பு , சிக்கல்களை சவாலாக எதிர்கொள்ளுதல், என்னை நானே விலகி நின்று ரசித்தல், விமர்சித்தல் , கண்டித்தல் எல்லாம் புடிக்கும். (சுய தம்பட்டம் அடிக்க வாய்ப்பு கிடைச்சா விட்டுடுவோமா)

முக்கிய வேலை நேரத்தில் கணினியுடன் பொழுது போக்குவது புடிக்காது! மேலும் அடிக்கடி தோன்றும் சோம்பேறி தனம்!


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித் பிடிக்காத விஷயம் எது?

புடிச்சது -அப்பாவித்தனம்
புடிக்காதது -முன் கோபம்


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாரும் இல்லை11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை சட்டை ,கருப்பு ஜீன்ஸ்

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பாட்டு கேக்கல சன் டிவில ''அறிந்தும் அறியாமலும்'' படம் ஓடிட்டு இருக்கு


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு

இந்த கேள்விய இப்படி கேட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்!

(13a) உங்களை மரமாக மாற்றினால் என்ன மரமா
ஆசை?

இப்படி கேட்டதா நினைச்சு பதில் சொல்லுறேன்!

சிவப்பு கலர்ல பூ பூத்து ரோடு ஓரத்துல வைச்சு இருப்பாங்களே அதன் பேரு தெரியல! அந்த மரம் எனக்கு ரொம்ப புடிக்கும்! முழுக்க பூத்து இருக்குற அந்த மரம் மழைல நனைஞ்சு இருக்குறப்போ ரொம்ப ரம்மியமா இருக்கும்!

சரி அந்த மரமா மாறிட்டா? போற ,வர்றவங்க மேல பூவை உதிர்த்து விளையாடலாம்! குழந்தைங்க வந்தா ஒரு சிலுப்பு சிலுப்பி பூக்களை மொத்தமா உதிர்த்து அவங்கள குஷி படுத்தலாம்! நல்லா ஜாலியா பொழுது போகும் .


14.பிடித்த மணம்?

கோயில்ல அர்ச்சனை பண்ணும்போது அந்த தீப வாசனை,பூவாசனை எல்லாம் கலந்த மாதிரி ஒருவாசனை வருமே (தெய்வீக மனம் ?) அந்த வாசனை புடிக்கும். (ஆனா கடவுள் பக்தியெல்லாம் அதிகம் கிடையாது )

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

அமிர்த வர்ஷினி அம்மா இவங்க எழுத்துகள் மிக சுவாரஸ்யமானவை! எங்கும் காணாத தனி பாணி இவர் எழுத்துகளில் தெரிகிறது! இவங்க எழுதும் அமித்து அப்டேட்ஸ் ஒவ்வொன்றும் உரை நடை கவிதை!!

என் வானம் அமுதா எப்படி இவங்களுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது?
என வியந்து பாராட்டும் அளவிற்கு இவர் கவிதைகள் இருக்கும்!இவங்க கவிதை களில் ''திண்ணை'' எனக்கு மிகவும் பிடித்தது .


புதியவன் அருமையான கவிஞர்! வார்த்தைகளை இவர் கையாளும் விதத்தில் அந்த வார்த்தைகளுக்கு தனி ருசி வந்து விடும் .16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

ரம்யா

இவர் பல நகைச்சுவை பதிவில் கலக்கி இருக்கிறார்! குழந்தைகளுக்கு கதை
சொல்லியும் அசத்தி இருக்கிறார்! இவர் சமுக சிந்தனையோடு எழுதிய
பெற்றோர் கவனத்திற்கு என்ற பதிவு மிக முக்கியமானது அதுவே எனக்கு
பிடித்தது!


17. பிடித்த விளையாட்டு?

''கிரிக்கெட்'' (நெறைய மேச் விளையாடி இருக்கிறேன்) ''பால் பேட் மின்டன்''
இப்போது விளையாடுவது ''இறகு பந்து'' அப்புறம் ... நல்லது ..கெட்டதுன்னா
ரம்மி ஆடுவோம்.


18.கண்ணாடி அணிபவரா?
இல்லை! வெய்யில் காலத்துல சும்மா ஸ்டைலுக்கு கூலிங் கிளாஸ் மட்டும்

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
அழுத்தமில்லாத, சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்புடைய படங்கள்
டும் டும் டும் , கண்டு கொண்டேன் ,கண்டு கொண்டேன் மாதிரி படங்கள்!!


20.கடைசியாகப் பார்த்த படம்?

தசாவதாரம்

21.பிடித்த பருவ காலம் எது?

மழை காலம் ஆனா! மழை பெய்யும் போது எங்க ஊர்ல இருக்கணும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

எதுவுமில்லை

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை
நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்
?

மனதை கவரும் புதிய படம் கிடைத்தால் மாற்றுவேன்


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்- என் குழந்தைகளின் சிரிப்பு சத்தம் .

பிடிக்காத சத்தம்- குழந்தைகளை அதட்டும் தங்க (சிங்க ) மணியின் அதட்டல் சத்தம்.


25.வீட்டை விட்டு எனக்கு இகவும் இடித்தது பட்ச தொலைவு?

சபரி மலை

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கலாம்!


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எவ்வளவுதான் உஷாராகவும்,புத்திசாலி தனமாகவும் இருந்தாலும் கூட
நம்பிக்கை துரோகிகளிடம் ஏமாந்து விடுவது!

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம் ,சோம்பேறித்தனம்!

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

குற்றாலம், கொடைக்கானல்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எவ்வளவுதான் நடித்தாலும் நாம் யார் என்பதை நம் கண்கள் காட்டி கொடுத்து விடும். கண்களில் நேர்மையான பார்வையுடன் கடைசி வரை வாழ ஆசை
முடியாது போல இருக்கு!

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

ம்ம்ம்ம் ................ உண்மை சொல்லணுமில்ல?

தண்ணி ...தண்ணி ...அடிக்கிறது !


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

படிக்கும் போது வாழ்க்கை பற்றிய ஒரு எண்ணம் இருந்தது அது இப்போது இல்லை! கல்யாணம் முன்னாடி வாழ்க்கை பற்றிய ஒரு பார்வை இருந்தது
அதுவும் இப்போது இல்லை! இப்போது இரண்டு குழந்தைகள் ஆன பிறகு
அவர்களை வளர்ப்பதும் ஆளாக்குவதும்தான் வாழ்க்கை என தோன்றுகிறது!
அதுதான் கடமையும் கூட! ஆகவே கடமையை நிறை வேற்றுதல்தான் வாழ்க்கை என வைத்து கொள்ளலாமா?>