''என் அப்பா வெளிநாட்டில இருக்காரு''

என் அப்பா வெளி நாட்டில இருந்தது இல்ல !
பாம்பே ல இருந்தார் ஆனா அது வெளி நாட்டில
இருந்தது போல தான். ஒரு தகப்பன் வெளிநாட்டில
இருக்கும் போது அவங்க வீட்டில என்ன என்ன
பிரச்சனைகள் வரும் அப்படிங்குறத என்னால
ஓரளவு விளக்க முடியும்.

எங்க ஊரு பக்கம் வெளி நாட்டில வேலை செய்றவங்க அதிகம்.

சென்னை விமான நிலையம்

ஒரு நண்பர் வெளிநாட்டில இருந்து வர்றதால
அழைக்க போய் இருந்தேன். விமானம் தாமதம்,
அதுனால சும்மா அப்படியே ஒரு ரவுண்டு சுத்தி
பார்க்கலாம்னு போனப்போ நான் கண்ட காட்சி!

ஒருத்தர் வெளிநாடு போறார் அவர வழி அனுப்ப
அவங்க அம்மா,அப்பா,மனைவி, பத்து வயசு இருக்கும்
ஒரு மகன், ஏழு வயசு இருக்கும்ஒரு மகள்.

அவர் மனைவி கண்ணெல்லாம் கலங்கி நிக்குறாங்க
ஏக்கமான பார்வையோட அவங்க புள்ளைங்க அவங்க
அம்மாதான்பேசுறாங்க! தம்பி! ஒடம்ப நல்லா
கவனிச்சுக்கணும் நேரத்துக்கு சாப்பிடனும், இங்க
வீட்டுலையே நேரத்துக்கு சாப்பிட மாட்ட அங்க என்ன
பண்ண போறியோ? அப்படி சொன்னதும் அவங்க
மனைவி லேசா தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாங்க!
அம்மா அழுவுறதபார்த்த புள்ளைங்களும் அழ ஆரம்பிக்க
அவர் அப்பா, சரி கிளம்புற நேரத்துல அழ கூடாது
அப்படின்னு லேசா அதட்டுறார்.

வெளிநாடு போற அவர பார்க்குறேன் மனுஷன் அப்படியே
நொந்துபோய் நிக்குறார் பாவமா இருக்கு அவர பார்க்க !
அவங்க அம்மா சொல்லுறதுக்கு தலைய ஆட்டுறார்
புள்ளைங்கள பார்த்து நல்லா படிக்கணும் அம்மா பேச்ச
கேட்டு நடக்கணும் அப்படிங்குறார்.

பேசிகிட்டு இருக்கும் போதே அவர்கூட கிளம்புறவங்க
வந்துட்டாங்க வாங்கண்ணே நேரமாச்சு உள்ள போக
வேண்டியதுதான் அப்படின்னு
சொல்ல! மனசே இல்லாம கிளம்பி போறார்.
அவர் மனைவி அவர்கிட்ட போய் என்னமோ
சொல்லுறாங்க அவரும் தலைய ஆட்டுறார்
பிரியா விடை பெற்று கிளம்பி போறார்.

இத பாக்கும் போது எனக்கு என்ன தோணிச்சுன்னா ?
கூழு,கஞ்சி, குடும்பத்த ஓட்டினாலும் இப்படி பிரிய கூடாது
என்ன வாழ்க்கை இது ? குடும்பத்த பிரிஞ்சு வாழ்றது
ஒரு வாழ்க்கையா ?அப்படிதான் தோணிச்சு!

நான் நெனைச்சது சரிதானா ?

எங்க ஊரு பக்கம் வெளிநாட்டில வேலை செய்றவங்க
அதிகம்னு சொன்னேன்ல? அவங்க நிலைல இருந்து
யோசிப்போம். இப்போ நான் என்னையே எடுத்துக்கிறேன்
நான் குடும்பத்தோடதான் இருக்கணும் வெளிநாடு
போக கூடாதுஅப்படிங்குற கொள்கையோட இருக்குறேன்.

இப்போ என் சொந்தகாரங்க,என் ஊர்காரங்க,
இவங்கள்ல என்னைபோலவே இருக்குற இவங்க வெளிநாடு
போய் நல்லாசம்பாதிச்சு நல்ல வீடு கட்டி நல்ல வசதியா
ஆயிடுறாங்க.இப்போ எனக்கும் தோணுது
வெளிநாடு போகனும்னுஆனா நான் சமாதான
படுத்திகிறேன் குடும்பத்தோடவாழ்றதுதான்
வாழ்க்கை அப்படின்னு என் மனைவியையும்
சமாதான படுத்துறேன். கொஞ்ச நாள்ல குழந்தை
பிறக்குதுஇப்போ எங்களுக்கு என்ன தோணும் மத்த
புள்ளைங்க போலவேஎங்க புள்ளையையும் நல்ல
வசதியா வளர்க்கணும் அப்படின்னு.

எங்க ஊர் மாதிரி ஒரு சின்ன நகரத்துல மாசம்
ஒரு பத்தாயிரம்ரூபாய் சம்பாதிக்கிறதே
பெரிய விஷயம்! எங்க பிள்ளை அடுத்தவங்கல
பார்த்து ஏங்கி போய்ட்டா? இப்போ நான் தானாவே
வெளிநாடு கிளம்பிடுவேன்.

இப்போ வெளிநாட்டில வேலை செய்கிற எல்லா
ஆண்களுமே தன் மனைவிகுழந்தைகளுக்காக
தனது எல்லா சந்தோசங்களையும் தியாகம்
செய்ஞ்சவங்கதான்அந்த ஆண்கள வீட்டுல
இருக்குற மனைவி மக்கள் நல்லா புரிஞ்சுக்கணும்
அவங்க மனைவி மக்களை நினைக்காத நாளே இருக்காது.

அதும் கல்யாணம் ஆனா புதுசுல பிரியுறாங்க
பாருங்க அவங்க நிலைமை இன்னும் சோகம் .
நான் என் நண்பர்கள் சிலரை பார்த்து இருக்கேன்
அவங்க தங்கள் குழந்தைகளிடம்
''மழலை இன்பத்தை'' அனுபவித்ததே கிடையாது!

குழந்தை பிறந்து இரண்டு வருஷம் கழித்து பார்க்கும்
தந்தைகளும் உண்டு ஒரு வயசு, இரண்டு வயசுல
பிள்ளைங்கள பிரிஞ்சு நாலு வருஷம் கழித்து
பார்க்கிற தந்தைகளும் உண்டு.

வெளிநாட்டில் இருந்து வரும்போது

வெளிநாடு போயிட்டு வரும் நபருக்கு வீட்டில்
ராஜ மரியாதைதான் அவர் கேட்டதெல்லாம் கிடைக்கும்
இயல்பு நிலை திரும்ப சில நாள் ஆகும்.

இப்போ வீட்டில் உள்ளவங்க இத கவனிங்க

அப்படி இயல்பு நிலை திரும்பும்போது கணவரின்
கை இருப்பும் குறைய ஆரம்பிக்கும்.கை இருப்பு
குறைவதால் மரியாதை குறைகிறது
என்ற எண்ணம் அவருக்கு வராமல் மனைவி
கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
இப்படி மனைவி மக்களுக்காக எல்லா
இன்பங்களையும் தொலைத்து வாழும் கணவனை
தெய்வமாக போற்ற வேண்டும்.

கணவனை பிரிந்து (வாடும்) வாழும் மனைவி

வெளி நாடு செல்லும் கணவன் நிலை அப்படி இருக்க
கணவனை பிரிந்து இங்கே இருக்கும் மனைவியும்
பிள்ளைகளும் அனுபவிக்கும் சோகங்கள் ஒன்றும்
குறைந்தது அல்ல! தீபாவளி ,பொங்கல்,ரம்ஜான்
எதுவாகட்டும்எல்லோரும் குடும்பதலைவருடன்
கொண்டாடும் போதுதன் கணவர் இல்லாமல்
தந்தை இல்லாமல் அவர்களும் ஒரு
இருக்கமான நிலையிலேயே வாழ்கிறார்கள்.
அதோடு படிக்கும் பிள்ளைகளை ஒரு தாய்
தனியாக கவனிப்பது பெரிய கஷ்ட்டமான காரியம்.
தாய்க்கு, தாயாகவும்,தந்தைக்கு தந்தையாகவும்
வளர்க்க வேண்டும்.
மேலும் பல சொல்ல முடியாத துயரங்கள்
இப்படி கணவனை பிரிந்து குடும்பத்தை கவனிக்கும்
அவர்களைவணங்கியே ஆக வேண்டும்.

தகப்பனை பிரிந்து வாழும்

பிள்ளை


நான் இந்த பதிவினை எழுதிய நோக்கம் இதுதான்
நான் தகப்பனை பிரிந்து வாழ்ந்தவன். என் நிலையை
பாருங்கள்
எனக்கு சின்ன வயதில் ஒன்றும்
தோன்றவில்லை ஆனால் ஒரு பதி மூன்று வயதிற்கு
பின்னர் என் அப்பா ஊரில் இருந்து வரும்போது
மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.ஆனால்,
நாள் செல்ல செல்ல அவர் கண்டிப்பு எனக்கு
பிடிக்கவில்லை
. திடீரென்று வந்து கண்டிப்பதை
என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை
அவர் எப்படா கிளம்புவார் என நினைக்க தொடங்குவேன்.

கொஞ்சம் நினைத்து பாருங்கள் ஒரு மனிதன்
தன் பிள்ளைக்காகவும் குடும்பத்துகாகவும் தனியே
கஷ்ட்ட படுகிறார் ஆனால் அவர் மகன் அவர்
எப்போடா கிளம்புவார் என நினைக்கிறான்?
இங்கே நான் குற்றவாளிதான்.
என்னை போல ஒரு மகன் உருவாக கூடாது
என்பதுதான் இந்த பதிவின் முக்கிய நோக்கம்.

தகப்பன் வெளி நாட்டில் இருக்கும் போது
பத்து வயதிற்கு மேற்பட்ட மகனை
மிக கவனமாக வளர்க்க வேண்டும். தகப்பன்
அருகில் இருப்பது போன்ற உணர்வோடு அவனை
வழி நடத்த வேண்டும். முன்பு என் காலத்தில்
மாதம் இருமுறை கடிதம் மட்டுமே தொடர்பு
ஆனால் இப்போது அப்படி அல்ல சிறிய விசயங்களை
கூட கணவரிடம் கேட்டு கொள்ளலாம் கணவர்
பிள்ளையை எப்படி வளர்க்க விரும்புகிறாரோ
அதன் படி தாய் செய்ய வேண்டும். கொஞ்சம்
கவனம் தவறினால் தகப்பனுக்கும் பிள்ளைக்கும்
இடையில் பெரிய இடை வெளி வந்து விடும் பிறகு
இருவருக்கும் நடுவில் தாயார் மாட்டிக்கொண்டு
கஷ்ட்டப்பட நேரிடும்.


--------------------------------------


>

பயங்கரவாதம் (முனிவரும், கொட்டும் தேளும்)

எல்லோருக்கும் தெரிஞ்ச கதை ஒன்னு

ஒரு ஊருல ஒரு முனிவரும் அவருக்கு சில
சீடர்களும் இருந்தாங்க.ஒரு வாட்டி அந்த
முனிவர் ஒரு குளத்துல தன்
சீடர்களோட
குளிச்சுகிட்டு இருந்தாராம்.அப்போ தண்ணில
ஒரு ''தேளு'' தத்தளிச்சிகிட்டு இருந்திச்சாம்
அத பார்த்த முனிவர் அந்த தேள கைல எடுத்து
கரைல விட்டாராம் கைல எடுக்கும் போது
தேளு கைல ''கொட்டிச்சாம்'' அத பொறுத்துகிட்டு
கரைல விட்டாராம்.கொஞ்ச நேரம் கழிச்சு
அந்த தேளு மறுபடியும் தண்ணிக்குள்ள வந்துச்சாம்
அந்த முனிவர் மீண்டும் அத புடிச்சு கரைல
விட்டாராம் அப்போதும் அந்த தேளு அவர் கைல
கொட்டிச்சாம் பொறுத்துகிட்டு கரைல விட்டாராம்.
இப்படியே நெறைய தடவை ஆச்சு.

இத பார்த்த அவரது சீடர்கள் கேக்குறாங்க ஏன் ?
அந்த தேள்தான் கொட்டுதே அத கொன்னுட்டா
என்ன? அதுக்கு அந்த முனிவர் சொன்னாராம்
''கொட்டுறது தேளோட குணம் அத காப்பாத்துறது
என்னோட குணம்''
அப்படின்னு உடனே அவரது
சீடர்கள் ஆகா!ஓஹோன்னு! புகழ்ந்தாங்கலாம்
அந்த முனிவரை!

சரி! முனிவர் மகா புருசர் தேள் கொட்டினத
பொறுத்துகிட்டார்.. ஆனா அவரால் காப்பாற்ற
பட்ட தேள் அவர் சீடர்களை கொட்டிஇருந்தா?
கரைல இருக்குற மற்ற மக்களை கொட்டி இருந்தா?


இப்படித்தான் ஆச்சு நம்ம நிலைமை! நம்ம நாட்டில
''மஹா'' மனது படைத்த பெரியவர்கள் தங்கள்
பெரிய மனிதாபிமானிகள்,உயர்ந்த குணம்
படைத்தவர்கள் என்ற ஒரு ''இமேஜ்'' க்குகாக
தேள் போல இருந்த தீவிரவாதிகளை காப்பாத்தி
விட்டுட்டு நல்ல பெயரோட செத்து போய்ட்டாங்க
ஆனா அந்த தேள் இப்போ குட்டி போட்டு நல்லா
பெருகி நம்ம எல்லோரையும் கொட்டிகிட்டு இருக்கு!

எல்லாம் நம்ம தலை விதி!!

''ஊடு பூந்து அடிச்சுட்டான்'' பாகிஸ்தான் காரன்
தீவிரவாதிகள எங்க கிட்ட ஒப்படைங்கன்னு
பாகிஸ்தான் கிட்ட கெஞ்சுது நம்ம அரசு!


என்னமோ....
''புது பொண்டாட்டிகிட்டமுத்தம் கேட்டு
கெஞ்சுற புருஷன் காரன் மாதிரி ''


போர் தொடுக்கனும்னு ஒரு பேச்சு அடிபடுது,
எதோ ஒரு தீவிர வாத அமைப்பு செய்த செயலுக்காக
அவசரப்பட்டு போர் தொடுக்க கூடாது அப்படின்னும்
ஒரு சாரார்!

நமக்கும் பாகிஸ்தானுக்கும் தீர்க்க படாத, தீர்க்க
பட வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு!

பாகிஸ்தான் ஆக்கிரமிச்சு வைச்சு இருக்கிற காஸ்மீர்
பகுதிய மீட்கணும் அதுக்கு போர் ஒண்ணுதான் வழி!

போர் தொடுக்க இதுபோல சம்பவங்கள
ஏன் பயன்படுத்திக்கொள்ள கூடாது ??

( குமுற வைத்த அமிர்த வர்ஷினி அம்மாவுக்கு நன்றி)

>

அம்மாவையும்,பிள்ளையையும் பிரிக்கலாமா?

சமீபத்தில் சகோதரி ஆகாயநதி ஒரு பதிவு எழுதி
இருந்தார்.அதாவது அவருக்கு பேறுகால விடுமுறை
முடிகிறது.கைகுழந்தையை யாரிடம் விட்டு செல்வது?
அவருக்கு குழந்தையை விட்டு பிரிய மனமில்லை
வேலையும் முக்கியம் என்ன செய்வது?

இது அவருக்கு மட்டும் நேர்கிற தனிப்பட்ட பிரச்சனையாக
எடுத்து கொள்ள முடியாது. வேலைக்கு செல்கிற அனைத்து
பெண்களுக்கும் நேர்கிற பிரச்சனைதான்.

ஒரு குழந்தைக்கு தாயின் அரவணைப்பு குறைந்த பட்சம்
மூன்று வயது வரையாவது தேவைப்படும். இந்த நிலையில்
என்ன செய்வது? இந்த சிக்கலுக்கு அரசு கண்டிப்பாய் பதில்
சொல்லி ஆக வேண்டும்!!

சரி ஒரு கற்பனை! ''மகளிர் மட்டும்'' அப்படிங்குற படத்துல
வருமே? பெண்கள் அதிகம் வேலை பார்க்கிற அந்த இடத்தில்
குழந்தைகளை பார்த்துக்கொள்ள தனி இடம்.

அப்படி இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது பத்துக்கு
மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில்
குழந்தைகளை வைத்து கொள்ள ஒரு இடம்
குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஒரு ஆயா!
எப்படி ? கேக்கவே நல்லா இருக்குல்ல!
தாய்மார்களும் குழந்தைகளை அடிக்கடி பார்த்து
கொள்ளலாம் வேலையும் நன்றாக நடக்கும் ..


சரி அது ஒரு கற்பனைதான் அந்த கற்பனையை
உண்மையாக்க முடியுமா?
உண்மையாக்க என்ன செய்யலாம்?அந்த கற்பனை
உண்மையாக அரசு சட்டம் பிறப்பிக்கவேண்டும்!
அரசு அலுவலகத்திலோ அல்லது தனியார்
நிறுவனங்களிலோ?பத்துக்கு மேற்பட்ட பெண்கள்
பணி புரிந்தால் அங்கே குழந்தை வைத்துக்கொள்ள
தனி இடமும் ஒரு ஆயாவும் இருக்க வேண்டும் என!


இது நடக்குமா? அரசினை இயக்குபவர்கள் யார் ?
அரசியல்வாதிகள், இன்னும் சொல்ல போனால்
கட்சிகாரர்கள் அவர்களுக்கு என்ன தேவை!
ஓட்டு!........................ஓட்டு!........................ஓட்டு!

இந்த ஓட்டு மட்டும்தான் அவர்கள் தேவை!
நமது கையில் இருக்கும் பெரிய ஆயுதமும் ஓட்டுதான்!

ஏழு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தமிழ்
நாட்டில் எத்தனை ஓட்டுக்கள் ஆட்சியை நிர்ணயம் செய்கிறது
தெரியுமா ?

வெறும் முப்பது லட்சம் ஓட்டுகள்தான்

கடந்த தேர்தலில் தி.மு.க பெற்ற மொத்த ஓட்டுக்கள்
கூட்டணி எல்லாம் சேர்த்து ஒரு கோடியே முப்பது லட்சம்
(கிட்டதட்ட)
அதிமுக பெற்ற ஓட்டுக்கள் ஒரு கோடி
(கிட்டதட்ட)

வெறும் முப்பது லட்சம் ஓட்டுக்கள் மட்டும்தான் இந்த
ஆட்சியை நிறுவி இருக்கிறது.

மேலும் சில கட்சிகளின் வாக்கு பலம்...

வேகமாக வளர்ந்து வருவதாக கருதப்படும் விஜய காந்தின்
தேமுதிக தனியே நின்று பெற்ற ஓட்டுக்கள் இருபத்தி எட்டு
லட்சம்.

மதிமுக இருநூற்று பதிமூன்று தனியே நின்று மொத்தம்
பெற்ற ஓட்டுக்கள் சுமார் பதி மூன்று லட்சம்.

பாட்டாளி மக்கள் கட்சி யும் கிட்டத்தட்ட இந்த நிலைதான்
சற்று கூடலாம்.

அதுபோல காங்கிரஸ் எனக்கு தெரிந்த வரை தனியே நின்றது
இல்லை.சமீப காலம் வரை. அப்படி தனியே நின்றாலும்
பதினைந்து லட்சம் ஓட்டுக்கள் பெற்றால் பெரிய விஷயம்

இதைவிட சொற்பஅளவில் ஓட்டு எண்ணிக்கையை வைத்து
கொண்டு அரசியல் நடத்துகின்றன கட்சிகள்.

சரி இதெல்லாம் எதற்கு?
தமிழ் நாட்டில் அரசு வேலையில் இருப்பவர்கள் சங்கம்
அமைத்துள்ளனர். அவர்கள் ஓட்டு முழு அளவில்
ஒரு கட்சிக்கு தொடர்ந்து கிடைக்கிறது.
சரி தனியார் துறையில் தமிழகத்தில் எத்தனை
பேர் இருப்பார்கள்? எனக்கு சரியாக கணிக்க
தெரியவில்லை!குறைந்த பட்சம் ஒரு ஐந்து லட்சம் பேர்
இருப்பார்களா ?அப்படி இருந்தாலே போதும்
ஒவ்வொருவரும் நான்கு வாக்குகளுக்கு சமம்.
அவர்கள் குடும்பம் எல்லாம் சேர்த்து.

இந்த தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு தனி
அமைப்பு ஏற்பட வேண்டும்! இப்படி அமைப்பை ஏற்படுத்தி
கொடி பிடித்து போராட்டம் நடத்த வேண்டியது இல்லை

இவர்களிடம் இருபத்து லட்சம் ஓட்டு இருக்கிறது இவர்கள்
வைக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் அவர்கள்
ஓட்டு அப்படியே அவர்களுக்கு தான் என்ற நிலையை உருவாக்க
வேண்டும். அப்படி நிலை ஏற்ப்பட்டால் போதும்!

அரசியல்வாதிகள் சரணாகதி அடைந்து விடுவார்கள்.

அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளலாம்.

இந்த கோரிக்கைகளை அரசு வேலையில் இருப்பவர்கள்
முன்னின்று வைத்தால் மிக நன்றாக இருக்கும் !

சரி இது வேலை செய்பவர்களை நிலையில் இருந்து யோசித்தது!

இப்போ நான் முதலமைச்சர் கனவில் இருக்கும் ஒரு கட்சி
தலைவர், சுமார் இருபது லட்சம் ஓட்டுகளை வைத்து இருக்கும்
ஒரு அமைப்பு! சில கோரிக்கைகளை வைக்கிறார்கள்,
அதாவது பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்யும்
இடத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஆயாவும்
இடமும் வேண்டும் என்ற கோரிக்கை உட்பட,

இந்த கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு என்ன வலிக்க போகிறது
ஓட்டுக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கும் எனக்கு
பிள்ளையையும், தாயையும் ஒன்றாக இருக்க செய்யும்
இந்த கோரிக்கையை சந்தோசமாய் நிறைவேற்ற போகிறேன் .

..................................
>

எனக்கு புடிச்ச கோயம்புத்தூர்

வருங்கால முதல்வர்ல நம்ம நண்பர் ''குடுகுடுப்பை''
தஞ்சை பற்றி பதிவு போட அழைப்பு விடுத்திருந்தார்.
இப்போ அங்க கொங்கு நாட்டு ''மகேசும்''நெல்லை
''நசரேயனும்'' கலக்கிக்கிட்டு இருக்காங்க அதன் பிறகு
என் தஞ்சை பதிவ போடலாம்னு இருக்கேன்.


நம்ம ஊரபத்தி நாமளே எழுதுறது சிறப்புதான்!
ஆனா எங்க தஞ்சைய பத்தி வேற யாரவது புகழ்ந்து
பேசினா ரொம்ப சந்தோசமா இருக்கும்.
நான் ''கோவைல'' மூணு வருஷம் இருந்து இருக்கேன்.
அதுனால கோவை பத்தி ஒரு பதிவு போடனும்னு
கொஞ்ச நாளா ஒரு ஆசை அதான் இந்த பதிவு!

நான் பிறந்தது ''அந்தமான்ல'' அங்க,எழு ,எட்டு
வயசுவரை இருந்து இருப்பேன் அதன் பிறகு
எங்க ஊருக்கு வந்தாச்சு.படிச்சது ,வளர்ந்தது
எல்லாம் எங்க ஊருதான்.இப்போ சென்னைல
குடும்பத்தோடசெட்டில் ஆயாச்சு.பதிமூணு வருஷம் ஆச்சு!
இடைல பன்னண்டாவது முடிச்சுட்டு நகை தொழில்
கத்துக்க கோயம்புத்தூர் போய்இருந்தேன்,அங்கேயே
ஒரு மூணு வருஷம் இருந்தேன்.எல்லோருக்கும் தன்
சொந்த ஊரு சொர்க்கம்தான் எனக்கும் அப்படித்தான்
ஆனா என் சொந்த ஊருக்கு நிகரா நான் நேசிச்ச ஊரு
கோயம்புத்தூரு.இப்போகூட பாருங்க குடும்பம்,
புள்ள குட்டியோட தான் சென்னைல இருக்கேன் ஆனா?
கோவை மேல உள்ள அந்த பாசமும், நேசமும்
சென்னை மேல துளியும் வரல? அப்படி என்னதான்
இருக்கு கோயம்புத்தூர்ல? சொல்லுறேன் கேளுங்க!


என் அப்பாதான் கோவைக்கு அழைச்சிகிட்டு போனார்
என் அப்பா பம்பாய் ல இருந்ததால அங்க அவருக்கு
தெரிஞ்சவங்ககோவைல இருந்தாங்க அவங்க
கிட்டதான் என்னை அழைச்சுகிட்டுபோனார்.

கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் ல
எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் க்கு போறோம்.
மழை வர்ற மாதிரி குளு.குளுன்னு இருக்கு, நானும்
அப்பாவும் அப்போதான் முதல் முறை அங்க போறது!
நாங்க போக வேண்டியது ''பெரிய கடை வீதி''கைல
விலாசம் இருக்கு.எந்த பஸ்ல போகனும்னு விசாரிக்கணும்.
எனக்கு அறிமுகம் இல்லாத நபர்கிட்ட விலாசம் விசாரிக்க
சின்ன எரிச்சல்!ஏன் அப்படின்னா ?அதுக்கு முன்னாடி சென்னைக்கு
அடிக்கடி போவேன் அப்போ யார்கிட்டயாவது விலாசம்
விசாரிச்சா என்னை பெரிய இவங்க மாதிரி அலட்சியமா
பதில் சொல்லுவாங்க செம கடுப்பா இருக்கும் .

இப்போ அங்க என் அப்பாதான் கேக்குறார் அதுக்கு ஒருத்தர்
அங்க போய் நில்லுங்க, உக்கடம் போற பஸ் வரும்
அதுல போங்க அப்படின்னு.விலாசம் விசாரிக்கும் போது
ஒருத்தர், இவ்ளோ அக்கறையா பதில் சொல்லுறாரே
அப்படின்னு எனக்கு சின்ன ஆச்சர்யம்!

பஸ்ல ஏறி உக்காந்தாச்சு கண்டக்டர் கிட்ட அப்பா
சொல்லுறார்நாங்க ஊருக்கு புதுசு பெரிய கடை வீதி
ஸ்டாப்ல எறக்கி விடுங்கஅப்படின்னு.
(எனக்கு கோவம் ஊருக்கு புதுசுன்னா யாராவது
மதிப்பாங்களா இதெல்லாம் போய் அவர் கிட்ட சொல்லிக்கிட்டு)
அதுக்கு அவர் சொல்லுறார் ...அப்படிங்களா!சரிங்க!
ஸ்டாப்வந்ததும் சொல்லுறேன் எறங்கிகுங்க
அப்படிங்குறார், அட ! எனக்கு இன்னும் ஆச்சர்யம்!
இதுக்கெல்லாம் மேலஎங்க முன்னாடி இருந்த ஒருத்தர்
ஏனுங்க!பெரிய கடைவீதியா போறீங்க?
நானும் அங்கதாங்க போறேன் வாங்க!
நானே இடம் காட்டுறேன் அப்படின்னு! அட என்ன
மக்கள் இவங்க? வந்து எறங்கி சில நிமிசத்துலே
புது ஊர் அப்படிங்கிற ஒரு பயம் போய் ஒரு உற்சாகம்
வந்துடுச்சி.

இப்படித்தான் என் கோவை வாழ்க்கை ஆரம்பம்,
முதல்ல ஏறங்கினப்போ மழை வர்ற மாதிரி இருந்துசின்னு
சொன்னேன்ல! இல்லங்க, அங்க எப்போதும் அப்படிதான்
இருக்கும் சும்மா குளு குளுன்னு !


கோவை தண்ணிய பத்தி சொல்ல வேண்டியது இல்ல
சிறுவாணி தண்ணின்னா உலக அளவில் புகழ் பெற்றது
முக்கியமா நான் சொல்ல விரும்புவது, அங்குள்ள மக்கள்!
ஏனுங்க! ஏனுங்க! அப்படின்னு அவங்க கூப்பிடுற
அந்த கொங்கு தமிழ கேட்டுகிட்டே இருக்கலாம்.
புதுசா போறவங்களுக்கு என்ன மரியாதை!

அருமையான ரசனை மிகுந்த மக்கள்!
வயசுல பெரியவங்க கூட சின்னவங்கள
வாங்க,போங்கன்னு அழைக்கிற அந்த அழகு!
நெறைய கத்துகிட்டேன் நான் அங்க இப்போகூட
நான் என்னை விட சின்னவங்கள கூட வாங்க,
போங்கன்னுதான் கூப்பிடுறேன்.

இன்னும் என்ன சொல்லுறதுன்னு யோசிக்கிறேன்!
எனக்கு தொழிலையும்,நல்ல பண்பையும் கத்து
கொடுத்த தங்க மான ஊரு அன்பாலயும்,பாசத்தாலயும்
நனைக்கிற மக்கள்.அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்.

நான் அங்க இருக்கும் போது வடகோவை மேம்பாலம்
கட்டிக்கிட்டு இருந்தாங்க அத கட்டி முடிச்சோன பார்க்க
ஆசைஇன்னும் வாய்ப்பு கிடைக்கல.

அப்புறம் முக்கியமான விஷயம்!

எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தப்போ
வீட்டுல சொல்லி கோவை பக்கம் பார்க்க சொன்னேன்
எதுக்கு அவ்ளோ தூரம்னு சொல்லி வேணாம்னு
சொல்லிட்டாங்கரொம்ப கம்பல் பண்ணினா
நான் அங்க யாரையும்லவ் பண்ணுறதாநெனைக்க
போறாங்கன்னு விட்டுட்டேன்.அப்படி அங்க மட்டும்
பொண்ணு அமைஞ்சு இருந்தா ''வத்தலோ'' ''தொத்தலோ''
யாரா இருந்தாலும் சரின்னுசொல்லி இருப்பேன் .

கோவைல இருந்தப்போ சாப்பாட்டுக்கு கூட
காசில்லாமநெறைய நாள் இருந்துருக்கேன்
ஆனாலும் அங்கவாழ்ந்ததுஒரு ''பொற்காலம் '' தான்
>

தெய்வம், இறைவன்

சபரி மலைக்கு மாலை போட்டு இருக்குறதால
தெய்வம்,இறைவன் இதெல்லாம் பத்தி பெரியவங்க
சொன்னதுல எனக்கு புடிச்ச சிலத சொல்லுறேன்
கேளுங்க..........


பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலன் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

(கவிஞர் வாலியின் பாபு திரைப்பட வரிகள்)

எவன் ஒருவன் தன்னை பற்றி கவலை படாமல்
அனுதினமும் இறைவனையே நினைத்துக்கொண்டு
இறைபணி செய்கிறானோ?அவனைவிட எவன்
ஒருவன் இறைவனை பற்றி கவலை கொள்ளாமல்
தன் கடமையை சரிவர செய்கிறானோ அவனையே
இறைவன் பெரிதும் விரும்புகிறார்.
(சுவாமி விவேகானந்தர்)எனக்கு புடிச்ச குறள் ஒன்னு

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலிதரும்

>

மரணத்திற்கு பின்

வெளியில் செல்லும்போது சவ ஊர்வலத்தை கண்டால்
நினைத்துக்கொள்வேன், இந்த பயணம் நமக்கு ஒருநாள்
நிச்சயம். அதோடு, அந்த இறந்தவரின் தோற்றத்தை பார்ப்பேன்.
வயதானவராக இருந்தால் ஆறுதல் கொள்வேன்.வயது
குறைந்தவராக இருந்தால் அந்த ஊர்வலத்தில் யாராவது
அழுது கொண்டு வந்தால்,அவர் துக்கம் நீங்கி விரைவில்
இயல்பு நிலைக்கு திரும்ப மனதிற்குள் வேண்டிக்கொள்வேன்.


சரி!என் மரணம் எப்படி இருக்க வேண்டும்? (சும்மா ஒரு கற்பனை)

பிள்ளைகள்,பேரன்,பேத்திகள் சுற்றி நிற்க!போதும் இந்த
வாழ்க்கை என்று!ஒரு நிறைவுடனும்,விருப்பத்துடனும்
வெளியேற வேண்டும்.

ஓகே! செத்துப்போன பிறகு ஆன்மாவாக அலைவாங்கலாமே?
கொஞ்சம், ஆன்மாவாயிட்டா எப்படி இருப்போம் அப்படின்னு
ஆன்மாவா மாறி யோசிச்சு பார்ப்போமா? (ரொம்ப யோசிக்கிறேனோ)
ஆன்மாவா மாறியாச்சு இப்போ என்ன நினைக்கிறேன்? நம்ம
சந்ததியினரை நாம் கூடவே இருந்து கெடுதல் ஏதும் வராம
பார்த்துக்கணும்!

சில ஜோசிய காரங்க சொல்லுறாங்களே உங்க முன்னோர்களுக்கு
நீங்க செய்ய வேண்டிய கடமைகள செய்யல அதான் உங்க
குடும்பம் கஷ்டபடுது அப்படின்னு உண்மையா?

சரி நாம ஆன்மாவா இருக்கும்போது நம்ம சந்ததி
நமக்கு செய்ய வேண்டிய கடமைகள செய்யாட்டி
அவங்கள கஷ்டபடுத்துவோமோ?
ச்சே! ச்சே! அப்படியெல்லாம் பண்ண கூடாது
வேணும்னா சக ஆன்மா யாராவது இருந்தா,
பாருங்க சார்! நான் எப்போதும் என் பிள்ளைங்க
பேரன்,பேத்திகள நெனைச்சுகிட்டே இருக்கேன்
ஆனா?அவங்க யாரும் என்ன கண்டுக்கல
அப்படின்னு சொல்லி வருத்த பட்டுக்கலாம்.

சரி! நம்ம சந்ததி நம்மள மறக்காம செய்ய வேண்டிய
கடமைகள தொடர்ந்து செய்ஞ்சுகிட்டே இருந்தா?

அப்போ கண்டிப்பா ஒரு ''ஆக்டிவான'' ஆன்மாவாக
இருப்போம்னு தோணுது! சரி போதும் இதுக்கு மேல
யோசிக்க பயமா இருக்கு!

சரி! இயல்பு நிலைக்கு திரும்பிடலாம்!
சரி! இதுக்கெல்லாம் நமக்குள்ள 'பகுத்தறிவு' அப்படின்னு
இருக்குல்ல (அப்படியா) அதுகிட்ட கேட்டு பார்க்கலாம்!

அதுகிட்ட கேட்டா?

'' டவர் கிடைக்காத மொபைல் போன் போல
த ஸப்ஸ்கிரைபர் நாட் ரீச்சபிள்'' அப்படிங்குது!

என்ன பண்ணுறது? பகுத்தறிவால் விளக்க முடியாத
ஆன்மீக புதிர்கள் எவ்வளவோ இருக்கு இதும் அப்படித்தான்
அப்படின்னு நெனைச்சுக்க வேண்டியதுதான்!

இப்படி யோசிச்சா?
ஒருவேள நம்ம முன்னோர்கள்ஆன்மாவா இருந்து நம்மள
கவனிச்சுகிட்டு இருப்பாங்களோ ?

நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?

மொதல்ல அத செய்யலாம்!...............
....................
>