சில பாடல்களும்,சில நினைவுகளும்

நாம் சில பழைய,சிறு வயதில் கேட்ட பாடல்களை தற்போது கேட்கும் போது அந்த காலத்திற்கே சென்று விடுவது உண்டு.அப்படி பழைய நினைவுகளுக்கு என்னை இட்டுசெல்லும் பல பாடல்கள் உண்டு அவற்றில் சில.......

சமீபத்தில் ஊருக்கு சென்ற போது தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் போது பஸ்சில் கேட்ட பாடல்!

''உன்னநம்பி நெத்தியிலே பொட்டு வைச்சேன் மத்தியிலே -ராசா பொட்டு வைச்சேன் மத்தியிலே... நெத்தியிலே......பொட்டு வைச்ச காரணத்த புரிஞ்சுக்க ராசா .....''


இந்த பாட்ட கேக்கும்போது எனக்கு அந்தமான் தான் நினைவுக்கு வரும்! நான் பிறந்தது நாலாவது வரை படிச்சது எல்லாம் அந்தமான்லதான். அந்தமான் போர்ட் ப்ளேயர்ல ஒரு குருத்துவாரா (சீக்கியர் கோயில்) இருக்கு! அதன் எதிர்ல தான் எங்க வீடு! கொஞ்ச தூரத்துல அபர்டீன் பஜார் அங்க என் அப்பா ஒரு நகை கடை வைச்சு இருந்தார்!ஒரு தடவ ஒரு சாயங்கால நேரம் எங்க வீட்டுல இருந்து எங்க கடைக்கு போறேன் அப்போரொம்ப தூரத்துல இந்த பாட்டு கேட்டது! அது அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு போல!
இந்த பாட்ட எப்போ கேட்டாலும் அந்த சாயங்கால நேரமும் எங்க கடைக்கு போனதும் கண்ணுக்குள்ள வந்துடும்.

அந்தமான் அப்படின்னதும் மேலும் சில நினைவுகள்!

அங்க அபர்டீன் ஸ்கூல் ல நாலாவது வரைக்கும் தான் படிச்சேன் அதுக்கு மேல அங்க ஏன் படிக்கல? ம்ம்ம்..... எல்லாம் அரசியல்தான்!


என் அப்பா அங்க திமுக வில இருந்தார். தீவிர அரசியல் வாதி! அதோட அவர் ஒரு மேடை பேச்சாளர்!

என் அப்பா ஒரு தீவிர எம்ஜியார் அபிமானி!


எம்ஜியார் திமுகவில இருந்து விலகி அதிமுக ஆரம்பிச்சப்போ என் அப்பா அந்தமான்ல தன் ஆதரவாளர்களுடன் திமுகவில இருந்து வெளியேறி அங்க அதிமுகவ துவக்கியவர்! மேலும் அந்தமான் அதிமுக அமைப்பாளராகவும் தீவிரமாக பணியாற்றியவர்!அதன் விளைவு ! கடையை சரியாக கவனிக்காமல் தொழில் நொடித்து கடனாளியாகிகடையை விற்றுவிட்டு ! நான்கு பிள்ளைகளுடன் நிராயுத பாணியாக சொந்த ஊரு திரும்பிய சிறப்புமிகு சரித்திரத்துக்கு சொந்தகாரர்! அதனால தான் அங்க நான் அஞ்சாவது படிக்கல! எங்க மதுக்கூர் லதான் அஞ்சாவது முதல் பன்னெண்டாவது வரை படிச்சேன்!

இப்போ கூட எனக்கு ஒரு ஆசை இருக்கு பிளைட்ல அந்தமான் போகணும் பெரிய ஸ்டார் ஹோட்டல் ல தங்கி அந்தமான்ல நான் டவுசர் மட்டும் போட்டுக்கிட்டு ஓடி விளையாடின இடங்கள பார்க்கணும்! அங்க என்னை ஒருவாட்டி நாய் கடிச்சுடிச்சிஅந்த தழும்பு, அங்க ஏற்பட்ட மேலும் சில தழும்புகள் என் கால்ல இருக்கு இதையெல்லாம் அங்கபோய் பார்க்கணும்! அப்போதான் என் ஆத்மா அமைதியாகும்! ;;))

----------------------------------------------------------------------------------------------

ஊருபக்கம் திருவிழா ன்னாலே சில எல்.ஆர் ஈஸ்வரி பாடல்கள ஸ்பீக்கர்ல புல் சவுண்டுல அலற விடுவாங்க! மேலும் சில பாட்டுக்கள் உண்டு கண்டிப்பா அந்த பாட்டுகள் திருவிழாவில அலறும்!!

அப்படி ஒருபாட்டு ! கன்னி பருவத்திலே படத்துல வந்தது!

நடைய மாத்து! ஒன் நடைய மாத்து! அக்கா நீ என்ன பாத்து ஆடுருறியே கூத்து அசையுது ஒன்ன போல நாத்து .... அசையுது ஒன்ன போல நாத்து நடைய மாத்து!

நடைய மாத்து நீ .......நடைய மாத்து அத்தான் நீ என்ன பாத்து ஆடுறியே கூத்து அசையுது ஒன்ன போல காத்து அசையுது ஒன்ன போல காத்து
நடைய மாத்து !


பொள்ளாச்சி ரோட்டுமேல பொழுது சாயும் நேரத்துல புல்லாக்கும் பொன் தோடு மா போற புள்ளநீ.... தொண வேணுமா போடு தினாக்கு!!

பொல்லாத பொண்ணு என் பொல்லாப்ப வாங்கவரும் கில்லாடி எவனுமில்ல என் மச்சானே! இல்லாட்டி கொறவே இல்ல போடு தின்னாக்கு

தினாக்கு! தினாக்கு! தினாக்கு! போடு!! தினாக்கு! தினாக்கு! தினாக்கு!

ஏய்! நடைய மாத்து!!!

குத்து பாட்டுன்னா.. குத்து பாட்டு ... அப்படி ஒரு குத்து பாட்டு இந்த பாட்டு ...

இந்த பாட்டு வந்த புதுசுல எல்லா திருவிழா விலையும் செம குத்து குத்தும்
இந்த பாட்டு ...


இந்த பாட்ட கேக்கும் போது எனக்கு எங்க ஊரு பெரமையா கோயில் திரு விழாதான் வந்து நிக்குது!

கரகாட்டம் ,குறவன் குறத்தி டான்ஸ் (யப்பா) சர்பத் கடை, அப்புறம் நமக்கு வேண்டப்பட்ட புள்ளைங்க எல்லாம் என்ன புது டிரஸ் போட்டு இருக்குன்னு தேடுறது அந்த கற்பூர வாசனை எல்லாம் மனசுல ஜில்லுன்னு வந்தது நிக்குது!

அப்புறம் அதுல முக்கியமா சிதறு தேங்கா பொறுக்குறது ! ஒருவாட்டி நெறைய செதறு தேங்கா பொறுக்கி வைச்சு இருந்தேன் நமக்கு வேண்ட பட்ட புள்ள ஒன்னு பார்த்துடிச்சி ஆஹா! பொறுக்குறது செதறு தேங்காயா இருந்தாலும் கவுரதய உட முடியுமா? அந்த புள்ள என் கிட்ட க்க வருது நான் அப்படியே பொறுக்குன தேங்காய பின்னாடி மறைச்சுகிட்டு அந்தாண்ட போயிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா என் கூட தேங்கா பொறுக்குன இன்னொரு பையன் கிட்ட தேங்கா வாங்கி தின்னுகிட்டு நிக்குது அந்த புள்ள. ச்சே மிஸ் பண்ணிட்டேன்.

-------------------------------------------------------------------------------------------------

ஒரு புது படம் ரிலீஸ் ஆனா எங்க ஊருக்கு வர குறைஞ்சது மூனு நாலு மாசம் ஆகும் நான் ப்தினுன்னு, பன்னெண்டாவது படிக்கிறப்போ புது படம் பார்க்க பட்டுகோட்டைக்கு பசங்களோட சேந்து போவேன் நைட் ஷோ போவோம் எல்லோரும் ஷேர் பண்ணி கார் எடுத்துகிட்டு போவோம்! ஒருவாட்டி அப்படி போயிட்டு திரும்புறோம் பசங்க எல்லாம் உச்சா போக வண்டிய நிறுத்த சொல்லுறாங்க! நல்ல மை இருட்டு ! கடும் நிசப்தம் அப்போ கார்ல டிரைவர் ஒரு பாட்டு போட்டார் பாருங்க! கனத்த இசை! தேவலோக தேவதை போல எஸ் . ஜானகி பாடின பாடல்

அரண்மனை கிளி படத்துல ...........

வான்மதியே....... ........வான்மதியே ......தூது செல்லு ... வான்மதியே
மாளிகை பொன்மாடம்... மல்லிகை பூ மஞ்சம்...யாவுமே இநேரம் ....
ஏற்குமோ என் நெஞ்சம்....காதலன் வாசல் வரவேண்டும் ..நீயும் என் சேதி சொல்ல வேண்டும் .................

அந்த பாட்டு! அந்த இடம்! அந்த கார் ஸ்டீரியோ! எல்லாம் மனசுல!
அப்போ நினைச்சுகிட்டேன்! சொந்தமா ஒரு கார் வாங்கனும்! இதே பாட்டை
இதேபோல நேரத்துல இந்த இடத்துல காரை நிப்பாட்டி கேக்கணும்!

>

சுகமாய் ஒரு பிரசவம்மீள் பதிவு


இரவு
எட்டு மணி இருக்கும் வலி லேசா ஆரம்பிச்சது . என் அம்மாவும், மாமியாரும் இருக்காங்க, அக்கம்பக்கத்துல இருக்குற சிலரும் இருக்காங்க .

வலி அதிகமில்ல காலைல ஆஸ்பத்திரில சேத்துக்கலாம்னு ரெண்டுபேரும் சொல்லுறாங்க .நான் வந்து என்ன சொன்னேன்னா, நடுராத்திரில வலி அதிகமானா என்ன பண்ணுறது அப்போ போய் ஆட்டோ புடிக்க முடியாது இப்போவே போய் ஆட்டோ புடிச்சுட்டு வர்றேன்னு சொன்னேன் . (ஆமாங்க வலி என் மனைவிக்கு) இல்ல பார்த்துக்கலாம் இருடான்னு எங்கம்மா சொல்ல !

இப்போ போனா ஆஸ்பத்திரில சும்மா தான் உக்கார்ந்து இருக்கணும்னு என் மாமியார் சுவத்து பக்கம் பார்த்து சொல்ல (அவங்க என்ன நேரா பார்த்து பேச மாட்டங்க எதிர்ல நிக்கக்கூட மாட்டாங்க )

நான் கேக்காம புடிவாதமா ஆட்டோ புடிச்சுகிட்டு வந்துட்டேன் !

எங்கம்மா வந்து, ஏன்டா எங்களுக்கு தெரியாது ? என்னமோ ஏழு புள்ள பெத்தவனபோல அவசரமா ஆட்டோ புடிச்சுட்டு வர்றே ?

அப்படின்னு சொல்லிட்டு, நாங்க சொன்னா கேக்கவாபோறே ? ன்னு சொல்லி துணி மணியெல்லாம் எடுத்துகிட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டாங்க .

ஆஸ்பத்திரில சேத்தாச்சு !வலி கொஞ்ச கொஞ்சமா அதிகமாகுது !

மணி பதினொன்னு ஆக போகுது வலி பொறுக்காம மனைவி போடுற சத்தத்த கேட்டு எனக்கு பயம் வந்துடுச்சி என் அம்மாவும்,மாமியாரும் என் மனைவி சத்தத்த பத்தி பெருசா எடுத்துக்காம சாதாரணமா இருக்கவே,சரி இந்த சத்தமெல்லாம் சகஜம் போல ன்னு நான் கொஞ்சம் தைரியமா இருந்துட்டேன் .

ஆஸ்பிட்டல்ல சிஸ்டர் வந்து, நைட் இங்க யாராவது ரெண்டுபேர்தான் தங்கலாம் அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க .

எங்கம்மா வேற வழி இல்லாம கிளம்பிட்டாங்க ! மணி பன்னண்டுக்கு மேல ஆகுது . ஆஸ்பத்திரில நாலஞ்சு சிஸ்டர் அப்புறம்,ரெண்டு பேர் மட்டும் இருக்காங்க ! நான் ஒரு சோபால உக்கார்ந்து இருக்கேன் !

மனைவி சத்தம் போட போட பதட்டம் தாங்கல, என்னான்னு போய் பாருங்க ன்னு மாமியார்கிட்ட சொல்ல, அப்போகூட அவங்க வெக்கபட்டுகிட்டு அந்தாண்ட போறாங்க என்னைய உள்ள விட மாட்டுறாங்கஅப்படின்னு கீழ குனிஞ்சுகிட்டு சொல்லுறாங்க !

அங்க இருக்குற சிஸ்டர் எல்லாம் சகஜமா அரட்டை அடிச்சுகிட்டு இருக்கவே, என்னங்க சிஸ்டர் சத்தம் போடுறாங்க போய் பாருங்க ன்னு நான் சொன்னதும்

இதோ பாருங்க சார்!

இப்போ டாக்டர் வருவாங்க ! ரெண்டு,மூணு மணிபோல தான் டெலிவரி ஆகும் . டென்சன் ஆகாம போய் உக்காருங்க . அப்படின்னு சொல்லுறாங்க .
ஒரு மணி இருக்கும், என் மனைவி போடுற சத்தம் அவ குரல் போலவே இல்ல ! என்னால உக்கார முடியல ! ஒன்ற மணி போல என் மாமியார் கொஞ்சம் தள்ளி ஓரமா நின்னுகிட்டு இருந்தாங்க ! என்னான்னு பார்த்தா ! தேம்பி !தேம்பி அழுதுகிட்டு இருக்காங்க ! அய்யய்யோ என்னமோ ஆச்சு போலன்னு நான் அலறி அடிச்சுகிட்டு என்ன ஆச்சு சொல்லுங்கன்னு கத்துறேன், அப்போ ஒரு சிஸ்டர் வந்து என்னங்க அழுதுகிட்டு இருக்கீங்க டாக்டர் வந்துட்டாங்க சீக்கிரம் போய் துணியெல்லாம் ரெடி பண்ணுங்கன்னு சொல்ல , ஒடனே போய் ஒரு வேட்டி துணிய எடுத்துகிட்டு வர்றாங்க !

ஒரு சத்தமும் கேக்கல கதவ சாத்திக்கிட்டங்க அன்னிக்குத்தான் தெரிஞ்சது எனக்கு நான் எவ்வளவு பலவீனம் ஆனவன்னு !
திக் திக்ன்னு இருக்கு ! கதவு பக்கத்துல மாமியார் நிக்குறாங்க, நான் கொஞ்சம் தள்ளி நிக்குறேன் ! ஒரு சிஸ்டர் வெளில வர ! என்னாச்சுன்னு கேட்டா ? கொஞ்சநேரம் ஆகும் வழில நிக்காதிங்க ஓரமா நில்லுங்கன்னு வெரட்டுது இது நடந்தது அஞ்சு வருஷம் முன்னாடி அப்போ என்கிட்டே செல்போனும் இல்ல ஒரு துணையும் இல்லாம ! என்ன செய்றதுன்னு தெரியாம !நான் நின்ன நெலமை எனக்குத்தான் தெரியும் .
கொஞ்ச நேரத்துல ஒரு சிஸ்டர் வந்து என் மனைவி பேர சொல்லி அவங்க ஹஸ்பெண்ட் யாருங்க ?

நாந்தான்னு சொல்ல, டாக்டர் உங்கள இங்கேயே இருக்க சொன்னாங்க எங்கயும் போயிடாதிங்க ன்னு சொல்லிட்டு உள்ள போய்ட்டாங்க !

அவ்வளவுதான், எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் போய்டுச்சு !

லேசா நடுக்கம் வந்துடுச்சு எனக்கு ! கைய கட்டிக்கிட்டு அப்படியே சுவத்துல சாஞ்சி நின்னுகிட்டேன் !

மனசுக்குள்ள முதன் முதலா சாமிய வேண்டுனது அப்போதான் ! நாலர மணி வரை அப்படியே நிக்குறேன், அஞ்சு மணிக்கு என் அம்மா வந்துட்டாங்க !

சும்மா சும்மா என் அம்மாவ பார்த்து எரிஞ்சு விழுற எனக்கு,அப்போ என் அம்மாவ பார்த்து எனக்கு வந்த ஒரு தைரியம் சொல்லி விளக்க முடியாது !

என்ன ஆச்சு ன்னு அம்மா கேக்க !

நான் வாயத்திறந்து ஏதும் சொல்லும் போது என் குரல் உடைந்து விடும்னு
பயத்துல ஒன்னும் இல்ல ன்னு தலைய மட்டும் அசைக்கிறேன் .

என் அம்மா வந்து மாமியார்கிட்ட போய் என்ன ஆச்சுன்னு கேட்டு அவங்க கிட்ட போய் பேசிகிட்டு இருக்காங்க !


சரியா மணி அஞ்சு நாப்பத்தி ஒன்னு !

எல்லோரும் சந்தோசமா கேளுங்க !

'' ஒரு சிஸ்டர் வெளிய வந்து பெண் குழந்தை பிறந்துருக்கு ''

அம்மாவும் பொண்ணும் நல்லா இருக்காங்க ''


அப்பாடா !!

ரெண்டுஅப்போ எனக்கு வந்த சந்தோசம்,நிம்மதி, இதைஎல்லாம் என்னால சொல்லவே முடியாது .

கொஞ்ச நேரத்துல என் பொண்ணை ஒரு சிஸ்டர் வெளில கொண்டுவந்து காட்டுறாங்க .


''என் குழந்தைய பார்த்து ரெக்கைகட்டி பறக்காத குறைதான் ''


இப்போ எனக்கு என் மனைவிய உடனே பார்த்தாகனும் !


உள்ள போகலாமா ன்னு கேட்டா வெயிட் பண்ண சொல்லுறாங்க !

கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள போய் மனைவிய பார்க்குறேன் !

''சினிமால வர்றதுபோல நெகிழ்ச்சியோட கண் கலங்கல ''

'' குழந்தைய பார்த்திங்களான்னு அவ கேக்கல ''

லேசா சின்ன வெக்கத்தோட ஒரு சிரிப்பு சிரிச்சா அவ்ளோதான்


அது போதும் எனக்கு !!!

>

இறைவனின் குழந்தைகள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது.நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு வேளைக்கான மதிய உணவு செய்து கொண்டு சென்றோம். சென்னை ஆவடியை அடுத்த வீரா புரம் என்ற இடத்திற்கு அருகில் இருந்தது அந்த இல்லம்.அங்கு எட்டு மாத குழந்தை முதல் பத்து,பன்னிரண்டு வயதுடைய குழந்தைகள் சுமார் நாற்பது க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.


அங்கு சென்ற போது எனக்கு தோன்றிய உணர்வு இதுதான்! அந்த அந்த குழந்தைகள் மிக சகஜமாக சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர்.அவர்கள் பாவ பட்டவர்களாகவோ? பரிதாபத்திற்கு உரியவர்களாகவோ? எனக்கு இம்மியளவும் தோன்றவில்லை! ஏன் என்றால்? நான் என்னை பல சமயங்களில் ஒரு அனாதையாக உணர்ந்து இருக்கின்றேன். எந்த ஒரு மனிதனும் எதாவது ஒரு சமயத்தில் நிச்சயமாக தன்னை ஒரு அனாதையாக விடப்பட்டு விட்டதாக கருதுவான் என்பது என் நம்பிக்கை. எவ்வளவுதான் சொந்த பந்தங்கள் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு வறுமை காரணமாகவோ,கடன் தொல்லை காரணமாகவோ,தொழில்
அமையாமல் இருப்பதாலோ ஏதேனும் ஒரு சமயம் அவன் தன்னை எல்லோரும் நட்டாற்றில் தவிக்க விட்டதுபோல ஒரு அனாதையாக கண்டிப்பாய் உணர்வான்.

சும்மாவா பாடினார் கவியரசர்!

அண்ணன் என்னடா! தம்பி என்னடா!
அவசரமான உலகத்திலே!! என்று ?

இந்த இல்லத்தில் இருப்பவர்களை பார்த்து தோன்றியது இதுதான்!

நம்மைபோல்தான் இவர்களும்!
இவர்களைபோல்தான் நாமும்!


மேலும், இதுபோன்ற இல்லங்களில் இருப்பவர்களுக்கு நல்ல கல்வியினை வழங்குகிறார்கள்.அதோடு நம் மக்கள் இந்த ல்லங்களுக்கு நன்கொடை வழங்குவதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.மக்களின் இந்த செயலும் நம்பிக்கை அளிக்கிறது.ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அடிக்கடி சென்று உதவும் நண்பர்கள் தாங்கள் செல்லும் போது புதிதாக ஒருவரை கூட அழைத்து செல்வதே அந்த இல்லங்களுக்கு அவர்கள் செய்யும் உதவியாக அமையும்.
இந்த இல்லங்களுக்கு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் வழங்குவது பற்றி ராம லட்சுமி அம்மா அவர்கள் பதிவு எழுதி உள்ளார்கள்.அதில் அவர் சொல்லி இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை.

நாங்கள் சென்ற இல்லத்தில் கொண்டு சென்ற உணவை அவர்களிடமே கொடுத்துவிட்டோம் எந்த குழந்தை எவ்வளவு சாப்பிடும் என்று தெரிந்து மிக சரியாக பரிமாறினார்கள் குழந்தைகளும் வெகு நேர்த்தியாக ஒரு பருக்கை கூட வீணடிக்காமல் சாப்பிட்டார்கள். னால்? உணவு பொருட்களை கொண்டுவரும் சிலர் குழந்தைகளுக்கு தாங்களே பரிமாறுவதாக சொல்லி மிக அதிக அளவு உணவை கொடுத்து விடுவதாகவும் அதனால் குழந்தைகள் சிலர் வாந்தி எடுப்பதும்,மறுநாட்களில் பேதி ஆவது போன்ற இன்னல்களுக்கு ஆளாவதாகவும் மேலும் சிலர் இனிப்பு பொருட்கள் ஐஸ் க்ரீம் பொருட்களையும் வழங்குவதாக அந்த இல்லத்தின் நிர்வாகிகள் கூறினார்கள்.

இதுபோன்ற நன்கொடையாளர்களை நம்பித்தான் நாங்கள் இந்த இல்லம் நடத்துகிறோம் அதனால் வருகின்றவர்களிடம் கடுமையாக எதையும் சொல்ல முடியவில்லை என்று வருத்தத்துடன் சொன்னார்கள்.


இதுபோன்ற இல்லங்களுக்கு பொருட்களையோ உணவு வகைகளையோ வழங்கும் நன்கொடையாளர்கள் அவர்களுக்கு என்ன தேவை என கேட்டு வழங்குவது நல்லது.அதோடு கொண்டு செல்லும் உணவு பொருட்களை அவர்களிடமே கொடுத்து பரிமாற சொல்வது நல்லது.

அந்த நிர்வாகத்தினர் சில விசயங்களை சொன்னார்கள் சிலர் தங்கள் திருமண நாள்,பிறந்த நாள் போன்ற தினங்களில் இங்கு தங்கள் குடும்பத்துடன் வந்து உணவு வழங்கி ஒருநாள் பகல் இருந்து செல்வர்கள் என சொன்னார்கள்.

இந்த விசயத்தில் தான் எனக்கு ஒரு நெருடல் ஏற்பட்டது!!

இங்கே குழந்தைகள் எட்டு மாதம் முதல் பத்து வயது வரை உள்ளவர்கள் உள்ளார்கள்.ஐந்து வயதுக்குட்பட்ட பெரும்பாலும் தாய்க்கு ஏங்கும் பிள்ளைகளாக இருப்பார்கள்.சிலர் தங்கள் பிள்ளைகளையும் இது போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லும்போது, அங்கு இருக்கும் பிள்ளைகள் அந்த பெற்றோருடன் வரும் பிள்ளைகளை பார்த்து தனக்கு பெற்றோர் இல்லையே என்ற ஒரு ஏக்கத்தில் தவித்து போய் விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது .
அதோடு அங்கு செல்லும் பெண்கள் அவர்களுக்கே உரித்தான தாய்மை உணர்வில் அங்கு இருக்கும் பிள்ளைகளிடம் மிகுந்த பரிவோடும்,கனிவோடும் நடந்து கொள்ளுவார்கள் அந்த பரிவிலும்,கனிவிலும் அந்த குழந்தைகள் அந்த தாயின் தாய்மை மிகுந்த அன்பில் வசப்பட்டு தாய்காகவும் தாய் பாசத்திற்காகவும் ஏங்க ஆரம்பித்து விடுமோ என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது.

குடும்பத்துடன் அங்கு செல்ல வேண்டும் என்று ஆரம்பத்தில் எனக்கு இருந்த எண்ணத்தை அந்த குழந்தைகளை பார்த்து மாற்றி கொண்டேன்.

..............................................................................................................................

>