சுகமாய் ஒரு பிரசவம்மீள் பதிவு


இரவு
எட்டு மணி இருக்கும் வலி லேசா ஆரம்பிச்சது . என் அம்மாவும், மாமியாரும் இருக்காங்க, அக்கம்பக்கத்துல இருக்குற சிலரும் இருக்காங்க .

வலி அதிகமில்ல காலைல ஆஸ்பத்திரில சேத்துக்கலாம்னு ரெண்டுபேரும் சொல்லுறாங்க .நான் வந்து என்ன சொன்னேன்னா, நடுராத்திரில வலி அதிகமானா என்ன பண்ணுறது அப்போ போய் ஆட்டோ புடிக்க முடியாது இப்போவே போய் ஆட்டோ புடிச்சுட்டு வர்றேன்னு சொன்னேன் . (ஆமாங்க வலி என் மனைவிக்கு) இல்ல பார்த்துக்கலாம் இருடான்னு எங்கம்மா சொல்ல !

இப்போ போனா ஆஸ்பத்திரில சும்மா தான் உக்கார்ந்து இருக்கணும்னு என் மாமியார் சுவத்து பக்கம் பார்த்து சொல்ல (அவங்க என்ன நேரா பார்த்து பேச மாட்டங்க எதிர்ல நிக்கக்கூட மாட்டாங்க )

நான் கேக்காம புடிவாதமா ஆட்டோ புடிச்சுகிட்டு வந்துட்டேன் !

எங்கம்மா வந்து, ஏன்டா எங்களுக்கு தெரியாது ? என்னமோ ஏழு புள்ள பெத்தவனபோல அவசரமா ஆட்டோ புடிச்சுட்டு வர்றே ?

அப்படின்னு சொல்லிட்டு, நாங்க சொன்னா கேக்கவாபோறே ? ன்னு சொல்லி துணி மணியெல்லாம் எடுத்துகிட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டாங்க .

ஆஸ்பத்திரில சேத்தாச்சு !வலி கொஞ்ச கொஞ்சமா அதிகமாகுது !

மணி பதினொன்னு ஆக போகுது வலி பொறுக்காம மனைவி போடுற சத்தத்த கேட்டு எனக்கு பயம் வந்துடுச்சி என் அம்மாவும்,மாமியாரும் என் மனைவி சத்தத்த பத்தி பெருசா எடுத்துக்காம சாதாரணமா இருக்கவே,சரி இந்த சத்தமெல்லாம் சகஜம் போல ன்னு நான் கொஞ்சம் தைரியமா இருந்துட்டேன் .

ஆஸ்பிட்டல்ல சிஸ்டர் வந்து, நைட் இங்க யாராவது ரெண்டுபேர்தான் தங்கலாம் அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க .

எங்கம்மா வேற வழி இல்லாம கிளம்பிட்டாங்க ! மணி பன்னண்டுக்கு மேல ஆகுது . ஆஸ்பத்திரில நாலஞ்சு சிஸ்டர் அப்புறம்,ரெண்டு பேர் மட்டும் இருக்காங்க ! நான் ஒரு சோபால உக்கார்ந்து இருக்கேன் !

மனைவி சத்தம் போட போட பதட்டம் தாங்கல, என்னான்னு போய் பாருங்க ன்னு மாமியார்கிட்ட சொல்ல, அப்போகூட அவங்க வெக்கபட்டுகிட்டு அந்தாண்ட போறாங்க என்னைய உள்ள விட மாட்டுறாங்கஅப்படின்னு கீழ குனிஞ்சுகிட்டு சொல்லுறாங்க !

அங்க இருக்குற சிஸ்டர் எல்லாம் சகஜமா அரட்டை அடிச்சுகிட்டு இருக்கவே, என்னங்க சிஸ்டர் சத்தம் போடுறாங்க போய் பாருங்க ன்னு நான் சொன்னதும்

இதோ பாருங்க சார்!

இப்போ டாக்டர் வருவாங்க ! ரெண்டு,மூணு மணிபோல தான் டெலிவரி ஆகும் . டென்சன் ஆகாம போய் உக்காருங்க . அப்படின்னு சொல்லுறாங்க .
ஒரு மணி இருக்கும், என் மனைவி போடுற சத்தம் அவ குரல் போலவே இல்ல ! என்னால உக்கார முடியல ! ஒன்ற மணி போல என் மாமியார் கொஞ்சம் தள்ளி ஓரமா நின்னுகிட்டு இருந்தாங்க ! என்னான்னு பார்த்தா ! தேம்பி !தேம்பி அழுதுகிட்டு இருக்காங்க ! அய்யய்யோ என்னமோ ஆச்சு போலன்னு நான் அலறி அடிச்சுகிட்டு என்ன ஆச்சு சொல்லுங்கன்னு கத்துறேன், அப்போ ஒரு சிஸ்டர் வந்து என்னங்க அழுதுகிட்டு இருக்கீங்க டாக்டர் வந்துட்டாங்க சீக்கிரம் போய் துணியெல்லாம் ரெடி பண்ணுங்கன்னு சொல்ல , ஒடனே போய் ஒரு வேட்டி துணிய எடுத்துகிட்டு வர்றாங்க !

ஒரு சத்தமும் கேக்கல கதவ சாத்திக்கிட்டங்க அன்னிக்குத்தான் தெரிஞ்சது எனக்கு நான் எவ்வளவு பலவீனம் ஆனவன்னு !
திக் திக்ன்னு இருக்கு ! கதவு பக்கத்துல மாமியார் நிக்குறாங்க, நான் கொஞ்சம் தள்ளி நிக்குறேன் ! ஒரு சிஸ்டர் வெளில வர ! என்னாச்சுன்னு கேட்டா ? கொஞ்சநேரம் ஆகும் வழில நிக்காதிங்க ஓரமா நில்லுங்கன்னு வெரட்டுது இது நடந்தது அஞ்சு வருஷம் முன்னாடி அப்போ என்கிட்டே செல்போனும் இல்ல ஒரு துணையும் இல்லாம ! என்ன செய்றதுன்னு தெரியாம !நான் நின்ன நெலமை எனக்குத்தான் தெரியும் .
கொஞ்ச நேரத்துல ஒரு சிஸ்டர் வந்து என் மனைவி பேர சொல்லி அவங்க ஹஸ்பெண்ட் யாருங்க ?

நாந்தான்னு சொல்ல, டாக்டர் உங்கள இங்கேயே இருக்க சொன்னாங்க எங்கயும் போயிடாதிங்க ன்னு சொல்லிட்டு உள்ள போய்ட்டாங்க !

அவ்வளவுதான், எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் போய்டுச்சு !

லேசா நடுக்கம் வந்துடுச்சு எனக்கு ! கைய கட்டிக்கிட்டு அப்படியே சுவத்துல சாஞ்சி நின்னுகிட்டேன் !

மனசுக்குள்ள முதன் முதலா சாமிய வேண்டுனது அப்போதான் ! நாலர மணி வரை அப்படியே நிக்குறேன், அஞ்சு மணிக்கு என் அம்மா வந்துட்டாங்க !

சும்மா சும்மா என் அம்மாவ பார்த்து எரிஞ்சு விழுற எனக்கு,அப்போ என் அம்மாவ பார்த்து எனக்கு வந்த ஒரு தைரியம் சொல்லி விளக்க முடியாது !

என்ன ஆச்சு ன்னு அம்மா கேக்க !

நான் வாயத்திறந்து ஏதும் சொல்லும் போது என் குரல் உடைந்து விடும்னு
பயத்துல ஒன்னும் இல்ல ன்னு தலைய மட்டும் அசைக்கிறேன் .

என் அம்மா வந்து மாமியார்கிட்ட போய் என்ன ஆச்சுன்னு கேட்டு அவங்க கிட்ட போய் பேசிகிட்டு இருக்காங்க !


சரியா மணி அஞ்சு நாப்பத்தி ஒன்னு !

எல்லோரும் சந்தோசமா கேளுங்க !

'' ஒரு சிஸ்டர் வெளிய வந்து பெண் குழந்தை பிறந்துருக்கு ''

அம்மாவும் பொண்ணும் நல்லா இருக்காங்க ''


அப்பாடா !!

ரெண்டுஅப்போ எனக்கு வந்த சந்தோசம்,நிம்மதி, இதைஎல்லாம் என்னால சொல்லவே முடியாது .

கொஞ்ச நேரத்துல என் பொண்ணை ஒரு சிஸ்டர் வெளில கொண்டுவந்து காட்டுறாங்க .


''என் குழந்தைய பார்த்து ரெக்கைகட்டி பறக்காத குறைதான் ''


இப்போ எனக்கு என் மனைவிய உடனே பார்த்தாகனும் !


உள்ள போகலாமா ன்னு கேட்டா வெயிட் பண்ண சொல்லுறாங்க !

கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள போய் மனைவிய பார்க்குறேன் !

''சினிமால வர்றதுபோல நெகிழ்ச்சியோட கண் கலங்கல ''

'' குழந்தைய பார்த்திங்களான்னு அவ கேக்கல ''

லேசா சின்ன வெக்கத்தோட ஒரு சிரிப்பு சிரிச்சா அவ்ளோதான்


அது போதும் எனக்கு !!!

>

27 comments:

நட்புடன் ஜமால் said...

மிக நெகிழ்வாய்!

நட்புடன் ஜமால் said...

\\லேசா சின்ன வெக்கத்தோட ஒரு சிரிப்பு சிரிச்சா அவ்ளோதான்


அது போதும் எனக்கு !!!\\

அருமை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க பதிவுலயே எனக்கு ரொம்ப பிடிச்சது
இந்த பதிவுதாங்க.

மீள் பதிவா படிக்கும் போது கூட முதன் முதலாய் இந்தப் பதிவ படிச்ச அதே படபடப்பு இருக்கிறது எனக்கு.

குடந்தைஅன்புமணி said...

பத்து மாதம் சுமந்து பெண்கள் பெற்றாலும், குழந்தை பிறக்கும் அந்த கணநேரம் ஆண்கள் அருகில் இருந்தால் அது ஒரு மரண அவஸ்தைதான். அதுவும் முதல் பிரசவம் என்றால் கேட்டகவே வேண்டாம்! நானும் அனுபவித்திருக்கிறேன்.

பிரேம்குமார் said...

மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஒன்றை பகிர்ந்து கொண்டீர்கள். உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துகள்

உங்க குட்டி தேவதை இப்போ எப்படி இருக்காங்க?

அபுஅஃப்ஸர் said...

ரொம்ப தத்ரூபமா இருந்தது
ஒரு நெகிழ்ச்சியான காட்சியை கண்முன்னே கொண்டுவந்துட்டீங்க,

பிரசவம் என்பது மறுபிறவி தான் என்பது உங்க எழுத்து இன்னும் அதை நிரூபிக்குது

வித்யா said...

:))

harveena said...

ஒரு சத்தமும் கேக்கல கதவ சாத்திக்கிட்டங்க அன்னிக்குத்தான் தெரிஞ்சது எனக்கு நான் எவ்வளவு பலவீனம் ஆனவன்னு !


லேசா சின்ன வெக்கத்தோட ஒரு சிரிப்பு சிரிச்சா அவ்ளோதான்


அது போதும் எனக்கு !!!

superrrrrrr,,,,

புதியவன் said...

//''என் குழந்தைய பார்த்து ரெக்கைகட்டி பறக்காத குறைதான் ''//

அந்த தருணத்தின் மகிழ்ச்சியை வார்த்தைகளில் உணர முடிகிறது ஜீவன் அண்ணா...

அ.மு.செய்யது said...

மீள் பதிவானாலும் நான் இப்போது தான் படிக்கிறேன்.

கடைசி வரிகள் சூப்பர்.நெகிழ வைத்த பதிவு !!!!!!! ஜீவ‌ன் !!

RAMYA said...

உங்கள் பதிவில் எல்லாமே நான் ரசிச்சு படிப்பேன், ஆனால் இந்த பதிவை நான் படித்ததோடல்லாமல் எனது தோழிகளிடம் எல்லாம் கூட படிக்கச்சொல்லி லிங்க் கொடுத்தேன்.

அன்றும் ரசிச்சு படிச்ச பதிவுதான் என்றாலும், இன்று படிக்கையில் இது ஒரு மீள் பதிவு போல் இலையே.

ஜீவன் புதிதாய் எழுதியது போலவே இருந்தது.

உண்மைதான் நான் இதை பெருமைப் படுத்தக் கூறவில்லை

இந்த சம்பவத்தில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அடக்கமான, அட்டகாசமான வரிகள்.

ரசனைக்குரிய ஒரு தந்தையின் பாசமிக்க, உணர்வு மிக்க வரிகள்.

மறுபிறவி என்பது பிரசவத்தில் மட்டுமே என்பது எழுதப்படாத தீர்ப்பு.

அதிலும் ஒரு கணவன் அதை உணர்ந்து எழுதும் போது மனம் கனத்துதான் போகின்றது.

அன்று படிக்கும் போதும் இதே உணர்வு எனக்கு ஏற்பட்டது. இன்று படிக்கும் போதும் அதே உணர்வுதான் ஏற்பட்டுள்ளது.

ஒரு அப்பாவின் ஆனந்தக் கண்ணீரில் கரைந்த சக நண்பர்களின் கண்ணீர் காவியம் இந்த பதிவு என்றால் அது மிகையாகாது ஜீவன்.

Sasirekha Ramachandran said...

எத்தனை அழகாய் உங்கள் உணர்வுகளை இங்கே எழுதி இருக்கிறீர்கள்........உண்மையில் நீங்கள் சொல்லும் அத்தனையும் குழந்தை பிறக்கப் போகும் வீட்டில் நடக்கும் ஒன்றுதான்.இந்த பதிவைப் படித்து என் நினைவுகளை அசை போட ஆரம்பித்துவிட்டேன்............

Sasirekha Ramachandran said...

உங்களின் அருமையான பதிவைக் காண இதோ உங்களை நான் இப்போதிருந்து தொடர ஆரம்பித்து விட்டேன்!!!

ஹேமா said...

ஜீவன்,அனுபவ உணர்வு.
உண்மையில் மனதில் ஒரு கட்டி வந்து கரைந்து போனது.

Rajeswari said...

அப்ப எனக்கு ஒரு மருமகள் இருக்கா ..சரியா ஜீவன் அண்ணா..

வால்பையன் said...

வாழ்த்துக்கள் நண்பரே!

எனக்கும் இதே அனுபவம் தான் சென்னையில் தான் என்னையும் ஒரு இளவரசி மகாராஜாவாக்கினாள்!

sakthi said...

அன்பு நண்பர் ஜீவன் ,
மனதார என் சார்பிலும் ,நம் பதிஉலக நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ,
எல்லாம் வல்ல இறைவன் குழந்தைக்கு ௧௬ செல்வங்களையும் அளிப்பானாக .உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள் .

Anonymous said...

பிரசவ வலியை வார்த்தைகள் கொண்டு அப்படியே பிரசவிச்சி இருக்கிங்க ஜிவன்...ஜிவனுள்ள வார்த்தைகள்
ஜிவன் கொண்டு ஜனித்து இருக்கு இங்கு ஒரு suspense நாவல் படிச்ச மாதிரி திரில்...

sakthi said...

அன்பு நண்பர் ஜீவன் ,
மனதார என் சார்பிலும் ,நம் பதிஉலக நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ,
எல்லாம் வல்ல இறைவன் குழந்தைக்கு 16 செல்வங்களையும் அளிப்பானாக .உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள் .

அமுதா said...

/*அமிர்தவர்ஷினி அம்மா said...
உங்க பதிவுலயே எனக்கு ரொம்ப பிடிச்சது
இந்த பதிவுதாங்க.

மீள் பதிவா படிக்கும் போது கூட முதன் முதலாய் இந்தப் பதிவ படிச்ச அதே படபடப்பு இருக்கிறது எனக்கு.
*/
ரிப்பீட்டு

sakthi said...

really a very nice post jeevan sir

யட்சன்... said...

எழுத்தாளர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

இது பழய மேட்டர்....நான் புதுசாக்கும்னு வந்தேன்...

புதுசா எழுதுங்க..... :)

Anonymous said...

yah such a great feel

Naikkutty said...

yah great feel

தமிழிச்சி said...

உங்கள் அனுபவத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.நம்ம நாட்டில் தான் கணவரை உள்ளே விட மாட்டார்கள். மனைவி பட்ட அவ்ஸ்தயை நீங்கள் கதவுக்கு வெளியில் நின்றுதானே கற்பனை பண்ணினீர்கள். நீங்கள் அருகில் இருந்திருந்தால் அந்த அனுபவம் அபாரம் சார்.

ரேவதி said...

super sir, unga wife a vida neengadan romba vedhanai patrikeenganu unga ezhuthulaye theriyudhu

cheena (சீனா) said...

அன்பின் ஜீவன்

நல்ல இடுகை - உணர்ச்சிகரமாக எழுதப்பட்ட இடுகை - பிரசவ நேரத்தில் அதுவும் தலைப்பிரசவத்தின் போது மருத்துவ மனையில் காத்திருக்கும் கணவனின் மனநிலை நன்கு சித்தரிக்கபட்டு உள்ளது

நல்வாழ்த்துகள் ஜீவன்