சபரிமலை ஒரு பயண அனுபவம் --படங்களுடன்

தொடர்ச்சியா ஏழு வருஷம் மலைக்கு போயிட்டு வந்தாச்சு . இந்த வருஷம் போயிட்டு சனி இரவு (26-12-2009) 2 மணிக்கு வந்தேன். பயண அனுபவத்தை கொஞ்சம் பகிர்ந்துகிறேன்..!

செல்லும் வழிகள்

பெரிய பாதை

எரிமேலியில் இறங்கி அங்கிருந்து பெரிய பாதை ழியே பம்பை சென்று செல்வது. மொத்தம் 40 கிலோ மீட்டர் என்று சொல்கிறார்கள் நான் அந்த பாதையில் சென்றதில்லை.
சிறிய பாதை

நேராக பம்பை சென்று மலை ஏறுவது 4-5 கிலோமீட்டர் இருக்கும்.

புல்மேட்டுபாதை

நேராக குமுளி சென்று அங்கிருந்து வண்டி பெரியார் என்ற இடம் சென்று அங்கே இருந்து புல்மேடு செல்ல வேண்டும் வண்டி பெரியாரில் இருந்து கரடு முரடான பாதையில் செல்ல வேண்டும் .மிகவும் மோசமான சாலை அது. குமுளியில் இருந்து பஸ் வசதியும் தனியார் ஜீப் போக்கு வரத்தும் உண்டு.

இந்த இடம் சபரி மலைக்கும் மேலே இருக்கிறது இங்கிருந்து சபரிமலை நோக்கி மலை இறங்க வேண்டும் 6-8 கிலோமீட்டர் இருக்கும்.

புல்மேடு ..! மலை உச்சியில் புற்கள் மண்டி கிடக்கிறது அந்த மலை பிரதேசத்தில் இந்த இடமே மிக உயரமாக தோன்றுகிறது..!
இந்த பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சகஜமாக யானைகள் உலவும் இடம்.அங்கங்கே யானை சாணம் கிடக்கிறது சில இடங்களில் பிரெஷாக சாணம் ...!

நாங்கள் இப்போது சென்று திரும்பியது இந்த வழியேதான்..!

புல் மேட்டு மலை




கீழ் நோக்கி இறங்கும் வழி

வன வழி இங்கிருந்து ஆரம்பம்

மலையில் இறங்கும்போது தலையில் இருமுடி,சன்னதியில் கூட்டம் பற்றிய சிந்தனைகள் அதிகம் இருப்பதால் கானகத்தை அனுபவிக்க முடியாது விறு விறு வென இறங்கிவிடுவோம். வரும்போதுதான் சுவாரஸ்யமே...!!!

காலை பத்து மணிக்கு இறங்க ஆரம்பித்தோம் இறங்க மூன்று மணிநேரம் ஆனது எங்களுக்கு...! சிலர் செம ஸ்பீடில் சென்றார்கள்.! சுவாமி தரிசனம் முடித்து இரவு தங்கி நெய் அபிஷேகம் எல்லாம் முடித்து மறுநாள் காலை ஆறு மணி அளவில் மலை ஏற ஆரம்பித்தோம் ...!

எந்த ஒரு இடத்திலுமே அதிகாலை மிக அழகாய் தோன்றும் அடர்ந்த வனத்திற்குள் சொல்ல வேண்டுமா ??? மெல்ல மெல் பொழுது புலர ஆரம்பித்தது ஓங்கி உயர்ந்த மரங்கள்...! சில்லென்ற காற்று...! ஈரமில்லாத குளிர்ந்த தரை பகுதி..! செருப்பில்லாத வெற்றுபாதங்களுடன் நடை...!

மலை ஏறுவது கண்டிப்பாக கடினம்தான் தூரத்தை நினைக்கும்போது மிகவும் மலைப்பாகத்தான் இருக்கும் . மெல்ல ரசித்து அனுபவித்து செல்ல வேண்டும் என முடிவு செய்த பிறகு மலை என்ன ? தூரம் என்ன ?
கட்டுக்குள் பறவைகளை காணமுடியவில்லை சில பூச்சிகள் ,வண்டுகள் சத்தம் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லை..! எப்போவாவது சில குரங்குகள் கண்களில் தட்டுப்படும் இங்கேயும் சில இடங்களில் யானை சாணம் கா முடிந்தது.




வனத்திலிருந்து வானம்

காட்டுக்குள் ஒரு கம்பளி பூச்சி


வழியில் ஒரு நீர்க்கசிவு ஒரு அருவிபோல...!

நவ யுகத்தின் பாதிப்பு சிறிதும் இல்லாத கானகம்..! பலநூறு வருடங்களுக்கு முன்னரும் இந்த இடம் இப்படித்தான் இருந்திருக்கும் இன்னும் பல நூறு வருடங்களுக்கு பிறகும் இந்த இடம் இப்படிதான் இருக்கும் ????? இந்தஇடத்தை காண்பதே ஒரு இறை தரிசனம்தான் ...!


இந்த வழியில் நான்கு இடங்களில் உணவகங்கள் உள்ளது.பிரத்யோக உணவு மரவள்ளி கிழங்கும் ,கஞ்சி சாதமும் ..! சுட சுட பரோட்டாவும் கிடைகிறது. வடை பஜ்ஜி எல்லாம் கிடைகிறது . எல்லா கடைகளிலும் நாரங்கி வெள்ளம் (எலுமிச்சை உப்பு தண்ணீர்) கிடைகிது .


காட்டு ஹோட்டல்

சற்று சமமான இடத்தில் கொஞ்சம் ஓய்வு

மீண்டும் புல்மேடு வந்து அங்கிருந்து வண்டிபெரியார்வரை ஜீப்பில் பயணம். அங்கே எங்கள் வண்டியை அடைந்து குமுளி வந்து கொஞ்சம் ஷாப்பிங் (மிளகு,கிராம்பு ,தைலம்,போன்றவை)

குமுளியில் இருந்து வண்டி பெரியார் செல்லும் சாலை

குமுளியில் புறப்பட்டு நேராக சுருளி அருவியில் ஒரு குளியல்....!
சுருளி செல்லும் வழியில் நிறைய திராட்சை தோட்டங்கள்...! (போட்டோ எடுக்கவில்லை )

அடுத்து பழனி


என்னதான் ஊரெல்லாம் சுத்தினாலும் நம்ம பழனிக்கு வந்தவுடன் என்னமோ சொந்த ஊருக்கு வந்ததுபோல ஒரு உணர்வு. பழனியில் இரவு தங்கி அதிகாலையில் எழுந்து மலை றி முருகப்பெருமான் தரிசனம்.


மலை மேலிருந்து ...!


படியேற ஆரம்பிக்கும் இடத்தில் தொப்பி விற்கும் ஒருகடையில்

பழனியிலும் கொஞ்சம் ஷாப்பிங் பஞ்சாமிர்தம் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள்கள் முதலியன...!

சும்மா வெளையாட்டுக்கு....!


திருச்சி காவிரி ஆற்று பாலம்.
(வரும்போது காருக்குள்ளிருந்து ஒரு கிளிக்)

வரும்போது சமயபுரம் சென்று அம்மனை தரிசித்துவிட்டு வந்தோம்


ம்ம்ம்... நல்ல படியா போயிட்டு வந்தாச்சு...! விரதமெல்லாம் முடிஞ்சாச்சு...! நியூ இயர் வருது...! இனி கொண்டாட்டங்கள் ஆரம்பம்...! ஸ்டார்ட் கவுன் டவுன் 1..2..3..4...


...
>

நான் ஹிந்து ..! நீ முஸ்லிம்..! நாம் யார் ..?




நண்பர் புதுகை அப்துல்லா ஒரு பதிவு எழுதி இருக்கிறார்!
கிர்மினல்கள்
! கிர்மினல்களே! என்ற அந்த பதிவில் நேசமுடன் இஸ்லாம் என்ற பதிவரின் பதிவில் பெற்ற மகளை கற்பழித்த ஹிந்து தந்தை கைது. என்ற தலைப்பில் இடப்பட்டு இருந்த பதிவில் ''ஹிந்து தந்தை'' என்று மதத்தை குறிபிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், முஸ்லிம் தீவிர வாதிகள் என பொதுவில் கூறபடுவதால் மன வேதனையை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து தன்னுடைய சிறந்த பதிவுகளில் ஒன்றான தீபாவளி நினைவுகள் பதிவினை மறுபதிவும் செய்து இருக்கிறார்! இதன் மூலம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை என்ற ஒரு உயர்ந்த நோக்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

வெறுப்பை எளிதில் விதைத்து அதன் பலனை உடனடியாக நாமே அடைந்து விடலாம். ஆனால் அன்பை நாம் விதைத்தால் அதன் பலன் தெரிய அடுத்த பல தலைமுறைகள்கூட ஆகும். நீர்,நிலம்,காற்று என அனைத்தையும் வரும் சந்ததிகளுக்கு மாசுபடுத்திக் குடுத்து விட்டோம். அந்த வரிசையில் மதத்தைச் சேர்க்காமல் இருக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருப்பதை மறவோம்.
இந்த கருத்தில் மேலும் உயர்ந்து நிற்கிறார்


எங்கள் ஊர் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகம் கலந்து வாழும் பகுதி! அங்கே எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உண்டு.சிறுவயதுமுதல் ஒரே குடும்பமாக பழகிய பல நட்புகளும் அங்கே உண்டு.தீபாவளி ,ரம்ஜான் எல்லாம் ஒன்றாக கொண்டாடி இருக்கிறோம். ரம்ஜான் பண்டிகையின் போது பண்டிகை காரர்கள் வீட்டில் இருக்கும் பட்சனங்களைவிட எங்கள் வீட்டில் அதிகம் இருக்கும்.எல்லா நண்பர்கள் வீட்டிலிருந்தும் பலகாரங்கள் வந்துவிடும். தீபாவளி சமயங்களில் அவர்கள் வீட்டிலும் அப்டித்தான்.




டேய்! போன தீபாவளிக்கு உங்க வீட்டுல செய்ஞ்ச தேங்காப்பார ரொம்ப நல்லா இருந்துச்சி இந்தவாட்டியும் அம்மாகிட்ட சொல்லி செய்யசொல்லு!! என இஸ்லாமிய நண்பனுக்கு பிடித்த பட்சணங்கள் ஹிந்து வீட்டில் செய்த சம்பவங்களும் உண்டு .



நட்பிற்குள் மதம் நுழையுமா ?

நல்ல உறுதியான,புரிந்துணர்வு கொண்ட எந்த ஒரு நட்பிற்குள்ளும் மதம் நுழைய முடியாது! எனக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான மிக நெருங்கிய நண்பன் இருக்கிறான் அவன் பெயர் இப்ராம்ஷா. இப்போது துபாயில் இருக்கிறான். என் எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்தவன் முக்கிய நேரங்களில் இடுக்கண் களைந்தவன்.


ஒரு சமயம் ஒரு நண்பனின் கட்டாய அழைப்பின் பேரில் ஒரு கூட்டத்திற்கு சென்றேன் அது ஒரு ஹிந்து மத அமைப்பின் கூட்டம். பழைய வரலாறுகள் பேசப்பட்டன, மன்னர்கால சம்பவங்கள் எடுத்துகூற பட்டன.முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷயங்கள் முன்வைக்க பட்டன. இதுபோன்ற சம்பவங்களை மூளைசலவை என்று சொல்கிறார்கள்.சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள்.



இவர்கள் சொல்லிய எந்த கருத்தும் என் இப்ராம்ஷா முன்னர் எடுபடவில்லை என் மூளையை அழுக்கடையாமல் சுத்தமாக சலவை செய்தது என் இப்ராம்ஷா வின் நட்புதான். இப்ராம்ஷா பற்றி இங்கு எழுதவே எனக்கு பெருமையாக இருக்கிறது.



இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் ஊருக்கு சென்று இருந்தேன் குடும்பத்துடன் .துபாயில் இருந்து இப்ராம்ஷாவும் வந்து இருந்தான்.எல்லோரும் குடும்பத்துடன் உற்சாகமாய் பேசி கொண்டுஇருந்தோம்.அப்போது பிரபல தொலைகாட்சியில் ஒரு செய்தி குண்டு வெடிப்பு பற்றி குண்டு வைத்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று செய்தி படிக்கிறார்கள்.இப்ராம்ஷா மனம் நொந்து போகிறான் வெளியில் காட்டி கொள்ளவில்லை.அவன் உற்சாகம் மறைந்து கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுகிறான்.



எங்கோ யாரோ செய்கிற தவறிற்கு ஏன் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் என சொல்லவேண்டும். இதோ என் கண்முன்னே என் நண்பன் நொந்து போகிறான்!
இதே போல நல்ல நட்பு ஏதும் இல்லாத ஒரு தவறும் செய்யாத ஒரு இஸ்லாமியர் இதை பார்க்கும்போது அவருக்கு என்ன தோன்றும் இந்துக்கள் மேல் வெறுப்பும் தன்மதத்தின் பற்றும் அதிகரிக்காதா? சும்மா இருக்கும் ஒருவனை மதவாதியாக மாற்றுவதுயார்?

இந்தியா ஒரு மத சார்பு அற்ற நாடுதானே இப்படி ஹிந்து தீவிரவாதி,முஸ்லிம் தீவிரவாதி,கிறித்தவ தீவிரவாதி என்று சொன்னால் சராசரி மக்களும் மதவாதி ஆகிவிடமாட்டார்களா? அந்த வார்த்தை இந்திய இறையான்மையை பாதிக்காதா ? இப்போது ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாய நபர் ஒருவரை யாராவது அவர் ஜாதியை குறிப்பிட்டு பேசினாலே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

அப்படி இருக்க! வெகு சாதாரணமாக ஒரு மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொல்லி விடுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாக அறிவிக்க வேண்டும்.

நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!!



இது ஒரு மீள் பதிவு

சபரி மலைக்கு மாலைபோட்டு மலைக்கு போயிட்டு ரெண்டு நாள் முன்னாடிதான் வந்தேன் பயண அனுபவங்கள பதிவா போட இருந்தேன் அதுக்கு முன்னாடி இந்த பதிவ இப்போதைக்கு போடலாமேன்னு தோணுச்சி அடுத்த பதிவு சபரி மலை பயண அனுபவங்கள்.


.........


...........................................................................................................................

...................................................................
>

நான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன் ? எப்படி ?

நான் புகை பிடிக்க ஆரம்பித்ததையும் பிறகு அந்த பழக்கத்தை விட்டதையும் பத்திசொல்லுறேன் ஆங்காங்கே கொஞ்சம் சுய புராணம் இருந்தா கொஞ்சம் பொறுத்துக்கங்க.

நான் முதன் முதலா சிகரெட் புடிக்க ஆரம்பிச்சது கோயம்புத்தூர்ல. நம்ம நகை தொழில கத்துகிட்டு அங்கேயே மூணு வருஷம் வேலை செய்ஞ்சுகிட்டு
இருந்தேன்.ஆரம்பத்துல ஒன்னு,ரெண்டுன்னு சிகரெட் புடிக்க ஆரம்பிச்சு அப்புறம் நல்லா முன்னேறி ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் அளவுக்கு சிகரெட் புடிக்க ஆரம்பிச்சேன்.


அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு சொந்த ஊர் வந்து ஊர்ல வேலை.நான் வந்து ஒரு கிரிக்கெட் பிளேயர்.கிரிக்கெட்ல பாஸ்ட் பவுலர். நெறைய மேட்ச் ஆடி இருக்கேன்.இப்போ சிகரெட் புடிக்க ஆரம்பிச்ச பிறகு பழைய வேகமும்,துல்லியமும் இல்லாதது நல்லா தெரிஞ்சது.கண்டிப்பா அதுக்கு
சிகரெட் தான் காரணம்.அப்போ நெனைச்சுகிட்டேன்.

''மொதல்ல இந்த சிகரெட்ட நிறுத்தனும்''

ஒரு ரெண்டு நாள் சிகரெட் புடிக்கல அப்புறம் என்கூட விளையாடுற எல்லோருமே சிகரெட் புடிச்சாங்க சிகரெட் புடிக்காம இருக்க முடியல
பழைய படி ஆரம்பிச்சுட்டேன்.

ஊர்ல வேலை அதிகமில்ல, வறுமையும் பொருளாதார தேவையும் நம்மள சென்னைல கொண்டுவந்து போட்டுச்சி.

சென்னைல கொஞ்சநாள் சரியா தொழில் அமையாம இருந்தது.அப்புறம் கடவுள் கண்ண தொறக்கவே, தனியா கடை வைச்சு நல்லா பிக் அப் ஆச்சு!
சிகரெட் ஒரு பாக்கெட் ரெண்டு பாக்கெட் ஆச்சு.

இப்போ நல்லா பெரிய கடை புடிக்கிற அளவுக்கு முன்னேற்றம்.கடைல சிகரெட் புடிகிரதுக்காகவே ஒருஎடம் ஆஷ்ட்ரே எல்லாம் வைச்சு செட் பண்ணி இருந்தேன் அப்பப்போ ''தண்ணி'' வேற!

கொஞ்ச வருஷம் போச்சு வீட்டுல பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க, கல்யாணமும் ஆச்சு! தங்க மணி வந்து முதல்ல தங்க மணியாதான்
இருந்துச்சி அப்புறம்தான் ''சிங்க மணி'' ஆச்சு!

அதும் எவ்வளவோ சொல்லி பார்த்துச்சி நாம யாரு? சிங்கத்துக்கே டிமிக்கி கொடுப்போம்ல!



சரியா ஒரு வருசத்துல பொண்ணு பொறந்தது!

குட்டிபோட்டபூனையாட்டம்ஆஸ்பத்திரியசுத்திசுத்திவரேன்குட்டிபோட்ட பூனைஉண்மைதானே) எல்லாம்சொல்லுவாங்ககுழந்தைநம்மமுகத்த நல்லாபார்க்கரெண்டு,மஊனுநாள்ஆகும்அப்படின்னுஆனாஎன்பொண்ணு மறுநாளேஎன்முகத்தநல்லாபார்த்துநல்லாஒருசிரிப்புசிரிச்சதுபாருங்க! என் வாழ்நாள்லகண்டமிகசிறந்தகாட்சிஅதுதான்அப்படியேசொக்கிபோயிட்டேன்.

என் பொண்ணு சிரிச்ச அந்த சிரிப்புல என்னைய அப்படியே சுத்திகரிச்துபோல ஆச்சு! என்னோட தீவினையெல்லாம் அழிஞ்சு ஒரு சுத்தமான மனுசனா மாறுனதுபோல ஒரு உணர்வு!

ஆஸ்பிட்டல் வாசல்ல நின்னு ஒரு தம் அடிச்சுகிட்டே நினைச்சு பார்க்குறேன். ஒரு நிறைவு,மகிழ்ச்சி,சந்தோசம் உற்சாகம் வேற என்ன நல்ல விஷயங்கள் இருக்கோ அது எல்லாம் ஒன்னா சேர்ந்து எனக்கு கிடைச்ச மாதிரி இருக்கு.

சரி,இப்போ குழந்தை வளர்ந்து கிட்டு வருது. நான் சிகரெட் புடிக்கிறதும் அதிகமாகுது.

ஒரு வருஷம் போகுது, குழந்தைக்கு முடி எறக்கணும் எங்க ஊருலதான் முடி எறக்கணும்.எங்க ஊருக்கு பக்கத்துல அத்திவெட்டி அப்படின்னு ஒரு ஊரு இருக்கு அங்க ''பெரிய சாமி''கோயில் இருக்கு அங்கதான் நாங்க
பரம்பரையா முடி ஏறக்குறது எனக்கும் அங்கதான்
முடி எறக்குனது.

முடி எறக்கிட்டு எங்க ஊருல இருந்து சென்னைக்கு கிளம்புறோம் அப்போ சில பேரு ஒரே பரபரப்பா பேசிகிட்டு இருக்காங்க.

என்னன்னா? யாரோ செத்து போய்ட்டாங்களாம் பக்கத்து ஊருல சத்துணவு அமைப்பாளரா வேல செய்தவராம்.

ரெண்டு பேரு பேசிக்கிட்டு போறாங்க!


பாருப்பா அவனுக்கு முப்பதிரெண்டு வயசுதான் ஆகுது
திடீர்னு போய்ட்டான் ! ''ஹார்ட் அட்டாக்காம்''ஓவரா

தண்ணி அடிப்பானாம் சிகரெட்டா ஊதி தள்ளுவானாம்
கல்யாணமாகி ரெண்டு வருசம்தான் ஆகுது,எட்டு மாசத்துல
புள்ள ஒன்னு இருக்கு இப்படி அநியாயமா உட்டுட்டு
போய்ட்டானே பாவிப்பய !


சென்னைக்கு வந்துட்டோம்!
ரெண்டு நாள் போயிருக்கும் ஒரு கனவு

அடுத்த வரிகள எழுதும் போது ஒரு வலியோடுதான்
எழுதுறேன்!

அந்த கனவு ......

நல்ல வெயில் அடிக்குது அந்த வெயில்ல
என் மனைவி வேர்க்க விருவிருக்க நடந்து
போகுது.கிட்ட போய் பார்க்குறேன் கழுத்துல
தாலி இல்ல போட்டு பூ ஏதும் இல்லாம விதவை
கோலத்துல என் அன்பு மனைவி!இடுப்புல
என் செல்வ மகள் பசித்த முகம் கன்னமெல்லாம்
வத்திபோய் ஏக்கமான பார்வையோடு....


ஐயோ! திடுக்குன்னு முழிச்சு பார்க்குறேன் ரெண்டு பேரும்
நல்லா தூங்குறாங்க.

மனசு முழுக்க பயம்! பயம்! பயம்!


தூக்கமே வரல எப்போ தூங்கினேனோ தெரியல!

காலைல யார் கிட்டயும் ஒன்னும் சொல்லல!

''சிகரெட் புடிக்கிறத நிறுத்தனும்''

(ஒரு விஷயம் சிகரெட் புடிக்கிறத நிறுத்துரதால நான் நூறு வருஷம் வாழ்ந்து விடுவேன்னு சொல்லல! சாவு எப்படி வேணும்னாலும் வரலாம் ஆனா, சிகரெட் புடிக்கிரதால நாமே சாவ நோக்கி போறதா நினைச்சேன்
அதோட சிகரெட் புடிக்கிரதால திடீர் மரணம் ஏற்படலாம்
அப்படின்னு பயந்தேன் )

கடைல வந்து உக்காந்து யோசிக்கிறேன் கிட்ட தட்ட பத்து வருசமா சிகரெட் புடிக்கிறேன் எப்படி நிறுத்த!

என்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம் ஒன்னு இருக்கு!

நான் வந்து பால குமாரனோட தீவிர பக்தன் அப்படின்னு சொல்லலாம் .நெறைய விசயங்கள அவர் சொன்ன படி கடை பிடிக்கிறேன் .

அதுல ஒன்னு ''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

எனக்கு கடைல அதிக வேலை இருந்தா இத எப்படி செய்றேன் பார் அப்படின்னு எனக்குள்ளேயே ஒரு சவால் விட்டுக்குவேன் என் உள்ளேயே ஒருவன் அத வேடிக்கை பார்க்குரதுபோல நினைச்சுக்குவேன்.

அந்த வேலைல நான் ஜெயிச்சுட்டா உள்ள இருக்குற
அவன் வந்து பாராட்டிட்டு போவான்!

உள்ள இருக்குற அந்த அவனுக்கு நான் வைச்ச பேருதான்

''ஜீவன்''

இப்போ அவன் உதவி தேவை படுது சிகரெட் புடிக்கணும் அப்படின்னு என்னத்த தூண்டுற ''சைத்தான்'' எனக்குள்ள புகுந்து இருக்குது. அந்த சைத்தான தோக்கடிக்கனும் .

நான் ஜெயிக்கிறேனா இல்லையா அப்படிங்கிறத எனக்குள்ள அவன் கவனமா கவனிக்கிறான்.



''சிகரெட் புடிக்கணும் அப்படிங்கிற எண்ணத்த தூண்டுற
அந்த சைத்தான ஒவ்வொரு வினாடியும் சவாலுடன்
சந்திப்பது அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்

இதுக்கு எனக்குள்ள இருக்குற ''அவன்தான்''
நடுவர்.


முதல் நாள் ஒன்னும் முடியல ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருந்துட்டேன்.ரெண்டு நாள் மூணு நாள் போச்சு சிகரெட் புடிக்கல!சமயத்துல அந்த சைத்தான் பெரும் பலத்தோட வருவது போல இருக்கும் என் மனைவி குழந்தைய நினைச்சுக்குவேன், அந்த சைத்தான் இருந்த இடம் தெரியாம போய்டுவான்.உள்ள இருக்குற அவன் கைதட்டி பாராட்டுறான்.

இப்போ எனக்கு இருக்குற அடுத்த பிரச்சனை என் நண்பர்கள்! அவங்க எல்லோரும் சிகரெட் புடிக்கிறவங்க . நான் நினைக்கிறேன் அவர்களை
பார்ப்பதை தவிர்த்து விடலாம்னு,ஆனா உள்ள இருக்குற அவன் சொல்லுறான் சிகரெட் புடிக்கிறவங்க கூடவே இருக்கணும் ஆனா சிகரெட் புடிக்காம வரணும் அப்படின்னு!

நண்பர்கள் இருக்குற எடத்துக்கு போறேன் வழக்கம் போல சிகரெட் எடுத்து கொடுக்குறாங்க வேணாம் விட்டுட்டேன் அப்படின்னு சொல்லுறேன்!கிண்டலா ஒரு பார்வை நம்ம செட்டுலையே அதிகம் தம் அடிக்கிறது நீதான் உன்னால எல்லாம் விட முடியாது மிஞ்சி மிஞ்சி போனா ஒரு பத்துநாள் அடிக்காம இருப்பே அப்புறம் முடியாது எத்தன பேர பார்த்து இருப்போம்.

ச்சே! நம்மள பத்தி எவ்ளோ சீப்பா எடை போட்டு இருக்காங்க! அதுகூட நமக்கு உதவியாத்தான் இருக்கு.


ஆச்சு!வாரங்கள்போச்சு! மாதங்கள்போச்சு!

அந்த சைத்தான சாகடிச்சு சமாதி வைச்சு நாலு வருஷம் ஆச்சு என் வாழ்க்கைல நான் செய்ஞ்ச சாதனையா நினைக்கிறேன். இனிமே இந்த ஜென்மத்துல நான் சிகரெட் புடிக்க போறது இல்ல அது நிச்சயம்!


(குறிப்பு :என்னைவிட அதிகமா சிகரெட் புடிச்சவங்கள நான் பார்த்து இல்ல என்னாலேயே சிகரெட்ட விட முடியும்னா விடணும்னு நினைக்கிற எல்லோராலையும் கண்டிப்பா முடியும் )

>