நான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன்? எப்படி ?

நான் புகை பிடிக்க ஆரம்பித்ததையும் பிறகு
அந்த பழக்கத்தை விட்டதையும் பத்தி
சொல்லுறேன் ஆங்காங்கே கொஞ்சம்
சுய புராணம் இருந்தா கொஞ்சம் பொறுத்துக்கங்க.

நான் முதன் முதலா சிகரெட் புடிக்க ஆரம்பிச்சது
கோயம்புத்தூர்ல. நம்ம நகை தொழில கத்துகிட்டு
அங்கேயே மூணு வருஷம் வேலை செய்ஞ்சுகிட்டு
இருந்தேன்.ஆரம்பத்துல ஒன்னு,ரெண்டுன்னு
சிகரெட் புடிக்க ஆரம்பிச்சு அப்புறம் நல்லா
முன்னேறி ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்
அளவுக்கு சிகரெட் புடிக்க ஆரம்பிச்சேன்.


அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு சொந்த ஊர்
வந்து ஊர்ல வேலை.நான் வந்து ஒரு கிரிக்கெட்
பிளேயர்.கிரிக்கெட்ல பாஸ்ட் பவுலர். நெறைய
மேட்ச் ஆடி இருக்கேன்.இப்போ சிகரெட் புடிக்க
ஆரம்பிச்ச பிறகு பழைய வேகமும்,துல்லியமும்
இல்லாதது நல்லா தெரிஞ்சது.கண்டிப்பா அதுக்கு
சிகரெட் தான் காரணம்.அப்போ நெனைச்சுகிட்டேன்
''மொதல்ல இந்த சிகரெட்ட நிறுத்தனும்''

ஒரு ரெண்டு நாள் சிகரெட் புடிக்கல அப்புறம்
என்கூட விளையாடுற எல்லோருமே சிகரெட்
புடிச்சாங்க சிகரெட் புடிக்காம இருக்க முடியல
பழைய படி ஆரம்பிச்சுட்டேன்.

ஊர்ல வேலை அதிகமில்ல, வறுமையும்
பொருளாதார தேவையும் நம்மள சென்னைல
கொண்டுவந்து போட்டுச்சி.

சென்னைல கொஞ்சநாள் சரியா தொழில் அமையாம
இருந்தது.அப்புறம் கடவுள் கண்ண தொறக்கவே,
தனியா கடை வைச்சு நல்லா பிக் அப் ஆச்சு!
சிகரெட் ஒரு பாக்கெட் ரெண்டு பாக்கெட் ஆச்சு.

இப்போ நல்லா பெரிய கடை புடிக்கிற அளவுக்கு
முன்னேற்றம்.கடைல சிகரெட் புடிகிரதுக்காகவே
ஒருஎடம் ஆஷ்ட்ரே எல்லாம் வைச்சு செட்
பண்ணி இருந்தேன் அப்பப்போ ''தண்ணி'' வேற!

கொஞ்ச வருஷம் போச்சு வீட்டுல பொண்ணு
பாக்க ஆரம்பிச்சாங்க, கல்யாணமும் ஆச்சு!
தங்க மணி வந்து முதல்ல தங்க மணியாதான்
இருந்துச்சி அப்புறம்தான் ''சிங்க மணி'' ஆச்சு!

அதும் எவ்வளவோ சொல்லி பார்த்துச்சி நாம
யாரு? சிங்கத்துக்கே டிமிக்கி கொடுப்போம்ல!ஒருநாள் சிங்க மணி வந்து ஏங்க ''வாழ்வே மாயம்''
படம் பார்த்தீங்களா? அதுல சிகரெட் புடிச்சு கமலுக்கு
கடைசில என்னாகுது பார்தீங்களா?(திருத்துராங்கலாம்)
இப்போ கமலுக்கு என்னாச்சி? நல்லாதானே இருக்காரு
அப்படிண்ணு நான் சொன்னதும் கடுப்பாயி போச்சு!

சரியா ஒரு வருசத்துல பொண்ணு பொறந்தது!

குட்டி போட்ட பூனையாட்டம் ஆஸ்பத்திரிய
சுத்தி சுத்தி வரேன் (குட்டிபோட்ட பூனை உண்மை தானே)
எல்லாம் சொல்லுவாங்க குழந்தை நம்ம முகத்த
நல்லா பார்க்க ரெண்டு,மூணு நாள் ஆகும் அப்படின்னு
ஆனா என் பொண்ணு மறுநாளே என் முகத்த
நல்லா பார்த்து நல்லா ஒரு சிரிப்பு சிரிச்சது
பாருங்க! என் வாழ்நாள்ல கண்ட மிக சிறந்த
காட்சி அதுதான் அப்படியே சொக்கி போயிட்டேன்.

என் பொண்ணு சிரிச்ச அந்த சிரிப்புல என்னைய
அப்படியே சுத்திகரிச்துபோல ஆச்சு! என்னோட
தீவினையெல்லாம் அழிஞ்சு ஒரு சுத்தமான
மனுசனா மாறுனதுபோல ஒரு உணர்வு!

ஆஸ்பிட்டல் வாசல்ல நின்னு ஒரு தம் அடிச்சுகிட்டே
நினைச்சு பார்க்குறேன். ஒரு நிறைவு,மகிழ்ச்சி,சந்தோசம்
உற்சாகம் வேற என்ன நல்ல விஷயங்கள் இருக்கோ அது
எல்லாம் ஒன்னா சேர்ந்து எனக்கு கிடைச்ச மாதிரி இருக்கு.

சரி,இப்போ குழந்தை வளர்ந்து கிட்டு வருது. நான்
சிகரெட் புடிக்கிறதும் அதிகமாகுது.

ஒரு வருஷம் போகுது, குழந்தைக்கு முடி எறக்கணும்
எங்க ஊருலதான் முடி எறக்கணும்.எங்க ஊருக்கு
பக்கத்துல அத்திவெட்டி அப்படின்னு ஒரு ஊரு இருக்கு
அங்க ''பெரிய சாமி''கோயில் இருக்கு அங்கதான் நாங்க
பரம்பரையா முடி ஏறக்குறது எனக்கும் அங்கதான்
முடி எறக்குனது.

முடி எறக்கிட்டு எங்க ஊருல இருந்து சென்னைக்கு
கிளம்புறோம் அப்போ சில பேரு ஒரே பரபரப்பா
பேசிகிட்டு இருக்காங்க.

என்னன்னா? யாரோ செத்து போய்ட்டாங்களாம்
பக்கத்து ஊருல சத்துணவு அமைப்பாளரா வேல செய்தவராம்.

ரெண்டு பேரு பேசிக்கிட்டு போறாங்க!


பாருப்பா அவனுக்கு முப்பதிரெண்டு வயசுதான் ஆகுது
திடீர்னு போய்ட்டான் ! ''ஹார்ட் அட்டாக்காம்''ஓவரா

தண்ணி அடிப்பானாம் சிகரெட்டா ஊதி தள்ளுவானாம்
கல்யாணமாகி ரெண்டு வருசம்தான் ஆகுது,எட்டு மாசத்துல
புள்ள ஒன்னு இருக்கு இப்படி அநியாயமா உட்டுட்டு
போய்ட்டானே பாவிப்பய !


சென்னைக்கு வந்துட்டோம்!
ரெண்டு நாள் போயிருக்கும் ஒரு கனவு

அடுத்த வரிகள எழுதும் போது ஒரு வலியோடுதான்
எழுதுறேன்!
அந்த கனவு ......

நல்ல வெயில் அடிக்குது அந்த வெயில்ல
என் மனைவி வேர்க்க விருவிருக்க நடந்து
போகுது.கிட்ட போய் பார்க்குறேன் கழுத்துல
தாலி இல்ல போட்டு பூ ஏதும் இல்லாம விதவை
கோலத்துல என் அன்பு மனைவி!இடுப்புல
என் செல்வ மகள் பசித்த முகம் கன்னமெல்லாம்
வத்திபோய் ஏக்கமான பார்வையோடு....


ஐயோ! திடுக்குன்னு முழிச்சு பார்க்குறேன் ரெண்டு பேரும்
நல்லா தூங்குறாங்க.

மனசு முழுக்க பயம்! பயம்! பயம்!


தூக்கமே வரல எப்போ தூங்கினேனோ தெரியல!

காலைல யார் கிட்டயும் ஒன்னும் சொல்லல!

''சிகரெட் புடிக்கிறத நிறுத்தனும்''

(ஒரு விஷயம் சிகரெட் புடிக்கிறத நிறுத்துரதால
நான் நூறு வருஷம் வாழ்ந்து விடுவேன்னு சொல்லல!
சாவு எப்படி வேணும்னாலும் வரலாம் ஆனா, சிகரெட்
புடிக்கிரதால நாமே சாவ நோக்கி போறதா நினைச்சேன்
அதோட சிகரெட் புடிக்கிரதால திடீர் மரணம் ஏற்படலாம்
அப்படின்னு பயந்தேன் )

கடைல வந்து உக்காந்து யோசிக்கிறேன் கிட்ட தட்ட
பத்து வருசமா சிகரெட் புடிக்கிறேன் எப்படி நிறுத்த!

என்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம் ஒன்னு இருக்கு!

நான் வந்து பால குமாரனோட தீவிர பக்தன் அப்படின்னு
சொல்லலாம் .நெறைய விசயங்கள அவர் சொன்ன படி
கடை பிடிக்கிறேன் .

அதுல ஒன்னு ''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

எனக்கு கடைல அதிக வேலை இருந்தா இத எப்படி
செய்றேன் பார் அப்படின்னு எனக்குள்ளேயே ஒரு
சவால் விட்டுக்குவேன் என் உள்ளேயே ஒருவன்
அத வேடிக்கை பார்க்குரதுபோல நினைச்சுக்குவேன்.

அந்த வேலைல நான் ஜெயிச்சுட்டா உள்ள இருக்குற
அவன் வந்து பாராட்டிட்டு போவான்!

உள்ள இருக்குற அந்த அவனுக்கு நான் வைச்ச பேருதான்
''ஜீவன்''

இப்போ அவன் உதவி தேவை படுது
சிகரெட் புடிக்கணும்
அப்படின்னு என்னத்த தூண்டுற ''சைத்தான்'' எனக்குள்ள
புகுந்து இருக்குது. அந்த சைத்தான தோக்கடிக்கனும் .

நான் ஜெயிக்கிறேனா இல்லையா அப்படிங்கிறத
எனக்குள்ள அவன் கவனமா கவனிக்கிறான்.''சிகரெட் புடிக்கணும் அப்படிங்கிற எண்ணத்த தூண்டுற
அந்த சைத்தான ஒவ்வொரு வினாடியும் சவாலுடன்
சந்திப்பது அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்

இதுக்கு எனக்குள்ள இருக்குற ''அவன்தான்''
நடுவர்.


முதல் நாள் ஒன்னும் முடியல ரொம்ப கஷ்ட்டப்பட்டு
இருந்துட்டேன்.ரெண்டு நாள் மூணு நாள் போச்சு
சிகரெட் புடிக்கல!சமயத்துல அந்த சைத்தான் பெரும்
பலத்தோட வருவது போல இருக்கும் என் மனைவி
குழந்தைய நினைச்சுக்குவேன், அந்த சைத்தான்
இருந்த இடம் தெரியாம போய்டுவான்.உள்ள
இருக்குற அவன் கைதட்டி பாராட்டுறான்.

இப்போ எனக்கு இருக்குற அடுத்த பிரச்சனை
என் நண்பர்கள்! அவங்க எல்லோரும் சிகரெட்
புடிக்கிறவங்க . நான் நினைக்கிறேன் அவர்களை
பார்ப்பதை தவிர்த்து விடலாம்னு,ஆனா உள்ள
இருக்குற அவன் சொல்லுறான் சிகரெட் புடிக்கிறவங்க
கூடவே இருக்கணும் ஆனா சிகரெட் புடிக்காம வரணும்
அப்படின்னு!

நண்பர்கள் இருக்குற எடத்துக்கு போறேன் வழக்கம்
போல சிகரெட் எடுத்து கொடுக்குறாங்க வேணாம்
விட்டுட்டேன் அப்படின்னு சொல்லுறேன்!கிண்டலா
ஒரு பார்வை நம்ம செட்டுலையே அதிகம் தம்
அடிக்கிறது நீதான் உன்னால எல்லாம் விட முடியாது
மிஞ்சி மிஞ்சி போனா ஒரு பத்துநாள் அடிக்காம இருப்பே
அப்புறம் முடியாது எத்தன பேர பார்த்து இருப்போம்.

ச்சே! நம்மள பத்தி எவ்ளோ சீப்பா எடை போட்டு
இருக்காங்க! அதுகூட நமக்கு உதவியாத்தான்
இருக்கு.


ஆச்சு!வாரங்கள்போச்சு! மாதங்கள்போச்சு!

அந்த சைத்தான சாகடிச்சு சமாதி வைச்சு நாலு
வருஷம் ஆச்சு என் வாழ்க்கைல நான் செய்ஞ்ச
சாதனையா நினைக்கிறேன்.
இனிமே இந்த ஜென்மத்துல நான் சிகரெட் புடிக்க போறது இல்ல
அது நிச்சயம்!


(குறிப்பு :என்னைவிட அதிகமா சிகரெட் புடிச்சவங்கள
நான் பார்த்து இல்ல என்னாலேயே சிகரெட்ட விட
முடியும்னா விடணும்னு நினைக்கிற எல்லோராலையும்
கண்டிப்பா முடியும் )
>