மிளகாய்ச் செடி


அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும்.எங்க வீடும் எங்க சித்தப்பா வீடும் பக்கத்து பக்கத்து வீடு. ரெண்டு வீட்டுக்குமா சேர்த்து வேலி போட்டு இருந்தாங்க. கிலுவை முள்ளு வேலி.(கிலுவை.எங்க ஊருபக்கம் வேலி அமைப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு தாவர இனம் ).

எங்க வீடு முதல்ல இருக்கும், எங்க சித்தப்பா வீடு அடுத்து இருக்கும். நாலு பக்கமும் வேலி. ஆனா வெளில போறதுக்கு கேட் வந்து எங்க சித்தப்பா வீட்டு வாசல் கிட்ட இருக்கும்.எங்க வீட்டு வாசல் வேலிய பார்த்த மாதிரி இருக்கும்.

ஒருவாட்டி நான் ஒரு மிளகாய்செடிய பாத்தேன்.அத அப்படியே புடிங்கி கொண்டாந்து, வீட்டு வாசல்ல வேலி ஓரமா ஒரு அருவாள எடுத்து குழி பறிச்சு நட்டு வச்சுட்டேன்.

காலைல எந்திரிச்சதும் முதல் வேல, மிளகாய் செடிக்கு தண்ணி ஊத்துரதுதான்.ரெண்டுநாள்ல செடி நல்லா துளிர்த்துக்குச்சி.அதே போல ஸ்கூல் விட்டு வந்தா உடனே செடிக்கு தண்ணிதான்.நெறைய தண்ணி ஊத்தினா செடி அழுகிடும்னு எங்கம்மா திட்டும்.நான் கேக்காம நெறைய தண்ணி ஊத்துவேன். செடிக்கு உரம் எல்லாம் போட்டு வளர்த்தேன்.மாட்டு சாணிதான் உரம் அப்புறம் கொஞ்சம் காப்பித்தூள்.

ஒருநாள் காலைல வாசல் கூட்ட போன எங்கம்மா,டேய், உன் மிளகாய் செடில மொட்டு விட்டுருக்குடா!ன்னாங்க, அடிச்சு,புடிச்சுகிட்டு எந்திரிச்சு ஓடிபோய் பார்க்குறேன் கடுகு சைஸ்ல மொட்டு விட்டுருந்தது.எனக்கு சந்தோசம் தாங்கல!

மொட்டு விட்டத பார்க்க கூடவே என் தம்பியும்,தங்கச்சியும் வந்துட்டாங்க!

நான் உடனே ரெண்டுபேர் கிட்டயும் சொல்லுறேன் யாராவது செடிய தொட்டிங்க?அவ்ளோதான் யாரும் செடிய தொடக்கூடாது சரியா ? ரெண்டும் சரின்னு தலைய ஆட்டுதுங்க.

மொட்டு விட்டதுல அதுங்களுக்கும் சந்தோசம். அவங்கள தொட கூடாதுன்னு சொல்லிட்டு ஆர்வ கோளாறுல மொட்ட தொட்டு தொட்டு பார்க்குறேன்.அன்னிக்கு ஸ்கூல் போகவே மனசுஇல்ல.ஸ்கூல் அதே நெனைப்புதான்.ஸ்கூல் விட்டதும் நேரா செடி கிட்டதான். மொட்டு கொஞ்சம் பெருசானது போல இருக்கு இப்போதும் மெதுவா தொட்டு பார்க்குறேன்.எங்கம்மா திட்டுறாங்க,மொட்ட தொட்டின்னா கருகி கீழ விழுந்துடும் ஆமா சொல்லிட்டேன் . மறுநாள் காலைல சீக்கிரமே எந்திரிச்சுட்டேன்,மொட்டு இன்னும் கொஞ்சம் பெருசனதுபோல இருக்கு தண்ணி ஊத்திட்டு ஆசைல மொட்ட தொட்டு பார்க்குறேன்.


சாயங்காலம் ஸ்கூல் இருந்து வந்து பார்க்குறேன் செடில மொட்ட காணூம் எனக்கு அழுகாத குறைதான் எங்கம்மா கிட்ட கேட்டா மொட்ட தொடாதேன்னு சொன்னேனே கேட்டியா ? கீழ விழுந்துடிச்சு அப்படின்னாங்க.
என்'' மூஞ்சிய பார்த்து'' வேற மொட்டு வரும் அத தொடாதன்னு சொன்னாங்க!


அப்போதான் என் அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் பெரிய சண்டை. சண்டைக்கு சொத்து பிரச்சினையாம் காரணம்.சண்டை பெருசாகி பஞ்சாயத்து வரை போய்டுச்சி. அப்புறம் எங்கப்பா இனிமே நாம இங்க இருக்க வேணாம்னு சொல்லிட்டு வேற வீடு வாங்கிட்டாரு நானும் என் மிளகாய் செடிய விட்டுட்டு வந்துட்டேன்.சித்தப்பா வீட்டோட சுத்தமா பேச்சு வார்த்தை கூட இல்ல.வேற வீட்டுக்கு வந்தோன நானும் எல்லாம் மறந்துட்டேன் .கொஞ்ச நாள் கழிச்சு எங்க சித்தப்பா வீட்டுக்கு எதிர் வீட்டு பாட்டி செத்து போய்ட்டாங்க! சாவுக்கு எல்லாரும் போகணும், எங்கப்பா யாரும் அவன்வீட்டுக்கு (சித்தப்பா) போக்குடாது அப்படின்னு கண்டிசன் போட்டு கூட்டிகிட்டு போறாரு!

சாவுக்கு போயிட்டு திரும்பும்போது! பார்க்குறேன் !

அந்த கிலுவை வேலி ஓரமா! ஆசையா ,நான் வச்ச! என் மிளகாய் செடில!

அழகா நாலைஞ்சு மிளகாய் காய்ச்சு இருக்கு!

அத வேலிக்கு வெளிய நின்னு பார்க்குறேன்! அங்க ஏன்டா நிக்குற வாடா எங்கப்பா அதட்டவே ஓடிட்டேன் !

(அந்த பதினோரு வயசு சிறுவனின் மன வேதனையை உங்களால உணர முடியுதா? )

-மீள் பதிவு->

32 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதே மாதிரி தக்காளி, மிளகாய் எல்லாம் நாங்களும்பாத்து பாத்து தொட்டியில் வளர்திருக்கோம்.. சின்னவயசில். சுட்டுவிரலால் சுட்டிக்காட்டக்கூடக் கூடாதுன்னுசொல்வாங்க அம்மா..

இப்பயும் நான் மிளகாய் போட்டேன் . ஆனால் பூச்சி வந்து இலையெல்லாம் சுருங்கிடுச்சு.. அந்தபூக்களூம் உதிர்ந்திட்டே இருக்கு.. :(

KALYANARAMAN RAGHAVAN said...

ஒரு சிறுவனின் மன நிலையை பெரியவனான பின்பு அப்படியே கொண்டு வந்துள்ளீர்கள். அருமையான பதிவு.

ரேகா ராகவன்.

நட்புடன் ஜமால் said...

கிலுவை.எங்க ஊருபக்கம் வேலி அமைப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு தாவர இனம்]]

அருமை - நான் பல முறை சாப்பிட்டு இருக்கேன் ...

நட்புடன் ஜமால் said...

கணக்க வச்சிட்டீங்க கடைசீல ...

கதிர் - ஈரோடு said...

//"மிளகாய்ச் செடி//

இனிக்கிறது ஜீவன்

//கிலுவை முள்ளு வேலி//

கிலுவைக் குச்சி சாப்பிட்டுறிக்கீங்களா

அன்புடன் அருணா said...

நல்லாவே புரியுது....

S.A. நவாஸுதீன் said...

அந்த வயதின் மனநிலைக்கே கொண்டு போயிட்டீங்க தல.

கிலுவை (கொழுந்து) இலை நிரைய சாப்பிட்டுருக்கேன் நான்.

வானம்பாடிகள் said...

நல்லா உணர முடியுது. ஜீவனுள்ள நடையில்லையா. பாராட்டுக்கள்.

ஹேமா said...

மனதை அழுத்தி உதைத்து எறியும் வேதனை ஜீவன்.நானும் அனுபவித்திருக்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

சமீபத்தில் நான் படித்த பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது.

வால்பையன் said...

அந்த மிளகாய் கண்டிப்பாக உங்களுக்கு இனிக்கும்!

வெண்ணிற இரவுகள்....! said...

உங்கள் பதிவில் உயிர் வலி உள்ளது என்னால் உணர முடிகிறது ....................

பதிவு நன்றாக இருக்கிறது ஆனால் வலி உண்டாக்கும் பதிவு வாழ்த்து சொல்ல முடியவில்லை

RAMYA said...

இது மீள் பதிவு இல்லையா ஜீவன்?

இதை அன்று படிக்கும் போது எப்படி மனது கனத்துப் போச்சோ
அதே உணர்வுதான் இன்று படிக்கும் போதும் ஏற்பட்டது.

அந்த பிஞ்சு மனசின் ஆசை.. ஆர்வம்.. அருமை ஜீவன் :)

இராகவன் நைஜிரியா said...

அறிஞ்சர் அண்ணா அவர்களின் செவ்வாழை கதை நினைவுக்கு வருகின்றதுங்க.

கலங்க அடிச்சுட்டீங்க...

லவ்டேல் மேடி said...

அருமை... அருமை.... உணர்வுகள் அனைத்தும் கதையினும் ஒன்றியது அப்படியே....!!


அருமையான பதிவு கேப்டன்ஜி...!!

அ.மு.செய்யது said...

இது சிறுகதையா ?? அனுபவமா ??? நெஞ்சில் நிற்கும் பதிவு ஜீவன்..அருமை.

அ.மு.செய்யது said...

இதே மாதிரி நானும் எங்க மாமா பொண்ணும் சேர்ந்து கடுகு வெந்தயம் போட்டு செடி வளத்திருக்கோம்.
அப்பலாம் அந்த செடி துளிர் விடும் போது சந்தோஷம் சொல்லி மாளாது...

கக்கு - மாணிக்கம் said...

எல்லாமே அழகுதான் சுவைதான். அது சரி ..... //கிளுவை வேலி, சொத்து சண்டை .//
மதுக்கூர்... சரிதான் ,கும்பகோணம் மதுக்கூர் தானே ?? வேறு மதுக்கூர் இருப்பதாக தெரியாது. மொத்தத்தில் ..... மண்ணின் மனம் வேரனென்ன சொல்ல??

Mrs.Menagasathia said...

நீங்க எவ்வளவு வேதனை அடைந்திருப்பிங்கன்னு புரியுது.....

பிரியமுடன்...வசந்த் said...

நான் மொளகுதக்காளியுடன் இம்மாதிரி இனங்கொள்ளா பாச உறவு கொண்டதுண்டு....

ஈ ரா said...

//மாட்டு சாணிதான் உரம் அப்புறம் கொஞ்சம் காப்பித்தூள்.//

இதைப் போன்ற உரங்களை நானும் போட்டுப்பார்த்திருக்கிறேன்.. ஒரு தாவரம் வளர நீர் ஊற்றுதல் மனதிற்கு மிகவும் திருப்தியையும், அமைதியையும் அதைவிட ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும் தரும்.. இதை அனுபவித்து ரசித்து இருக்கிறீர்கள்..

பரவாயில்லை உங்கள் சித்தப்பாவிற்கு நீங்கள் கொடுத்த பரிசாக இருக்கட்டும்...

ஈ ரா said...

தங்களின் "நூறாவது" பால்லோயர் நான்.....வாழ்த்துக்கள்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நெஞ்சை விட்டு மீளாத பதிவு :)

sanjeevi said...

எத்தனை பள்ளிக்கூடங்களும் பாண்டவர் பூமிகளும் வந்தாலும் நமது சிறு வயது அனுபவங்களை அசை போடுவதிலும் பகிர்ந்து கொள்ளுவதிலும் கிடைக்கும் சுகமே தனி தான்!! அனைவர் வாழ்விலும் இதுபோல் ஏதேனும் நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இருக்கும்!! எங்களுக்கும் ஒரு வாய்பளித்தமைக்கு மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!

இறக்குவானை நிர்ஷன் said...

மனதை இறுக்கமாக்கிய அனுபவப் பகிர்வு.

கடைசியில் மனம் வெறுமையடைகிறது

சி. கருணாகரசு said...

நல்ல பதிவுங்க ஜீவன். தங்களின் உணர்வில் நெகிழ்ந்தேன்.

மாதேவி said...

"மிளகாய் செடி" சிறுவனின் ஏக்கம் நெகிழ்கிறது.

க.பாலாஜி said...

இந்த கிலுவை மரம் பத்தி இப்பதான் யோசிக்கிறேன். ஆமா அப்படி ஒன்னு இருக்குதுல்லன்னு. ரொம்ப நாளாச்சி மறந்தே போயிட்டேன்.

தாங்கள் வைச்ச மிளகாய் செடியை பத்தி ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க... பாத்தீங்களா நீங்க பகையாளிய நினைகிற உங்க சித்தப்பாவ அந்த மிளகாய் செடி தன்னோட காரத்தால பழிவாங்கிகிட்டு இருக்கு....

கண்டிப்பாக அந்த சிறுவயதின் தவிப்பு உங்களின் இடுகையின் மூலம் உணர முடிகிறது....

கவிதை(கள்) said...

நெகிழவைக்கும் பதிவு.

வாழ்த்துக்கள்

விஜய்

கல்யாணி சுரேஷ் said...

நல்லா இருக்குங்க.

அபுஅஃப்ஸர் said...

சொந்(த்)த பிரச்சினைகளில் இந்த உண்ர்வுகளுக்கு எங்கே மதிப்பு இருக்கிறது

நெஞ்ச தொட்ட பதிவு

Anonymous said...

வேதனை என்ன வேதனை? வேணாம் என்ற வேலையை செய்தால் இப்படி தான் துடுக்கு பயபுள்ள.....