மரமாய் ஒரு முறை பிறக்க வேண்டும்..!



மரமாய் ஒரு பிறவி எடுக்க வேண்டும்..! சாலை ஓரத்தில் நதிக்கரையில் தழைத்து,கிளைத்து ஓங்கி வளர்ந்து நிற்க வேண்டும்..! நதியிடம் நட்பு கொள்ள வேண்டும்.  ஒன்றிரண்டு கிளைகளை நதிநீரில் நனைத்த படி நட்பு வளர்க்க வேண்டும். நதிநீரில் பூக்களை உதிர்த்து அந்த பூக்கள் நதி நீரில் மிதந்து செல்வதை பார்த்து ரசிக்க வேண்டும்..

சிறுவர்,சிறுமியர் என் கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்து என்னையும் மகிழ்விக்க வேண்டும். விடலை பயல்கள் என் கிளைகளில் ஏறி நதியில் குதித்து குளித்து நீந்திகரை சேர்ந்து மீண்டும் மீண்டும் ஏறி குதிக்க வேண்டும்.

கிளைகள் முழுவதிலும் பறவைகள் கூடுகட்டி வசிக்க வேண்டும். பறவைகளின் கீச்சு கீச்சு சத்தம்  சங்கீதமாய் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும். 


சாலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் மீது பூக்களை உதிர்த்து அவர்களை குஷி படுத்த வேண்டும்.
நெடுந்தொலைவில் இருந்து களைத்து வரும் வழிப்போக்கர்கள் நதியில்  தாகம்  தணித்து கனிகளை உண்டு பசியாறி  என் நிழலில் உறங்கி களைப்பாற வேண்டும்.
சிறுவர்,சிறுமியராய் நான் கண்டவர்கள் வளர்ந்து வாலிபமெய்தி மணம் முடித்து செல்லும்போது அவர்களை காணும்  சுகம் சொல்லி மாளாது..! இதோ  இந்த மரத்தில்தான்  ஊஞ்சல் கட்டி ஆடினேன்...  இதோ   இந்த கிளையில் இருந்து தான் குதித்து குளிப்பேன்  என அவர்கள்  தங்கள்  இணையிடம் விவரிக்கும் போது   என் மனம்  எல்லையில்லா குதூகலம்  அடையும்..!

இப்படியாக பல தலைமுறை கண்டு.. வாரிசு மரங்கள் பல வளர்ந்த பிறகு...!  கொஞ்சம் கொஞ்சமாக  வைரம் பாய்ந்து மரிக்க வேண்டும் ..!  முழுவதும் மரித்த பிறகு சிறு கிளைகள் விறகாக...பெரும் கிளைகள் உத்திரங்களாகவும்,தூண்களாகவும்,வீட்டு பாதுகாப்புக்கு கதவுகளாகவும் உலகம் இருக்கும்  வரை யாருக்கேனும் உதவும் பொருளாகவே இறுதிவரை இருக்க வேண்டும்..!

>

கருவேல மனம்...!

இப்போ இந்த இடத்த  விக்காட்டி என்ன..?

அதான்  நல்ல விலை போகுதுல்ல வித்துடலாம்..!

இல்ல அமுதன் மெட்ராஸ்ல சம்பாதிச்சு சொந்த  ஊர்ல ஒரு இடம் வாங்கி போட்டு இருக்கான்னு ஒரு பேரு..! இப்போ  இத  வித்தா  எதோ கடன் ஆயிட்டான் அதான் விக்கிறான்னு ஊர்ல சொல்லுவாங்க..!-- இடத்தை விற்காமல் செய்ய ஆனந்தன் வாதாடினான்..!

அட நீ வேற இதெல்லாம் பாத்தா ஆகுமா..? மொதல்ல நான் ஊர்ல இடம் வாங்கினதே தப்பு  எதோ ஊர் பாசத்துல வாங்கிட்டேன்  இதே மெட்ராஸ் பக்கம் ஒரு கால் கிரவுண்டு வாங்கி போட்டு இருந்தாலே போதும் இப்போ  விலை எங்கேயோ போய் இருக்கும்.! 2 லட்ச ரூபாய்க்கு வாங்கி 8 லட்சத்துக்கு விக்கிறேன்..! இத வாங்கினதே ஒரு முதலீட்டுக்காக தானே இங்க வந்து என்ன வீடாகட்ட போறோம் ..!

இடத்த விக்கிறதுல உனக்கு வருத்தமே இல்லையா..?

கொஞ்சம் கூட இல்ல அதோட  எனக்கு இந்த தொகை  ஒரு முக்கிய தேவைக்கு உதவுது அதுல எனக்கு சந்தோசம்தான்..! 

மஞ்சள் நிறத்தில் பூப்பூத்து இருந்த அந்த சீமை கருவேல மரத்தடியில் நின்று தான் பேசிகொண்டுஇருந்தோம். இந்த இடத்தை நான் வாங்கிய போதே நாலடி உயரத்தில் கருங்கற்கள் நட்டு முள்கம்பி  வேலி இருந்தது. இந்த ஒரு கருவேல மரமும் இருந்தது..! இப்போது  முள் கம்பிகள் எதும் இல்லை வெறும் நாலடிகருங்கல் மட்டும் 15,16 எண்ணிக்கையில் இருந்தது..!


இடத்தை விற்று  கிட்ட தட்ட முழுபணமும் வாங்கியாயிற்று... கொஞ்சம் மட்டும் மீதி...!  இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் அளக்க ஆள் வரும்போது வர சொல்லி இருந்தார்கள்..!

போனேன்..!
 இடத்தை பார்த்தால் நிறைய மாறுபாடு தெரிந்தது..! சுற்றி இருந்த கருங்கற்களை காணவில்லை ..!அந்த கருவேலமரம் தரையோடு வெட்ட பட்டு கிடந்தது..! 

ஏன் மரத்த  வெட்டுனாங்க.. கருங்கல்  எல்லாம்  எங்கே..?  நான் கேட்க ..? 
ஆனந்தன் விளக்கினான் ..! நாம இடத்த  வித்தது ஒரு புரோக்கர் கிட்ட அவர் வேற ஆள் கிட்ட விக்கிறதுக்கு முன்னாடி இந்த இடத்துல என்ன என்ன எல்லாம் தேறுதோ  அதை எல்லாம் எடுத்துகிட்டாரு..!

சரி இந்த மரம் என்னத்துக்கு ஆக போகுது.. அதை ஏன் வெட்டினாங்க..?

ஏனா..? விறகுக்கு ஆனால் கூட லாபம்தானே..?

என்னது  விறகுக்கா..!

அளந்து முடித்தார்கள் ...!

கிளம்பும் போது ..!  இடத்தில்  ஒரு மூலையில்  இத்தனை நிழலாய் நின்றிருந்த கருவேல மரம் வெட்ட பட்டு பிணமாய் கிடந்த போதுதான் மனதில் ஒரு முள்..!! 
இடத்தை விற்காமல் இருந்திருக்கலாமோ..!


>