தூண்டில் போட்டு மீன் புடிக்கிறது ரொம்ப சுவாரஸ்யமான
விஷயம்.அப்போ நானும், கன்னையனும் தூண்டி போட
போவோம். கண்ணையன் வந்து என் சித்தப்பா வீட்டுக்கு
எதிர் வீடு. நான் எங்க சித்தப்பா வீட்டோட சண்டைனால,
அங்க போக மாட்டேன் நானும்,கன்னையனும் வெளில
மீட் பண்ணிக்குவோம் .
ஆடி மாசம் ஆத்துல புதுத்தண்ணி வரும்.அந்த தண்ணில
ஏரி,குளம் எல்லாம் நிரப்பிக்குவாங்க அப்போ மீனெல்லாம்
ஒன்னும் இருக்காது.அந்த புது தண்ணி வந்தோன!
விவசாய வேலைய ஆரம்பிப்பாங்க தண்ணி வந்து
ரெண்டு,மூணு மாசத்துல எங்க ஊரு நாத்து பறிக்கிறது;
நாத்து நடுறது அப்படின்னு ஊரே பச்சை பசேல்னு
ஆயிடும்.அப்போதான் கொக்குக எல்லாம் வந்து மேய
ஆரம்பிக்கும்.தூரத்துல இருந்து பார்த்தா வயல்ல கொக்கு
மேயிறது வந்து,பச்சை துணில வெள்ளை புள்ளி வைச்ச
மாதிரி இருக்கும்.கொக்குக மேயிறது கொள்ளை அழகு.
பட்டு பாவாடை தாவணிபோட்டு,தலைல மல்லிகை
பூவும்,கனகாம்பரமும் கலந்து வச்சு,நெத்தில
சந்தன போட்டு,அதுக்குகீழ கொஞ்சமா துன்னுரு
பூசி,காதுல குடை ஜிமிக்கி போட்டு,கைநெறைய
கண்ணாடி வளையல் போட்டு,கால்ல முழுக்க
சலங்கை வைச்ச கொலுசு போட்டு இந்த
லிப்ஸ்டிக் ஏதும் போடாம இயற்கையான அழகோட
இருக்குற ஒரு பொண்ண சைட் அடிச்சா எப்படி
மனசுல ஜில்லுன்னு இருக்கும் ?
அதுபோல தான் இருக்கும் இந்த, கொக்குக மேயிரத
வேடிக்கை பாக்குறதும்.
சரி சரி மேட்டருக்கு வாரேன்! நெல்லு அறுவடை எல்லாம்
முடிஞ்சு வயல்ல கடல,எள் இதெல்லாம் போடுவாங்க
குளம்,ஏரில எல்லாம் தண்ணி குறைய ஆரம்பிக்கும்.
அப்போதான் தூண்டிபோட போவோம்.எங்க வீட்டு
ஏரியாவ தாண்டி போனா, சின்னதா ஒரு ஆறு வரும்.
அந்த ஆத்தோட பேரு கல்யாண ஓடை கால்வாய்
அந்த ஆத்த தாண்டிபோனா, ஒரு செம்மண் ரோடு வரும்
ரோட்டுக்கு ரெண்டுபக்கமும் வயல்தான்.வயல்ல
கடலை ,எள் இதெல்லாம் போட்டு இருப்பாங்க அங்கங்க
மாடு மேய்ச்சுகிட்டு இருப்பாங்க.செம்மண் ரோடு வழியா
ஒரு கிலோமீட்டர் போனா ஏரி வந்துடும்.
எங்க ஊரு ஏரிய இப்போ நெனைச்சாலும் மனசு ரெக்கை கட்டி
பறக்குது.ஏரி பேரு விக்கிரமம் ஏரி ஏரி கரை ஓரத்துல வரிசையா
இலுப்ப மரங்களா இருக்கும்.மரங்க எல்லாம் கரைல சாய்ச்சி
வச்சது போல இருக்கும்.மர கிளைகள் எல்லாம் தண்ணில
நனைஞ்சபடி இருக்கும்.சின்ன பயலுவ எல்லாம் மரத்துல
ஏறி தண்ணில குதிப்பாணுவ நாங்களும்தான்!
சலவை கடை வைச்சு இருக்குறவங்க வழக்கமா அங்கதான்
துணி தொவைப்பாங்க!
சரி விசயத்துக்கு வர்றேன்....
தூண்டி முள்ளுல கோர்த்து விட மண்புழு வேணும்!
அழுக்கானசேத்துல தான் மண்புழு அதிகமா இருக்கும்.
மண்புழு எடுத்தாச்சு ஏரிக்கரை படிக்கட்டுல
உக்காந்துதான் தூண்டி போடுவோம்.
முள்ளுல மண்புழு வை கோர்த்து தண்ணில போட்டுட்டு
அந்த மெதக்குற தக்கைய வைச்ச கண்ணு வாங்காம
பார்த்துகிட்டே இருப்போம்.அந்த தக்கை லேசா அசைரத
பார்க்கவே செம திர்லிங்கா இருக்கும்.
லேசா அசையும் போது அவசர படக்கூடாது தக்கை
வந்து தண்ணிக்குள்ள முழுசா போகணும்.
இடது பக்கமா தக்கை போகும் போது, இடது பக்கமே
தூண்டி கம்ப ஒரு வெட்டு வெட்டி,வலது பக்கமா வெடுக்குன்னு
தூக்கணும் அப்போதான் மீன் மாட்டும்.
இப்போ பங்கு சந்தையில 100 ரூபாய்க்கு வாங்கின
பங்கு 101,102,1O3,104,105, அப்படி போனா மனசு
எப்படி இருக்கும்?
அப்படிதான் இருக்கும், தூண்டில மீன் மாட்டி அந்த
தக்கை தண்ணிக்குள்ள போகும்போதும்.
ஒருதடவ நாங்க தூண்டி போட்டப்போ மண்புழு
கலியாயிடுச்சி, தூண்டில தண்ணில போட்டுட்டு
கம்புமேல ஒரு செங்கல்ல எடுத்து வைச்சுட்டு
ரெண்டு பேரும் மண்புழு தோண்ட போய்ட்டோம்
திரும்பி வந்து பார்த்தா என் தூண்டிய காணும்!
தேடி பார்த்தா நடு தண்ணில என் தூண்டி கம்பு
மெதந்து போயிட்டு இருக்கு எதோ ஒரு பெரிய மீன்
மாட்டி இழுத்துகிட்டு போகுது,என்ன பண்ணுறதுன்னு
யோசிக்கிறதுக்குள்ள கண்ணையன் சட்டைய
கழட்டிட்டு தண்ணிக்குள்ள குதிச்சுட்டான்.
வேகமா நீச்சல் அடிச்சு போய் தூண்டி கம்ப
புடிச்சுட்டான் புடிச்சு இழுத்துகிட்டு வர தினறுரான்.
வேணாம் கண்ணையா!!விட்டுட்டு வந்துடுன்னு
கத்துறேன்! கேக்காம புடிச்சு இழுத்துகிட்டு வர்றான்
எனக்கும் ஆர்வம் அதுல என்ன மீன் மாட்டி இருக்குன்னு
பார்க்க கண்டிப்பா பெரிய விரா மீன் தான் மாட்டி
இருக்கணும்னு நினைச்சேன்.கரைகிட்ட வந்துட்டான்
படிக்கட்டுல எறங்கி அவன் கைய புடிசுகிட்டேன் .
இன்னொரு கையால தூண்டிகம்ப புடிச்சுட்டேன் .
ரெண்டுபேரும் சேர்ந்து தூண்டி கம்ப மேல தூக்குறோம்
அவ்ளோதான் ''டப்'' ன்னு நரம்போட அறுத்துகிட்டு
போச்சு! ச்சே எவ்ளோ கஷ்ட்டப்பட்டு கண்ணையன்
இழுத்துகிட்டு வந்தான் அத என்னன்னு கூட
பாக்க முடியலயேன்னு ரொம்ப வருத்தமா போச்சு!
(இதுநடந்து ஒரு 22,23 வருஷம் இருக்கும் இப்போகூட அந்த தூண்டில மாட்டுனத பார்க்கலையேன்னு சின்ன பீல் இருக்கு )
>
என் சினிமா பார்வை
அழைத்த குடுகுடுப்பையாருக்கு நன்றி
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
நான் பிறந்தது, மூணாவது வரை படிச்சது எல்லாம் அந்தமான்ல! அங்க எனக்கு நினைவு தெரிஞ்சு பார்த்த படம் வருவான் வடிவேலன் அந்த படம் பார்க்க நாங்க ஒரு ''போட்ல'' போனோம் ஒரு நாப்பது பேர் போகலாம் அந்த போட்ல. சின்ன கப்பல் போல இருக்கும்.நாங்க போன தியேட்டர் இருக்குற இடம் பேரு பம்பு பிளாட் படம் பார்த்து நினைவு இருக்கு, என்ன உணர்ந்தேன்னு தெரியல
ஏன் அப்படின்னா வரும்போது தூங்கிட்டேன்.
அப்புறம் நம்ம ஊருக்கு வந்து, எங்க ஊரு ஐயப்பா தியேட்டர்ல பார்த்த முதல் படம் கரை கடந்த ஒருத்தி '' ஓடத்துல தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு''
அப்படின்னு ஒரு பாட்டு வரும் அந்த படத்துல.
உணர்ந்தது அந்தமான்ல இருந்து வந்த புதுசு! அப்பா அம்மா கூட இல்லாம சொந்தகாரங்க யாரோ கூட்டிகிட்டு போனாங்க. பொம்பளைங்க கூட்டத்துகுள்ள
உக்காந்து பார்த்து. கூடவே சின்ன புள்ளைங்க அழுகை, சின்ன புள்ளைங்க சத்தம் அதிகமானா? திட்டு விழும் பாருங்க!!''ங்கொப்புறான ங்கொப்பன்தன்னான'' அழுவுற புள்ளைய கூட்டிகிட்டு எதுக்குடி படம்பாக்க வர்றீய! ஊட்டுலயே கெடக்க வேண்டியது தானே ? அதுக்கு புள்ளைய வைச்சு இருக்குறவங்க
திருப்பி சொல்லுறத இங்க சொல்ல முடியாது ! இதல்லாம் எனக்கு அப்போ
புதுசு!
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம் சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டர்ல ரொம்ப ஆர்வமா போனேன்.''சிங்கமணி''வந்து..
( எல்லோரும் ''தங்கமணின்னே'' சொல்லுறாங்க கொஞ்சம் வித்யாசமா சிங்கமணி!'' தங்கம்'' போல மனைவி இருக்குறவங்க தங்க மணின்னு சொல்லிகோங்க ''எம்பொண்டாட்டி சிங்கம் மாதிரி'' அதான் சிங்கமணி)
சிங்கமணி வந்து ஆறு வருசத்துல அஞ்சு படம்தான் ஒன்னா பார்த்து இருக்கோம்
படம் பார்க்க அதிகம் போறதுல்ல!நான் மட்டும் எப்போவாவது சிங்கமணிகிட்டசொல்லாம போவேன்.
அந்த மாதிரித்தான் தசாவதாரம் போனேன் கமல் ஏமாத்திட்டாரு!
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கன்னத்தில் முத்தமிட்டால் KTV ல போட்டாங்க ரொம்ப நாளைக்கு பிறகு மனசு கனத்து பார்த்த படம் .
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
சேரனின் பொற்காலம் பட்டுக்கோட்டை நீலா தியேட்டர்ல ஊருக்கு போனப்போ பாத்தது.
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
'' கேப்டன் விஜயகாந்த் விருதாசலத்தில நின்னு ஜெயிச்ச அந்த தில்லு''
'' நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் மக்கள் தன் மீது வைச்சு இருக்குற
அந்த பிரியத்த, பணமாக்கி கொள்ளுற வேதனை.''
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒன்னும் சொல்ல தோனல
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
உண்டு ,வாரமலர், வெள்ளிக்கிழமை சினிமா மலர் அவ்ளோதான்
7.தமிழ்ச்சினிமா இசை?
இளையராஜாதான்
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
உண்டு, சின்ன வயசுல அந்தமான்ல இருந்ததால ஹிந்தி நல்லா தெரியும் (அப்போ) அங்க நெறைய ஹிந்தி படம் பார்த்தது உண்டு .
நூரி அப்படின்னு ஒரு படம் பார்த்த நினைவு இருக்கு.
அப்புறம் இப்போ பிளஸ் டு முடிச்சுட்டு கோயமுத்தூர்ல நகை தொழில் கத்துக்க போய் இருந்தப்போ அங்க அர்ச்சனா வில சாஜன்,தீவானா எல்லாம் பார்த்து இருக்கேன் .
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
மருத நாயகம் படத்த, நான்தான் தயாரிக்க போறேன்னு சொன்னா
நம்பவாபோறீங்க
ஒரு தொடர்பும் கிடையாதுங்க!
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்னும் நிறைய அரசியல்வாதிகளை உருவாக்கும்
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நான் ஒன்னும் பெருசா கவலை படமாட்டேன். ஆனா, எல்லா தொலை காட்சியும் மக்கள் தொலைக்காட்சியுடன் போட்டிபோடும்
நீங்களும் சொல்லுங்க
யட்சன்
புழுதிக்காடு
ரம்யா
>
Subscribe to:
Posts (Atom)





